அயல் கிரக வாசி

கடைசியில் தாணப்ப வாத்தியார் சொன்னதுதான் நடந்தது ...

அடிக்கடி ஆகாயத்தையே பார்த்க்கொண்டிருப்பார் .பகல் பொழுதில் கூட நட்சத்திரங்களைப் பார்த்து பேர் சொல்லக்கூடிய அளவுக்கு அவருடைய பார்வை அவ்வளவு தெளிவாக இருக்கும் ...சொந்தஊரிலயே வாத்தியார் உத்தியோகம் நான்கு மணிக்கு பள்ளிக்கூடம் முடிந்து வந்ததும் சட்டையை கழற்றிப் போட்டுக்கிட்டு ஒரு டவல் துண்டும் தொழில் மாட்டிக்கொண்டு வெட்டி சகிதமாகத்தான் எல்லா இடமும் சுற்றுவார் . வடக்கு பஸ்ஸ்டாண்டு தெற்கு பஸ்ஸ்டாண்டு ஆற்றங்கரை குளத்தங்கரை ஆக எல்லா இடத்திலும் அவரைக் காணலாம் .எப்ப பார்த்தாலும் அவர் கூடவே 2 அல்லது 3 பேர் இருந்துகிட்டே இருப்பாங்க .தேர்தல் நேரங்களில் வோட்டுபதிவுக்கு ஒரு மாதத்துக்கு முன்னாடியே யார் ஜெயிப்பாங்க என்று அவர் சொல்றாரோ அது கண்டிப்பா நடக்கும் …சிலநேரத்தில அவர் சொல்ற கட்சிக்கு நாட்டு நடப்புல ஜெயிக்காது என்று பரவலாக பேச்சு இருந்தாலும் அவர் மட்டும் அவங்கதான் ஜெயிப்பாங்க என்று பந்தயம் கட்டி அதில் ஜெயிச்ச நாட்களும் நிறைய உண்டு .அது மாநில நிலவரமாய் இருந்தாலும் மத்தியில நிலவரமாய் இருந்தாலும் ..அவர் கணக்கு தப்பியதே இல்லை .கூட இருக்கிறவர்களுக்கு ஒரே ஆச்சரியமாக இருக்கும்.இத்தனைக்கும் அவர் ஒன்றும் ஜோதிடரும் கிடையாது...படிப்பும் பெரிய படிப்பொன்றும் இல்லை... எல்லாம் அனுபவ அறிவும் அவருக்குள்ளே இருக்கிற ஆராய்ச்சி தொலைநோக்கு பார்வையும்தான் அவரை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டியது.

அடிக்கடி சொல்லுவார் கடவுள் கடவுள் என்று சொல்லுவதல்லாம் உண்மைதான் ..அவங்க வேறு யாருமில்லை .வேற்று கிரக வாசிகள்தான் . ....ஒரு நாள் இல்லை என்றாலும் ஒரு நாள் மனுஷன் அவங்களைக் ச்கண்டுபிடிப்பான் ...கடவுளுக்கான கேள்விக்கெல்லாம் அன்றைக்கு முடிவு கிடைக்கும் ...அவரு இதை சொல்லும்போதெல்லாம் அவர் நண்பர்கள் அவரைப் பார்த்து சிரிப்பார்கள் .

வாத்தியாரே நீங்க என்ன வேணுமின்னாலும் சொல்லுங்க ..கடவுள்தான் வேற்றுகிரக வாசி ...அப்படி எல்லாம் சொல்லாதீங்க ....சிரிப்பா வருது ...என்று மறுதலிப்பார்கள் .

ஆனால் போனவாரம் வெளிவந்த செய்தி அவர் சொன்னதை உண்மையாகி விட்டது.

சர்வதேச ஆகாய ஆராய்ச்சி கப்பலில் விஞ்ஞானிகள் அவர்கள் இருந்த கப்பலின் அருகே கடவுள் என்று சொல்லிக் கொண்டவர்கள் அவர்களோடு பேசிக் கொண்ட செய்தியும் புகைப்படமும் உலகத்தின் போக்கையையே மாற்றிப் போட்டுவிட்டது.


டிவி ரேடியோ செல் போன் வலைதளங்கள் எல்லா இடத்திலும் ஒரே செய்திதான் ஓடிக்கொண்டிருந்தது ....

ஆகாயத்தில உலகநாடுகள் அமைத்துள்ள சர்வதேச விண்வெளி நிலையம் ஆராய்ச்சி செய்து வருகிற விஞ்ஞானிகள் நேற்று வழக்கம் போல தொலை நோக்கியில் பார்த்துகிட்டு இருக்கும் போது நம்ம மனுசாள் மாதிரி 3 பேர் பறந்து வந்திருக்காங்க …தலையில கிரீடம் ..கையில அம்பு ......எல்லாம் வைத்திருந்தார்கள் ....ஒருவர் நீண்ட அங்கி உடுத்திருந்தார் அது வெள்ளை நிறத்தில் இருந்தது ...இன்னொருவர் உருவமாகத் தெரியவில்லை ..ஒருமாதிரி இருந்தார் ...ஒருவர் ஆணென்றும் பெண்ணென்றும் கணிக்க முடியாத தோற்றத்தில் இருந்தார் அதைப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே அவர்கள் அருகில் வந்தார்கள் . நிலையத்தில் ஒரு ரசியரும் ஒரு இந்தியரும் 2 அமெரிக்கர்களும் ஜெர்மனியைச் சேர்ந்த பெண்கள் இருவருமாக இருந்தார்கள் …அவர்கள் இவர்களை நெருங்கியதும் சந்தோசத்தில் சிரித்தார்கள் …இருகை எடுத்து கும்பிட்டார்கள் கண்மூடி தியானித்தார்கள் ,நம்மாள்களுக்கு ஒன்றும் புரியவில்லை ,பயமாகவும் இருந்தது..

-நீங்கள் யார் எங்கிருந்து வருகிறீர்கள் -

-நாங்கள் தொலைதூர கிரக வாசிகள், நீங்கள் மனிதர்கள்தானே-

-ஆமாம்-

-நீங்கள்-

-நாங்கள் கடவுள்கள்-

-என்ன கடவுள்களா-

-ஆமாம்-

-உங்கள் கிரகம் எங்குள்ளது -

.உடனே அவர்களில் ஒருவர் உள்ளங்கையில் ஒரு கணக்கு போட்டார் .-இங்கிருந்து 25 ஒளியாண்டுகள் தூரத்தில் உள்ளது -

விஞ்ஞானிகளுக்கு ஒரே ஆச்சரியம் ….

-உங்களை சந்தித்ததில் எங்களுக்கு மகா பாக்கியம்-

-நாங்கள்தான் பாக்கிய சாலிகள் , நீங்கள் எங்கள் வணக்கத்துக்கு உரியவர்கள் , உங்களை எங்கள் கிரகத்தில் அற்புத சக்தியாக வழிபடுகிறோம் -

-எங்களுக்குள்ளும் இருபிரிவினர்கள் உண்டு - மனிதர்களாகிய உங்களை வழிபடுபவர்களும் ….அதை எதிர்ப்பவர்களும் -

-நீங்கள் கடவுள் என்று சொல்கிறீர்களே அதற்கென்ன ஆதாரம் -

-நீங்கள் மனிதர் என்று சொல்கிறீர்களே அதற்கென்ன ஆதாரம் -

-நாங்கள் பூமியில் வசிக்கிறோம் - எங்களை எல்லோரும் எங்களுக்குள்ளே மனிதன் என்று அழைத்துக் கொள்வோம் .-கடவுள் கள் எங்களைக் காப்பாற்றும் வல்லமை உடையவர்கள் நாங்கள் அவர்களை பூஜித்து வருகிறோம் -..

-அது நீங்களாகவே ஏற்படுத்திக் கொண்ட அதி தீவிர நம்பிக்கை - நாங்களும் சாதாரணமானவர்கள்.உங்களைப்போல் ஒரு கிரகத்தில் வாழ்கிறோம் ..மேலும் கேட்கிறோம் உங்கள் பூமியில் ஏதேனும் இழப்புகள் ஏற்பட்டிருக்கிறதா-

-இது என்ன கேள்வி அடிக்கடி நடக்கும் - -பூகம்பம் ....நில நடுக்கம் ...எரிமலை சீற்றம் .....கடல்நீர் கொந்தளித்து நாட்டுக்குள் நுழைதல் ...மழை பொழிந்து வெள்ளத்தில் இழப்புகள் கோயில்களில் நெருக்கடியில் சிக்கி மரணம்,பள்ளி குழந்தைகள் தீயில் சிக்குண்டு வதை ஏற்படுதல் இப்படி அடிக்கடி நடக்கும்-

-சரி இவைகள் நடக்கும் போதெல்லாம் நீங்கள் உங்களைக் காப்பாற்ற எங்களை அழைத்திருப்பீர்கள் இல்லையா -

-ஆமாம் -

எங்கயாவது நாங்கள் வந்து காப்பாற்றி இருக்கிறோமா ...இல்லையே .

ஏனென்றால் நீங்கள் அழைப்பது எங்களுக்கு கேட்காது எங்களைக் காப்பாற்றவே உங்களை வணங்குகிறோம்.-

-ஆனால் நீங்கள்தானே இந்த பிரபஞ்சங்களைப் படைத்தவர்கள் -

-அட மனுஷனே -( மனிதர்கள் அட கடவுளே என்று சொல்வது போல).

இப்படியாக அந்த உரையாடல் இருந்தது .அதற்கப்புறம் அவர்கள் மறைந்து போனார்கள் …

-நம்ம அவங்களா சாமியா கும்பிடுறோம் அவங்க நம்மள கும்பிடுறாங்க .......இது கதிரேசன்

-கடவுள் சொன்னது மாதிரி அவங்க எப்பமாவது வந்து யாரையும் காப்பாற்றினதாக இல்லையே ...அப்ப அவங்களும் நம்மளை மாதிரி தான் - இது பேருந்துக்காக காத்துகிட்டிருந்த ஒருத்தர் சொன்னார் .

தாணப்ப வாத்தியார் எல்லோரையும் பார்த்தார் அவரின் முகத்தில பெருமிதம் தாண்டவமாடியது .அவர் சொன்னது நடந்து போச்சு . கணேசன் வேகவேகமாக ஓடிவந்தான்

-வாத்தியாரே .விஷயம் தெரியுமா -

-என்னப்பா சொல்லு -

-திருப்பதி கோயிலில் கூட்டமே இல்லையாம் ,அலமேலு டீச்சருக்கு மகன் நேற்று திருப்பதி போயிருந்தானாம்-ஐந்தே நிமிசத்தில தரிசனம் கிடைச்சுடுச்சாம் . , அப்புறம் .ஹஜ் யாத்திரைக்கு பிரயாண விமானத்தை ரத்து பண்ணிட்டாங்களாம் …பயணிகள் யாரும் வரவில்லையென்று ..வாட்டிகனில் கூட்டம் இல்லாததால் போப் ஆண்டவர் பிரார்த்தனை செய்ய மறுத்திட்டாரம்……

-நல்ல மாற்றம் தான் -.கொஞ்சம் நேரம் வானத்தை பார்த்து கொண்டிருந்த வாத்தியார் முகத்தில் சோகம் தழும்பியது

-மனுஷங்களுக்குள்ள இனி சண்டை போடமாட்டாங்க ….ஆனால் இவ்வளவு நாள் போட்ட சண்டையை விட இப்ப பார்த்தோமே அந்த அயல் கிரக வாசியான அந்த கடவுள்களுக்கும் நமக்கும் பெரிய சண்டை நடக்கும்- என்றார் .

-எதுக்கு வாத்தியாரே -

-எல்லாம் தண்ணீர்.. தண்ணீருக்காகவே பெரிய சண்டை நடக்கும்..இந்த பூமியில் மரங்கள் இல்லாமல் மழை பொய்த்து வறண்டு போகும் ... .அதைஎல்லாம் பார்க்க அப்ப நாம இருக்க மாட்டோம் -

நடக்கப் போற விபரீதத்தை நினைத்து எல்லோரும் அமைதியாக இருந்தார்கள். தாணப்ப வாத்தியார் அவங்களுக்கு ஒரு அயல்கிரக வாசியாகவும் இல்லாமல் மனிதனாகவும் இல்லாமல் ஒரு புது கிரக வாசியாக உயர்ந்து நின்றார் .

எழுதியவர் : சுசீந்திரன். (18-Mar-15, 3:02 pm)
Tanglish : ayal kayiraga vaasi
பார்வை : 309

மேலே