எட்டு கோப்பைகளில் கவியமுதம்

இனிய நண்பர் கவிஞர் இரா இரவி அவர்களின் 14-வது நூல் வானதி பதிப்பகம் வெளியிட்டு பலரது பாராட்டைப் பெற்றிருக்கும் 'கவியமுதம்'.

நூலினுள், ‘நம்பிக்கைச் சிறகுகள்’, ‘உணர்ச்சி ஊர்வலம்’ என எட்டு கோப்பைகளில் பரிமாறி இருக்கிறார் இந்தக் கவியமுதத்தை.

‘ஒவ்வொரு வினாடியும் ஒவ்வொரு வைரம்’ என்று ‘பொழுதைத் திட்டமிடு’ எனச் சொல்லும் கவிஞர் ‘வரலாறு படைத்திடு’ என்று அதே பக்கத்தில் அறிவுறுத்துகிறார். விநாடிகளை வைரங்களாக பார்க்கத் தெரிந்தவராலேயே வரலாறு படைத்திட முடியுமன்றோ!

தமிழுக்கென்று ஒரு பகுதியை ஒதுக்கி பல கவிகள் செய்திருக்கிறார் இவர். அதில் முக்கியமானது 'உலகின் முதல் மொழி உருக்குலையலாமா?’ என்ற கேள்விக்கவி.

‘தமிங்கலம் பேசுவதை உடன் நிறுத்திடுவோம்!’ என்று தமிழ்க்கடலில் திமிங்கல வேட்டை நடத்துகிறார்.

பகுத்தறிவுச் சிந்தனையை தவறாமல் தொடர்ந்து முன்னிறுத்தி வருபவர் கவிஞர் இரவி அவர்கள். தமிழர்கள் வாழ்வில் உடனடித்தேவை பகுத்தறிவே என்று முழங்கி 'எதையும் ஏன்? எதற்கு? எப்படி? எங்கு? எதனால்? எனக் கேட்டுப் பழகு’ என்கிறார். ‘எல்லாமறிந்த புத்தர், ஏதுமறியாத புது சிசு - இவர்கள் இருவர் தவிர மற்ற அத்தனை பேருக்கும் கேள்விகள் தோன்றவே செய்யும்’ என்ற பொன்மொழியை நினைவுபடுத்துகிறார்.

இன்றைய தேசச் சூழல்களையும் தனது கவிதைகளில் வைத்திருக்கிறார் இந்நூலில்.

திருவள்ளுவரைப் பற்றி திருக்குறளைப் பற்றி பேசும் இவர், திருக்குறளை தேசிய நூலாக்கும் முயற்சிகள் அதிகரித்து வரும் இவ்வேளையில் அதையே கோரிக்கையாக வைத்தும் ஒரு கவிதை செய்திருக்கிறார்.
அதைப்போல வேட்டிக்குத் தடை என்ற செய்தியை வரிந்து கட்டிக்கொண்டு இப்படி விளாசுகிறார் ‘தமிழ்நாட்டில் தமிழர் உடைக்குத் தடையா?’ என்ற கவிதையில்;

‘தமிழர்களின் பண்பாட்டுச் சின்னம் எங்கள் வேட்டி!
தடை செய்வதற்கு நீங்கள் யாரடா வெட்டி?’

பெரியார், காமராசர், கவியசு கண்ணதாசன்,கவிஞர் வாலி என இவரது நெஞ்சம் கவர்ந்தவர்கள் பலரை நெஞ்சினிக்க தமிழால் அலங்கரிக்கிறார். அதில் என்னைக் கவர்ந்தவை ‘நெல்சன் மண்டேலா’ மற்றும் ‘தில்லையாடி வள்ளியம்மை’ பற்றிய கவிதைகள் தாம்.

‘கருப்பு இருளன்று ஒளியென்று உணர்த்தியவரே' என்று முன்னவரை போற்றுகிறவர், பின்னவரின் வாழ்வு மொத்தத்தையும் தனது கவிதையில் எழுதி நம் மனதில் ஒரு பெருமித மழையை பொழியச் செய்து போகிறார். வள்ளியம்மை பற்றிய கவிதையை இந்தத் தொகுதியின் சிறந்த கவிதை என்று சொல்லி விடலாம்.

அதுமட்டுமல்ல இவர்களை எல்லாம் புதிய தலைமுறைகளின் தலைகளுக்குள் பதிவிறக்கம் செய்ததற்கே கவிஞர் பாராட்டுக்குரியவர் ஆகிறார்!

உன் புகைப்படத்தை
அஞ்சலில் அனுப்ப வேண்டாம்
... பதிக்கும் முத்திரைகள்
உனக்கு வலிக்கா விட்டாலும்
எனக்கு வலிக்கும்

கனமான கவிதைகளுக்கு நடுவே காதல் மணமும் தான் கமழ்கிறது!

சாதிவெறி, உழைப்பாளர் பெருமை, புகையிலை கொடுமை என்று பல சமூகப் பதிவுகளையும் இவரது கவிதைகளில் பார்க்க முடிகிறது.

நூல் முழுதும் பொருத்தமான படங்கள் கவிதைகளுக்கு உற்ற தோழிகளாக வலம் வருகின்றன. முனைவர் இரா மோகன் அவர்களும், முதுமுனைவர் இறைஅன்பு அவர்களும் நூலுக்கு நல்ல அணிந்துரைகள் கொடுத்திருக்கிறார்கள்.

நிறைவான இந்தக் கவிதைகளைப் படைத்த கவிஞரைப் பற்றி ஒரு சுவாரசிய செய்தி - அவரே சமீபத்தில் முகநூலில் பதிவிட்டது.

இவரது மகனது பாடப் புத்தகத்தில் இவர் எழுதிய 10 ஹைகூக்கள் மனப்பாடப் பகுதியாக - மகனின் பெருமையாக, தந்தையின் மகிழ்வாக – அமைந்திருந்ததாம். இது உழைப்பின் புன்னகை. மதிப்பெண் இருந்தும் கல்லூரி செல்ல இயலாத சூழல். அங்கிருந்து கிளம்பி இப்படி விரிந்திருக்கிறார் இந்த விருட்சம் என அறியும் போது நமது மனங்கள் கரங்கள் இல்லாமலே கரவொலி செய்கின்றன. இதுவும் இவரது கவிதைகளில் ஒன்று என்றே கருதுகிறேன். இப்படி, புத்தகப் பக்கம் தாண்டி வாழ்கையின் பக்கங்களிலும் கவிதை எழுதுபவர்களே நல்ல கவிஞர்கள்.

இவரது கவிப்பணி வெண்பனிப் போல குளிர்ச்சியாய், மகிழ்ச்சியாய் மேலும் தொடர வாழ்த்துக்கள்.

மொத்தத்தில் கவியமுதம் எட்டு கோப்பைகளில் பல்சுவை அமுதம்!

விமர்சனம் - கவிஞர் புதுயுகன்

எழுதியவர் : புதுயுகன் (9-Mar-15, 5:22 am)
சேர்த்தது : pudhuyugan
பார்வை : 173

சிறந்த கட்டுரைகள்

மேலே