யார் குற்றம்
"அம்மா...." "தாயே".............
தனது வீட்டு வாசலில் இருந்து சத்தம் வந்ததை கண்ட சீதா
அடுப்பில் இருந்த குக்கரை ஆப் செய்து விட்டு வாசலுக்கு வந்தாள்.
வாசலில் சுமார் 80 வயது மதிக்க தக்க பெரியவர் மிகவும் களைத்து போய் நின்றிருந்தார்.
பார்க்கவே பரிதாபமாய் இருந்தது.
"அம்மா" ரொம்ப பசிக்குது, ஏதாவது இருந்தால் கொடு தாயே" என்று கெஞ்சலாக கேட்டார்.
தனது திருமண நாளான இன்று கணவனுக்கு பிடித்தமான உணவு வகைகளை செய்திருந்த அவளால்
கணவனுக்கு முன் அடுத்தவருக்கு கொடுக்க மனம் இல்லாமல்,
"ஒன்னும் இல்லை... அடுத்த வீட்ல போய் கேளுங்கள்" என்று சொல்லிவிட்டு வேகமாக வீட்டுக்குள் சென்று விட்டாள்.
பெரியவர் அடுத்து எங்கு சென்றார் என்பதையே மறந்து விட்டாள்.
மாலை 6.00 மணிக்கெல்லாம் வீட்டுக்கு வந்து விடுவதாக சொன்ன கணவன் ரவி, சொன்னதை போல் வராமல் போனதால் மனிகொருதரம் தொலைபேசி மூலம் கூப்பிட்டு கொண்டு இருந்தாள் சீதா.
இதோ வந்து விட்டேன், இதோ வந்து விட்டேன் என்று சொல்லி கொண்டிருந்தானே தவிர அவனால் குறித்த நேரத்தில் வர முடியவில்லை.
அன்று பார்த்து அலுவலகத்தில் முதலாளியோடு சரியான வேலை.
இரவு 12 மணிக்கு வீட்டுக்கு வந்தான் ரவி.
கோபமாக இருந்த சீதா, செய்து வைத்திருந்த சமையல் பொருட்களை எடுத்து வந்து
டேபிள் மேல் வைத்தால். அவளும் அது வரை எதுவும் சாப்பிடவில்லை. கணவனோடு சாப்பிட வேண்டும் என்ற ஆசை அவளை சாப்பிட விடவில்லை.
"சாரி டியர், நீ சாப்பிடு, நான் முதலாளியோடு சாப்பிட்டு வந்துட்டேன்" ரொம்ப களைப்பா இருக்கு" என்று சொல்லிகொண்டே பெட் ரூம் போனான் ரவி.
செய்து வைத்திருந்த அத்தனை உணவு பொருட்களும் அவளை பார்த்து கிண்டலாய் சிரிப்பது போல் இருந்தது அவளுக்கு.
எல்லாவற்றையும் எடுத்து கொண்டு போய் அடுப்படி இல் போட்டு விட்டு அழுது கொண்டே பெட் ரூம் சென்றால் சீதா.
மறுநாள் காலை, எப்போதும் போல் ரவி அலுவலகம் சென்று விட, சமையல் ரூமில் இருந்த உணவு அத்தனையும் வீணாகி இருக்க, எடுத்துகொண்டு குப்பை தொட்டி இல் போட வாசலுக்கு வந்தாள் சீதா.
தெருவின் ஓரத்தில் இருந்த ஒரு மரத்தின் கீழ் கும்பலாக நின்று கொண்டு வருவோர் போவோர் இடம் காசு வாங்கி கொண்டிருந்தார்கள்.
சீதா அவர்கள் அருகில் சென்று பார்க்க, ஒரு பாய் மீது பிணம் ஒன்றை கிடத்தி வைத்திருந்தார்கள்.
"அம்மா அநாதை பிணம் தாயீ, எடுத்து போடணும் கொஞ்சம் உதவி செயுங்கள் ..." என்று சீதாவிடம் கேட்க, பிணத்தின் முகத்தை பார்த்தவளுக்கு தூக்கி வாரி போட்டது. காரணம், அது வேறு யாரும் இல்லை, முதல் நாள் இரவு சீதாவிடம் சாப்பிட கேட்ட பெரியவர்தான் அது.
வீட்டில் அவ்வளவு உணவு இருந்தும், இல்லை என்று சொல்லி அவரை அனுப்பியதும், பிறகு அந்த உணவு யாருக்கும் பயன் படாமல் குப்பைக்கு சென்றதும் அவள் முன் வர, கண்களில் இருந்து கண்ணீர் வந்ததை யாருக்கும் தெரியாமல் துடைத்து கொண்டு கைகளில் வைத்திருந்த 100 ரூபாய் நோட்டை அவர்களிடம் கொடுக்க, ஆச்சிரயமாய் அவளை பார்த்த அவர்கள்.
"அம்மா... மகராசியா இருக்கணும் நீங்க" என்று வாழ்த்தினாலும்,
சீதாவின் மனதில் அந்த பெரியவரின் மரணத்திற்கு தான்தான் காரணமோ என்ற குற்ற உணர்வு பெரிதும் இருந்து.

