உள்ளேவெளியே-சிறுகதை-பொள்ளாச்சி அபி

2.கவிதை சொல்லும் கதைகள்
--------------- ---------------- -----------
---உள்ளே..வெளியே..!-சிறுகதை-பொள்ளாச்சி அபி.--
-------------- ---------------- ------------- --------------------------

“அப்பா..எங்க மிஸ்சு..,கலர் டிராயிங் பென்சில் வாங்கிட்டு வரச் சொல்லியிருக்காங்க..”,

“உம்..”

“அப்புறம்..சார்ட் பேப்பரு,அதை ஒட்டறதுக்கு கம்மும் வேணும்..”

“உம்..”

“அப்புறம்..அப்புறம்..!”, அந்த சூப்பர் மார்க்கெட்டை சுற்றும் முற்றும் பார்த்தபடி எல்.கே.ஜி.படிக்கும் மகள் ஹேமலதா,அடுத்து என்ன வாங்க வேண்டும் என்று, யோசித்துக் கொண்டிருந்தாள்.

சொன்னதையெல்லாம் எடுத்துவைத்த விற்பனைப் பணிப்பெண், கன்னத்தில் கைவைத்தபடி யோசித்துக் கொண்டிருந்த ஹேமாவைப் பார்த்து,க்யூட் கேர்ள்..என்று செல்லமாக கன்னத்தில் தட்ட,“தேங்க்யூ ஆண்ட்டி..,”என்றாள் ஹேமா.

“அப்பா..அப்புறம் .. அந்த பெரிய பாக்கெட்லே இருக்குமே ஒரு சாக்லேட்.. டிவியிலே கூட காட்டுவாங்களே..,அதுவும் மறக்காமே வாங்கணும்.” சாக்லேட்டையும் அவளுடைய மிஸ் கண்டிப்பாக வாங்கிவரச் சொல்லியிருப்பது போன்ற தோரணையில் ஹேமா சொன்னதும்,நானும்,அந்தப் பணிப்பெண்ணும் ஒன்றாகச் சிரித்தோம்.

“ஏம்பா..சிரிக்கிறீங்க..?,வாயையும் கண்ணையும் லேசாக சுருக்கிக் கொண்டே கேட்டவளைப் பார்க்க எனக்கு மேலும் சிரிப்பு கூடியது.அச்சுஅசலாக மனைவி கீதாவின் மேனரிசங்களுள் பல ஹேமாவிடமும் படிந்து கிடந்தது.அதில் இதுவும் ஒன்று.

ஒருவாறாக சிரிப்பை அடக்கிக் கொண்டே“ஒண்ணும் இல்லடா தங்கம்..அப்புறம் வேற என்ன வாங்கணும்னு சொல்லு”

“உங்கிட்டே சொல்லமாட்டேன் போ..வீட்டுலே போய் அம்மாகிட்டேத்தான் சொல்லுவேன்.”

“ஓகே..ஓகே..அப்ப இன்னொரு தடவை இங்க வரலாம்..அப்படித்தானே..? ஆனா சாக்லேட் கோட்டா இதோட முடிஞ்சுடுச்சு பாப்பா...”என்றபடி நான் சிரிக்க, ஹேமா ஒன்றும் சொல்லாமல் முகத்தைத் திருப்பிக் கொண்டு உட்கார்ந்து விட்டாள்.

“மளிகை லிஸ்ட் குடுத்திருக்கேன்.அந்த பில்லோட இதையும் சேத்துக்கங்க.. அப்படியே வறுத்த முந்திரிப் பருப்பு ஒரு கால் கிலோ போடச் சொல்லிருங்க..அது லிஸ்ட்லே இருக்காது...என்று அந்தப் பெண்ணிடம் சொல்லிவிட்டு,ஹேமாவை அப்படியே தூக்கினேன்.” என் செல்லத்திற்கு திடீர் திடீர்னு கோபம் வந்துடுதே..! என்றபடியே,அவளை முன்பக்கமிருந்து சுழட்டி,முதுகில் உப்பு மூட்டையாகப் போட்டுக் கொண்டேன்.பணம் கட்டும் இடத்திற்கு நகர்ந்தோம்.

“பாய்..ஆண்ட்டி..ஸீ.. யூ.."அந்தப் பெண்ணிடம்,மறக்காமல் டாடா காட்டிவிட்டு வந்தாள் ஹேமா.

“ஏம்ப்பா..லிஸ்ட்லே அம்மா எழுதாத முந்திரிப் பருப்பை அம்மாவுக்குப் புடிக்கும்னு வாங்கறேயில்ல.நான் சாக்லேட் கேட்டா மட்டும் கிண்டல் பண்றே..?”பள்ளிக்கு போனதில் இருந்து,இந்தச் சுட்டிப் பெண் திடீர் தீடீரென்று இப்படித்தான் ஏதாவது கேள்வி கேட்கிறது.சிலசமயம் பதில் சொல்ல தடுமாறவும் வேண்டியிருக்கிறது.

“இல்லடா..அது வேற.இது வேற..” மிகவும் அபத்தமான பதிலைச் சொல்கிறேன் என்று எனக்கே நன்றாகத் தெரிந்தது.மனைவி சொல்லாமலே,அவளுடைய ஆசைகளை நிறைவேற்றுவதில் இருக்கும் சுகத்தை..,காதலை..,இவளிடம் எப்படி சொல்வது.? சொன்னாலும் புரியுமா..?

“எனக்குத் தெரியும்ப்பா..நீ அம்மாவை லவ் பண்ணிகிட்...டே இருக்கறே..!”

‘பக்’கென்று எனக்குள் ஏதோ அதிர்ந்தது. ஹேமாவின் குரலில் லேசான கிண்டலும், சிரிப்பும் தெரித்தது.குழந்தைகளுக்குப் புரியாது என்று நாம் நினைக்கின்ற,மறைக்கின்ற எத்தனையோ விஷயங்களைக் கற்றுக் கொடுக்கத்தான் தொலைக்காட்சிப் பெட்டி இருக்கிறதே..என்று எனக்கு இப்போது நன்றாக உரைத்தது.மேலும் குழந்தைகள் நினைத்ததை,நினைத்த மாதிரியே, நினைத்த இடத்தில் பேசுவது அவர்களின் இயல்பும்கூட.!

“ஆமா..ஆமா..அப்படித்தான் வெச்சுக்கோ..!.என் பொண்டாட்டியை நான் லவ் பண்றேன்.. அதுலே என்ன தப்பு..?”

“ரொம்ம்..ப கரெக்ட்டுப்பா..!”ஹேமா சிரித்தபடி,என் தோளை இன்னும் இறுக்கமாக அணைத்துக் கொண்டாள்.

டிபன் எதுவும் செய்யவேண்டாம்.வாங்கிவந்து விடுகிறேன் என்று,கீதாவிடம் சொல்லி விட்டுத்தான் வந்திருந்தேன்.வரும்வழியில்,ஹோட்டலில் காரை நிறுத்தி,கீதாவுக்கு பிடித்தமான காலிப்ளவர் ரோஸ்ட்டையே அனைவருக்கும் வாங்கிக் கொண்டு,ஹேமாவுக்கு இருக்கட்டும் என்று மூன்று இட்லிகளையும் கூடுதலாக வாங்கிக் கொண்டேன்.

வழக்கமாய் ஞாயிற்றுக் கிழமை என்றால்,மூன்றுபேருமே மாலையில் வெளியே வருவதும், அன்றைய இரவுஉணவை ஏதோவொரு ஹோட்டலில் முடித்துக் கொண்டு வீட்டுக்குப் போவதும் வழக்கமாய் வைத்திருந்தோம்.வாரம் முழுவதும் அலுவலகம்,வியாபாரம்,கஸ்டமர் கேர்..என்று உடலும்,மனசும் படும்பாட்டிற்கு,ஞாயிற்றுக் கிழமைதான் ஒரே ஆறுதல்.!

“வீடெல்லாம் ஒட்டடை அடிக்கணும்,பாத்ரூம் கழுவணும்,துணியெல்லாம் கொஞ்சம் ஊற வெச்சிருக்கேன்,அதையெல்லாம் மிஷின்லே போடணும். ப்ளீஸ்..,ப்ளீஸ்....இன்னைக்கு நீங்க மட்டும் போய்ட்டு வந்துடுங்களேன்.!” என்று சொல்லி கீதா வீட்டிலேயே இருந்துவிட்டாள். கடந்த ஞாயிறன்று உறவினர் வீட்டு விஷேசத்திற்கு போனதால் நின்று போன வேலைகள் இப்போது படுத்துகிறது.

“நானும் கொஞ்சம் ஹெல்ப் பண்றேனே..” என்று சொன்னபோதும்,கீதா மறுத்துவிட்டாள். “மளிகை சாமானெல்லாம் கொஞ்சம் வாங்கணும்.லிஸ்ட் போட்டு வெச்சிருக்கேன்.அதனாலே எப்படியும் நீங்க வெளியிலே போய்த்தான் ஆகணும்.பாப்பாவையும் கூட்டிட்டு போய்ட்டு வந்துடுங்க..!”அதனால்தான் நானும், ஹேமாவும் மட்டும் இன்றைக்கு வெளியில் வரவேண்டியதாய்ப் போயிற்று.

புறநகர்ப் பகுதியிலிருந்த எங்கள் அபார்ட்மெண்டின் வாட்ச்மேன் அடித்த சல்யூட்டை ஏற்றுக் கொண்டு,காரினைப் பார்க் செய்துவிட்டு,இரண்டாவது தளத்திற்கு படியேறி,வீட்டின் முன்நின்றோம். “அப்பா..காலிங்பெல்லை நான் அடிக்கிறேம்பா..”

பொருட்களை தரையில் வைத்துவிட்டு,ஹேமாவைத் தூக்க,அவள் காலிங்பெல் சுவிட்சை அமுக்கிப் பிடித்தாள்.ஒரு நீண்ட மணிச்சத்தம் உள்ளே கேட்டது. இன்னொரு முறையும் அழுத்த முயற்சிக்க,போதும் பாப்பா..அம்மா இப்ப வந்துடுவாங்க..” அவளைக் கீழே இறக்கிவிட்டேன். உள்ளே தொலைக்காட்சியில் ஏதோவொரு பாட்டுச் சத்தம் கேட்டது.

சில விநாடிகள் கழிந்திருந்தது.கனவிலிருந்து விழித்து வந்தவள் போல,கீதா வந்து கதவைத் திறந்துவிட்டு,ஒன்றுமே சொல்லாமல் உடனடியாக உள்ளே திரும்பிச் சென்று தொலைக்காட்சியின் முன்பாக தயங்கி நின்றாள். ஹேமாக் குட்டி அயர்ச்சியுடன் சோபாவில் சாய்ந்து கொண்டது.திரையில் ஓடிக் கொண்டிருந்த “வளையோசை கலகலவென..கவிதைகள் படிக்குது,குளுகுளு தென்றல் காற்றும் வீசுது..”பாடலின் இறுதிவரிகள் ஒலித்து முடிக்க,கைகளுக்குள் அமலாவை தாங்கிக் கொண்டு,பல்லவன் பஸ்ஸில் தொங்கியபடியே கமல் தனது பயணத்தை முடித்திருந்தார்.

கீதா திரும்பிப் பார்க்கவுமில்லை.கையிலிருந்த பொருட்களையும் வாங்கவில்லை.அப்படியே சமையலறைக்குள் சென்றுவிட்டாள்.எனக்கு கொஞ்சம் ஆச்சரியமாக இருந்தது.

“கீதா..ஒரு கப் காபி கிடைக்குமா..?”

“ம்..ம்..என்ன கேட்டீங்க..? காபியா..,அஞ்சே நிமிஷம்..கொண்டு வர்றேங்க..!, சமையல் அறைக்குள்ளிருந்து,அவள் பதில் சொல்வது மெதுவாய்க் கேட்டது.

ஆவி பறக்கும் காபியுடன் வந்து கொண்டிருந்தாள் கீதா.வேலைகளையெல்லாம் முடித்துவிட்டு ஒரு குளியலும் போட்டிருப்பாள் போலும்.மணக்கும் சோப்பு வாசனை,காபியை மீறிக் கொண்டு வந்தது.ஒதுக்கியிருந்த முடிக்கற்றைகளில் ஒன்றிரண்டு,காற்றில் அலைந்து முகத்தில் புரண்டு கொண்டிருக்க,உதடுகளில் அமர்ந்திருந்த மென்சிரிப்புடன்,“ சிலநேரம் சிலுசிலு சிலுவென சிறுவிரல் படபட துடிக்குது எங்கும் தேகம் கூசுது.. ” பாடலை அவள் முணுமுணுத்துக் கொண்டிருப்பது துல்லியமாகக் கேட்டது.அப்போதுதான் பூத்தது போல முகத்தில் நிலவிய வசீகரம்,அவளது வயதை திடீரென்று குறைத்துவிட்டதோ..!

காபியைக் கொண்டு வந்தவள்,எனது கையில் தராமல் ஏதோ நினைவுடன், கண்மூடி நின்று கொண்டேயிருக்க,‘என்னவாயிற்று..இவளுக்கு..?’ அவளது முகத்தைப் பார்த்தபடி,நானாகக் காபியை வாங்கிக் கொண்டேன்.

என் விரல் பட்டதும்,எதிர்பாராமல் விரலில் சூடுபட்டுக் கொண்டவள் போல ஒரு திடுக்கிடலும் தெரிந்தது. திடுமென்று சுயநினைவுக்கு வந்தவளாய் அவள் முணுமுணுத்துக் கொண்டிருந்த பாட்டு,சுவிட்ச் போட்டாற்போல நின்று போனது. கற்பனையுலகிலிருந்து நிஜத்திற்கு வந்துவிட்டவளாய்,“ரொம்ப ஸாரிங்க..ஏதோ நினைவுலே இருந்துட்டேன்..” சொல்லும்போதே அவள் விழிகளில் கண்ணீர் திரண்டது.தலையைக் குனிந்து கொண்டே மீண்டும் சமையலறைக்குப் போய்விட்டாள்.அவள் அங்கு போனபின்பும் எந்தப் பாத்திர உருட்டலுமின்றி நிசப்தமாக இருந்தது.மௌனமாய் அழுது கொண்டிருப்பாளோ..! மணம்முடித்த இந்த ஆறுவருடங்களில் இப்படியொரு தருணத்தை இருவரும் எதிர்கொண்டதே இல்லை.

ஆனால்,சூழ்நிலை மிகத்துல்லியமாக இப்போது எனக்குப் புரிந்தது..,எத்தனை காதல் பாட்டுகள் கேட்டிருந்தாலும் குறிப்பிட்ட சில பாடல்கள் மட்டும், ஒரு தனித்தன்மையோடு இளமைக்காலக் காதலோடு எப்படியோ பின்னிப் பிணைந்து விடுகிறது.நிறைவேறாமலே போய்விட்ட அவளது கடந்தகாலத்து காதலை, கடந்துபோன வளையோசை பாட்டு,நினைவுறுத்திச் சென்றுவிட்டது போலும். ஏற்கனவே அவள் விருப்பமாய்க் கேட்டுக் கொண்டிருந்த சில பாடல்கள்,எழுதித் தூக்கிப் போட்டிருந்த கவிதைகள்..என சிலவும் அவள் மனதை எனக்கு ஏற்கனவே உணர்த்தித்தான் சென்றிருக்கிறது.இதுவரை அது குறித்து ஒன்றும் நான் கேட்டதில்லை.

‘ஆனால்..அவள் பாவம்,இந்த உலகத்தில்,செய்யக்கூடாத தவறொன்றை தான்மட்டுமே செய்துவிட்டவள் போல,இப்போது எதற்காக மறுகுகிறாள்..? தனது கடந்த காலக் காதல்,கணவனுக்கு தெரிந்து போயிற்றே என்று பதறுகிறாளா..? இனி அவன் தன்னைக் குறித்து சந்தேகப்படுவான் என்று நினைத்துக் கொளவாளா..? அடக் கஷ்டமே..என்னைப் பற்றி நான் இன்னும் முழுமையாக அவளிடம் வெளிப்படுத்திக் கொள்ளவில்லையோ என்ற சந்தேகமல்லவா எனக்கு வருகிறது.?

காதலிப்பது பெரும்பாவமா என்ன.? இது மிக யதார்த்தமான ஒன்றுதானே..! எத்தனை ஆண்டுகளானாலும் மனதில் ஒட்டிக் கொள்ளும் முதல் காதலைப் போலவே, அவளுக்கு “வளையோசை..,” பாட்டு எனில்,எனக்கு “ஆயிரம் தாமரை மொட்டுக்களே...!” அவ்வளவுதான்.இதில் எந்தக் குற்றவுணர்ச்சியும் கொள்ளத் தேவையில்லை..,இதனை முதலில் அவளுக்குப் புரியவைக்கவேண்டும்.

கூடவே..,எங்கள் பெண்குழந்தைக்கு ‘ஹேமலதா..’என்ற பெயர்தான் வைக்கவேண்டும் என்று அன்றைக்கு நான் வலியுறுத்திய காரணத்தையும், கீதாவிடம் விரைவில் சொல்லிவிட்டால் நல்லது என்றும்,எனக்கு இப்போது தோன்றுகிறது.!

-----------

"வளையோசை கலகலவென.."--குருச்சந்திரன் [-எ-] கிருஷ்ணதேவ்.
-----------------------------
தொலைக்காட்சியில்
வளையோசை
கலகலவென
பாடலை
மெல்லிய புன்னகையுடன்
பார்க்கத்தொடங்குகிறாள்
அவள் !

என்றுமில்லாதது போல
அவ்வளவு
மிருதுவாகி விடுகிறது
அவள் முகம் !

அவளுக்கு மட்டும்
ஒரு தென்றல்
எங்கிருந்தோ
வீசுகிறது !

கலைந்த
தன் காதோரத்துக் கூந்தலை

சரி செய்யும்
நளினத்தில்
பத்து வயது
குறைகிறது
அவளுக்கு !

பாடலின் வரிகளை
மெல்ல
முணுமுணுக்கின்றன
அவள் உதடுகள் !

பாட்டுக்குள் நடந்து
அவள்
தன் கடந்த காலத்துக்குப்
போய்க்கொண்டிருப்பதை
லயித்த
அவள் விழிகள்
அறிவிக்கின்றன !

பாட்டு முடியும்
தருணத்தில்
நிஜத்துக்குத்
திரும்பியாகவேண்டிய
அயர்ச்சியை
அப்பிக்கொள்கிறது
அவள் முகம்
ஒரு நீண்ட
பெருமூச்சுடன் !

சட்டென்று தாழ்ந்து
தரை நோக்கிய
கண்களில்
தளும்பி நின்ற
கண்ணீர்த் துளிகள்
கன்னத்தில்
உருளும் முன்
சமையலறைக்குள்
புகுந்து கொண்ட
அவள்
திரும்பி வந்தபோது
நான் எதுவும்
கேட்டுக்கொள்ளவில்லை.. !
-------- ------- --------- ------- ------
-------- ------ --------- ------ ------

எழுதியவர் : பொள்ளாச்சி அபி B +ve (18-Mar-15, 1:17 pm)
பார்வை : 543

மேலே