கனவே கலைந்து போ பாகம்-5 துப்பறியும் திகில் தொடர்
முன் கதைச் சுருக்கம்
பிரசாத் நந்தினியின் வீட்டில் தங்கியிருந்த சமயம் சில விபரீத அனுபவங்கள் ஏற்பட்டன.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இரண்டு நாள் கழித்து எதேச்சையாக நந்தினியை வழியில் சந்தித்தான் பிரசாத்.
“கைல பத்து ரூபா வச்சிட்டு லக்கிருந்தா ஸ்டார் ஹோட்டல்ல பஃபே லஞ்ச் சாப்பிடலாம், வர்றீங்களா? ” அழைத்தாள் நந்தினி.
சாப்பாடு என்றவுடன் பிரசாத் உடனே கிளம்பினான்.
ஹோட்டல் சித்ரலயா. புதிய ஹோட்டல்...
சின்ன கௌண்ட்டரில் பத்து ரூபாய் கொடுத்து டூப்ளிகேட் பத்து ரூபாய் வாங்கினாள் நந்தினி.
பிரசாத்துடன் உள்ளே...., உள்ளே போனாள்.
காஸினோ எனப்படும் சூதாட்ட விடுதி தென்பட்டது. ஏழெட்டு கம்யூட்டர்கள் வரிசை கட்டி நின்றன. எல்லாவற்றிலும் ஆட்கள்! பெரும்பாலானோர் தலையை பிய்த்துக் கொண்டிருந்தனர். கொண்டு வந்த ஆயிரம் ரூபாயை கோட்டை விட்டு விட்டதாக புலம்பிக் கொண்டிருந்தார் ஒருவர்!
நந்தினி அலட்டிக் கொள்ளாமல் ஒரு கம்யூட்டர் முன் உட்கார்ந்தாள். கம்யூட்டரோடு சூதாட வேண்டுமோ?
என்ன விளையாட்டு ஏது என்று பிரசாத்துக்கு புரிவதற்கு முன் கடகடவென்று விளையாட ஆரம்பித்தாள் நந்தினி.
முக்கால் மணி நேரம் சென்றிருக்கும்...
ஹையா என்றபடி எழுந்தாள். நிறைய பேர் அவளைப் பொறாமையுடன் பார்த்தனர். அவள் கையில் டூப்ளிகேட் கரன்சி அறுநூற்று தொண்ணூறு ரூபாய் இருந்தது!
“இதுக்கு மேல பேராசைப்பட வேணாம், வாங்க பிரசாத்!”
டூப்ளிகேட் கரன்சியோடு கைப்பையிலிருந்து முப்பது ரூபாய் கொடுத்து கௌண்ட்டரில் இரண்டு லஞ்ச் டோக்கன் வாங்கினாள்.
நந்தினியின் புத்திக்கூர்மை அப்பப்பா !! இந்த மாதிரி விஷயமெல்லாம் நந்தினி எப்படித்தான் தெரிந்து கொள்கிறாள்?
"என்னங்க இது?” என்றான் பிரமிப்பு அகலாமல் நான்காவது முறையாக டேபிளை சுற்றி வந்த பிரசாத்..! எதைச் சாப்பிடுவது? எதை விடுவது?
நந்தினி நாசுக்காக சாப்பிட்டாள். பிரசாத் ஒரு வாரம் பட்டினி கிடந்தவனைப் போல, கம்மங் கொல்லையில் ஏதோ பாய்ந்ததைப் போல வெட்டினான். அவன் வாயில் பதார்த்தம் கூழாவதைப் பார்த்து சிரித்தாள் நந்தினி.
“ரொம்ப தேங்க்ஸ்ங்க! தப்பா எடுத்துக்காதீங்க.. ஒரு வேளை நல்ல சாப்பாடு, ஒரு ராத்திரி நல்ல தூக்கம்- வாழ்க்கைல இதைத் தவிர வேற எதுவுமே வேணாங்கிற நிலைமைல தாங்க நானிருக்கேன்.... ”
நந்தினி ஆமோதிப்பாகத் தலையசைத்தாள். “எனக்குப் புரியும் பிரசாத். நானும் அனாமத்தா ஹாஸ்டல் பறவையா இருந்தவ தான்..! ”
பிரசாத்துக்கு மண்ணடித் தெரு முட்டுச் சந்தில் ஒரு மான்சனில் ஜாகை. மூன்று பேர் இருக்க வேண்டிய இடத்தில் ஏழு பேர்! அத்தனை பேருமே வறுமையின் நிறம் சிகப்பு பசங்கள். ஏழு பேர் ஏழு டூத் பிரஷ் வைத்துக் கொள்வதே ஆடம்பரமாக கருதப்படும் அவர்கள் உலகில் ஜட்டி முதல் அத்தனையும் பொதுவுடைமைதான். எல்லா விதமான அட்ஜஸ்ட்மெண்டும் அங்கே இருக்கும். பிரசாத்தின் கைபேசியில் காட்சித்திரை போய் ஒரு மாதமாகிறது. மக்கள் லாண்ட் லைனில் ஃபோன் பண்ணி பிழைப்பு நடத்தவில்லையா என்ன? அவன் நண்பனின் கைபேசிக்கு ஸ்பீக்கர் அவுட். இவன் பேசினால் எதிராளி குறுஞ்செய்தி அனுப்புவான். ஒருவர் படுக்கப் போதுமான கட்டிலில் இரண்டு பேர் படுப்பார்கள். இவர்கள் மேல் போர்வை போர்த்தி அதில் மூன்றாமவன் கூச்ச நாச்சமில்லாமல் படுத்துப் புரள்வான்....
ஒவ்வொருவருக்கும் சில பல பெரிய மனிதர்கள் பரிச்சயமுண்டு. அதனால் பணமில்லாமல் பணம், காரில்லாமல் கார், அதிகாரமில்லாமல் அதிகாரம் என்று அமர்க்களம் பண்ணுவார்கள். அவர்களுடைய தூண்டுதல், துணை, சுகம், துக்கம் எல்லாமே நட்பு; நட்பு; நட்பு மட்டுமே!
பிரசாத் கடந்த எட்டு நாட்களாக நந்தினி வீட்டுப் பக்கம்தான் சுற்றிக் கொண்டிருந்தான்- டாக்டர் மேகலா கொடுத்த மாத்திரையை தவறாமல் போட்டுக் கொண்டு..! அதில் ஒரு அமாவாசையும் வந்து போனது.
பத்திரிக்கைக்காரன் என்ற வசதி கண்ட இடங்களில் சுற்றித் திரிய தோதாக இருந்தது.
ஆவி விவகாரம் என்றால் இத்தனை நாட்களில் இன்னொரு தரம் வராமலா போகும்?
அன்று கண்டது தன் மனப்பிரமை என்ற முடிவுக்குத்தான் வந்தான்.... இருந்தும் சந்தேகம் தீரவில்லையே?
முழுசாய் இருபத்து நான்கு நிமிடம் காமெரா பதிவுகளைக் காணோம்; யாரும் கவலைப்பட மாட்டார்களோ? காமெரா பதிவுகளை நீக்கியிருந்தால் யார் நீக்கியிருப்பார்கள்? ஏன்? நந்தினியா? நந்தினி ரிசப்ஷனிஸ்ட் தானே? டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் இல்லையே?
வெண்ணிற உருவம் சொன்னது போலவே நந்தினி மயிரிழையில் உயிர் தப்பியிருக்கிறாள். அது தற்செயலாக நடந்த சம்பவமோ?
நந்தினி மிகவும் பிஸியாக இருந்தாள். ஓரிரவு வெள்ளிக்கிழமை வீட்டிலிருந்தாள். வெள்ளிக்கிழமைதான் அவளுக்கு அலுவலக விடுமுறை. இரவு நேரமாகையால் ஓரிரு வார்த்தைகள் பேசி விட்டு கடற்கரைப் பக்கம் சுற்றப் போனான்.
குறிப்பிடத் தக்க சம்பவம் ஒன்றுமில்லை.
அன்றொரு நாள் கடற்கரைப் பக்கம் அலைந்த போது புத்தம் புதிய தீப்பெட்டி கீழே விழுந்து கிடந்தது. உள்ளே தீக்குச்சிகள் ஒன்று கூட இல்லை. ஆளில்லாத கடற்கரையில் அது வித்தியாசமாகப் பட்டது!
இன்று அதே போல் கடற்கரைப் பக்கம் அதே இடத்தில் புத்தம் புதிய தீப்பெட்டி!- நிறைய தீக்குச்சிகளுடன்.
தீப்பெட்டியை எடுத்து ஆராய்ந்தான். பெட்டியின் உட்பக்கத்தை வெளிப் பக்கமாக்கினான். டார்ச் அடித்தான்; ஏதோ எழுதியிருக்கிறதே?
ஒட்டியிருந்த பேப்பரில் "பழுப்பு மீன்கள்" என்று எழுதி ஏதோ தேதியும் நேரமும் குறித்திருந்தது!
பாழ்பட்டுப் போன கடற்கரை.....! எந்த மீனவனுக்கான சேதி இது?
பிரசாத் முகவாயைத் தடவினான். பழுப்பு மீன்கள் என்றால் பிரசாத் மடையா, பிரவுன் சுகர்டா! போதைப் பொருள்...!
யாருக்கு சேதி அனுப்பப் பட்டதோ அவனுக்கு இன்னும் விஷயம் சேரவில்லை! விஷயம் சேர்ந்திருந்தால் தீக்குச்சிகள் நீக்கப்பட்டிருக்கும்!
அந்த பழைய தீப்பெட்டி இன்னும் பாக்கெட்டில்தான் இருந்தது. புதிய தீப்பெட்டியை உருவி விட்டு பழையதை வைத்தான். இப்போதைக்கு இங்கிருப்பது நல்லதில்லை. நாளை துணையுடன் வரலாம்!
துணை கண்காணிப்பாளர் முரளியின் எதிரில் அமர்ந்திருந்தான் பிரசாத்.
“ சார், நீங்க அம்பத்தூர் போலிஸ் ஸ்டேஷன்ல இன்ஸ்பெக்டரா இருந்தபோது பைக் காணாப் போச்சுன்னு புகார் கொடுத்தேன். இப்ப போதைப் பொருள் தடுப்பு அதிகாரியா ஆகிட்டீங்க. இன்னும் பைக் கிடைக்கலேங்கிறாங்க சார்.. ”- பிரசாத் ஆரம்பித்தான்.
பிரசாத்துக்கு சொந்தமாக பைக் இருந்தால் தானே காணாமல் போகும்? ஆனாலும் அவர்கள் பேச்சு இப்படித்தான் ஆரம்பிக்கும்! பைக்கை விசாரிப்பது போல போதைப் பொருள் கடத்தல் பற்றி சொல்லி விடுவான்!
“சார், பட்டினப்பாக்கத்திலிருந்து உள்ளே தள்ளி ...கன்னிகாபுரம்.. பமுப்பு கலர் பைக். ஜூன் இருபத்தோராம் தேதி ராத்திரி ஒரு மணிக்கு காணாப் போகப் போகுது. அதையாவது கண்டு பிடிக்க சொல்லுங்க சார். ”
“எது? சுடுகாட்டு ஏரியாவா? ”
“இல்ல சார், சுடுகாடு வேற ரூட்டு. இது கடற்கரையை ஒட்டி... ”
“நீங்க சொல்றது ரெகுலர் சுடுகாடு. நான் சொல்றது, அங்கதான் சுனாமி வந்து செத்த இருநூத்தி ஐம்பது பேரை பெரிய குழியா வெட்டிப் புதைச்சாங்க. நாலு லாரி நிறைய பூவையும் போட்டாங்க... இருநூத்தி ஐம்பது சடலங்களை ஒண்ணாப் பார்த்த லாரி டிரைவர் பைத்தியம் பிடிச்சு பிற்பாடு தெளிஞ்சான்... அங்க அடிக்கடி பைக் காணாமப் போகுது. எங்க போகுது, எப்படி போகுது ? தெரியல. பெரிய தலைகள் யாரு? சிலர் மேல சந்தேகமிருக்கு... ஆதாரமில்லே. ”
“யாரந்த பெரிய தலைகள்? ”
“ஒருத்தர் மீன் வளத்துறை மினிஸ்டர், இன்னொருத்தர் தொழிலதிபர் முருகேசன்...! ”
தொ.... தொழிலதிபர் முருகேசனா?
பிரசாத் எச்சில் விழுங்கினான்.
தொடரும்