ப்ரியப்பட்ட டேஷ் - 10
ப்ரியப்பட்ட டேஷ் - 10
வழி விளக்கின் ஆதிவெளிச்சம்
ஜன்னல் ஊடுருவி சுவர்வரைந்த
நிழல் சித்திரம் பார்த்தவாறு நீ குப்புறக் கிடந்திருந்தாய். தெய்வத்தின் கண்கள் பின்னாம்புறமாய் இருந்திருக்கணும் போல் . காருண்யம் புறமெடுத்து சுரக்கின்ற திவ்யஜுவாலையாய், கேட்கின்ற செவிகளுக்கு சர்வ சாந்தனமாய், தீண்டும் விரல்களுக்கு கனல்சரங்களாய் எல்லாமே என் முன்னில்தான் என நம்பிக்கை வைத்திருந்த ஒரு காலம் இருந்தது.
பின் எங்கிருந்து, எப்போது தெய்வம் உனக்குள்மட்டும் குடியேறி
கம்படித்துக் கொடிநாட்டியது ? தெரியவில்லை.
கேலிகளுக்கு நடு நடுவே ஆரோகணமாய் சிரித்துக் கொல்லுகிறாய். இந்த முகப்ரசாதம்
இனி இப்படியே தரிசனம் கொடுக்கட்டும் என மனதாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
திருக்கல்யாணக் கோயில்களைப் பற்றிய மகிமைகளை நீ பேசும்போது
தலைமுறை தலைமுறைகளாய்
பகிர்ந்து கிட்டிய நம்பிக்கை, அந்த
நம்பிக்கையில் கிடைத்த வெளிச்சம்,
அந்த ஒளிவெளியில் பரஸ்பரம்
முளைத்தும் முளைக்காத புற்களும், அதை முகராது முகர்ந்து நின்ற நானும், என எல்லாமே உனை சொந்தமாக்கிக் கொள்ளும் கனவின் ஷாத்ஷாத்கார முகூர்த்தம்தான் போல்.
உனக்கு சாட்சியாய்,
உன்னை லாலித்துக்கொஞ்சி
கொதித்தீராமல் சொர்க்கம் சென்ற
உன் அம்மாவையே நீ பிரார்த்தித்திருப்பாய்.
எனக்கு சாட்சியாய்,
அந்தரங்கத்தில் இந்த நிமிஷம்வரை சுடர்விட்டு அவிர்ந்து நிற்கும்
ஆயிரம் பனிமூடல்களுடைய
இரவுகளை வசமாக்கிக் கொண்டிருப்பேன்.
கழிந்த இரவுகளில் கனவாகியே இருந்தது இது. கண்ணெட்டாத தூரத்தில், மேகங்களா , மணற்திட்டுகளா தெரியவில்லை. ஒரு பாகத்தில் நானும்
அப்புறத்தில் நீயும் நின்றிருந்தோம். சிறகு முளைத்ததாகத் தெரியவில்லை.
என்றாலும் பறந்து போகிறோமோ
என்கிற மாயநிலை. சிலபோது
இப் பிறவியில், இந்த நிமிஷத்தில்
இந்த சந்திப்பு இனி வருகின்ற யுகங்களுக்கான நம் பயணத்திற்கான
நித்யத் தொடக்கமாக இருந்திருக்குமோ.?
மெதுமெதுவென இமைகளை விரல்களால் இம்சித்துத் தெளிகையில்
திருமணக் கோயிலின் வாசற்படியின்மேல் கரங்களின் கதகதப்பில் துயில் கொண்டிருந்தோம் .
கடந்து சென்ற யாரோ சொன்னார்கள்.
திருக்கல்யாண கோவிலில் மாலை
மாற்றியவர்களுக்கு தீர்க்காயுள் உண்டாகும் என.
இதென்ன இன்றைய நாளின் பிரத்தியேகதையை விட்டுவிட்டு
ஏதேதோ பழங்கதை உளறிக் கொண்டிருக்கிறேன்.
உன் நேச ஆழத்திற்குள் விழுந்து
மூச்செட்டாமல் வியர்த்துமுட்டிக் கொண்டிருக்கிறேன்.
பாடல் மறந்தவனுக்கு
சுவரங்களெல்லாம் நட்பாகியதுபோல
நம் பரந்த முட்டாள்தனங்களுக்குள்
கழிந்துகொண்டிருந்தன
இருவரின் "முள்" இளமைகள்.
அந்த "நேரங்கொல்லிக் காதலுக்கு"
என் ஆசிகளும் பிரார்த்தனைகளும்.
பைராகி