மழைக்கால சாயங்காலம்

அது ஒரு
மழைக்கால சாயங்காலம்
நான்கு மணி

பள்ளிவிட்டதும் பையோடு
பட்டாம்பூச்சிகளாய்
பறக்க துடித்த எங்களை
நிறுத்தி வைத்தது
சட்டென்று பெய்த
பெரு மழை!

வகுப்பறை ஓரமாய்
நின்றபடி நாங்கள்
கொஞ்ச நேரம்
காகிதங்களை கப்பலாக்கினோம்
கொஞ்ச நேரம்
கதைகள் பேசினோம்
கொஞ்சம் விரல்கள்
நீட்டினோம் மழைச்சாரலில்
கொஞ்சம் மழை
தணிய காத்திருந்தபடி

சல்லென்று பெய்த
மழை இப்போது
சில்லென்று சாரலாய்
மாறி இருந்தது

இனி போகலாம்
என்று பொறுமையிழந்து
என்னிடம் சொன்னது
என் பக்கத்துவீட்டு தோழியும்
என் அம்மாவைத்த குடையும்

மெல்ல நடக்க
ஆரம்பித்தோம் நாங்கள்
கொஞ்சம் குடைக்குள்ளும்
கொஞ்சம் மழைக்குள்ளும்

சாரலில் நனையும்
சுகத்திற்காக வேண்டுமென்றே
மறந்து போனோம்
மழையில் நனையாதே
என்று அம்மா சொன்னதை

சடசடவென சகதியில்
நடந்த கால்களும்
படபடவென பேசி
மூடாத வாயுமாய்
வந்து சேர்ந்தேன்
வீட்டினுள்ளே

பிள்ளை நனைந்தே
வருமென துண்டோடே
காத்திருந்த அம்மா
கடிந்தபடியே துடைக்க
ஆரம்பித்தாள் கொஞ்சம்
பாசத்தையும் கொட்டியபடி

குளிருக்கு இதமாய்
சூடான காப்பியும்
சின்ன முறுக்கும்
அம்மாவின் அன்புமாய்
அழகாய் தொடர்கிறது
மழைக்கால சாயங்காலம்

ம்ம் அதுபோல
இதுவும் ஒரு
மழைக்கால சாயங்காலம்
நான்கு மணி

மழை கொண்டு வந்த
அம்மாவின் நினைவை
கொஞ்சம் ஒதுக்கிவிட்டு
காய்த்த பாலை மூடிவிட்டு
ஜன்னலை எட்டி பார்த்தபடி
மழையோடு கரைந்த மனசோடு
இன்று நான் காத்திருக்கிறேன்
என் பிள்ளைக்காக!

எழுதியவர் : yazhini வ (12-Mar-15, 2:13 am)
பார்வை : 151

மேலே