ஆசிரியப்பா பற்றிய சில குறிப்புகள்
ஆசிரியப்பாவில் ஆசிரிய உரிச்சீர் எனப்படும் ஈரசைச் சீர்கள் மிகுந்துவரும்.
பிறசீர்களும் கலந்து வரும்.
ஆசிரியப்பாவுக்குச் சிறப்பாக உரிய நேரொன்றாசிரியத் தளை (மா முன் நேர்), நிரையொன்றாசிரியத் தளை (விள முன் நிரை) மிகுந்து வரும்.
பிற தளைகளும் கலந்து வரும்.
ஆசிரியப் பாவிற்குரிய தளை ஆசிரியத்தளை. இது இரண்டே அசைகளைக் கொண்டது.
மூன்றசைகளைக் கொண்ட சீர் ஆசிரியப்பாவில் வருவதில்லை.
மூன்றசைகளைக் கொண்ட சீர் வருமாயின் அவை குற்றியலுகர, குற்றியலிகரச் சீர்களாகவே அமைந்திருக்கும் என்பது பொது விதி.
ஆசிரியப்பாவில் கனிச்சீர் ஒழிய ஏனைய எட்டுச்சீர்களும் வரும்.
அவையாவன: தேமா, புளிமா, கருவிளம், கூவிளம், தேமாங்காய், புளிமாங்காய், கருவிளங்காய், கூவிளங்காய்.
இருவகை வஞ்சித்தளைகள் அல்லாத ஏனைய ஐந்து தளைகளும் வரும்.
(1. கனி முன் நிரை - ஒன்றிய வஞ்சித் தளை, 2. கனி முன் நேர் - ஒன்றாத வஞ்சித்தளை)
அவையாவன:
1. மாமுன் + நிரை = இயற்சீர் வெண்டளை
விளமுன் + நேர் = இயற்சீர் வெண்டளை
2. மாமுன் + நேர் = நேரொன்றாசிரியத்தளை
3. விளமுன் + நிரை = நிரையொன்றாசிரியத்தளை
4. காய்முன் + நேர் = வெண்சீர் வெண்டளை
5. காய்முன் + நிரை = கலித்தளை: உதாரணம் - கவிமழையில் நனைந்தேன்
உம்மைச் சரணாய் உடையவர் மகிழ்வர் என்ற தலைப்பில் (02.02.12) கவிஞர் திரு காளியப்பன் எசேக்கியல் அவர்கள் பதிவு செய்த அருமையான கருத்தமைந்த எம்மதத்திற்கும் பொருத்தமான நிலைமண்டில ஆசிரியப்பாவைக் கீழே தருகிறேன். காய்ச்சீரே வரவில்லை.
உம்மைச் சரணாய் உடையவர் மகிழ்வர்
உண்மையும் நேர்மையும் உள்ள கடவுளே!
ஒளிக்கா தெமக்கே உதவிட வாரும்.
கண்மறைக் காது காத்திட வாரும்!
காலையில் உமது கருணையைக் கேட்பேன்!
காத்த பொறுமை கைவிட் டெழுமே!
வேலையில் துரும்பாம் வேதனை தீரும்!
விடியலில் உமக்காய் வேண்டினேன் வாரும்!
சூழ்ச்சிக் காரர் வீழ்ச்சி யடையவும்
சூதுகள் செய்வோர் வேதனைப் படவும்
காட்சிக் கொதுக்கிக் கடிந்தவர் வெறுப்பீர்!
ஆட்சிக் குள்ளே அவரை மறுப்பீர்!
கோணல் மனத்தர், குறளை சொல்வோர்
கொடுஞ்செயல் செய்வோர் கொலைபுரி கின்றோர்
ஆணவக் காரர் அசுத்த நாவினர்
அனைவரும் எம்மை அண்டாது அழிப்பீர்!
அஞ்சி உமதடி அனுதினம் பாடும்
அன்பர் எமக்கே அருளிட வாரும்!
கெஞ்சி அழைப்பேன் கேடுகள் நீக்கும்!
கீழ்ப்படி கின்றேன் கேடகம் தாரும்!
செம்மை வழியாம் உம்வழி நடத்தும்!
சீடருக்கு உம்மருள் வீடது கூட்டும்!
உம்மைச் சரணாய் உடையவர் மகிழ்வர்!
உள்ளம் களிப்பர் உன்னில் நிலைப்பரே! - கவிஞர் காளியப்பன் எசேக்கியல்
இது ஆசிரியப்பா இனமாகும்! குறைந்தது மூன்று அடிகள்; நிறைந்தது கவிஞனது மனத்தளவு என்று சான்றோர் கூறுவர். எல்லா அடிகளும் நான்கு நான்கு சீர்களாகவே அமைந்து அளவொத்துள்ளதால் இது நிலைமண்டில ஆசிரியப்பா என்று சான்றோர் கூறுவர் என்கிறார் கவிஞர் காளியப்பன் எசேக்கியல்.