கனவே கலைந்து போ பாகம்- 6 துப்பறியும் திகில் தொடர்
முன் கதைச் சுருக்கம்
நந்நினியின் வீடு இருக்கிற பகுதியில் கடற்கரை பக்கமாக போதைப் பொருள் கடத்தப்படுகிற சங்கேதப் பரிமாற்றங்களை பிரசாத் அறிகிறான். போதைப்பொருள் தடுப்பு அதிகாரியான துணை கண்காணிப்பாளர் முரளிக்கு அதை தெரிவித்து விடுகிறான்.
................................................................................................................................................................................................
கிட்டத்தட்ட பத்து நாள் கழித்துதான் நந்தினியைப் பார்த்தான். ஜெபமணி அனாதை இல்லத்துக்கு கிளம்பிக் கொண்டிருந்தாள். அடிக்கடி அந்த இல்லத்துக்கு துணிமணிகள், டொனேஷன் என்று கொடுப்பாளாம்.
டிசைனே இல்லாத பச்சை நிற சேலை, பிளவுஸ் மற்றும் முத்துத்தோடு, மாலை, சங்கிலி, வளையல் என்று எல்லாமே முத்தாக ஒரு கடற்கன்னி போல கிளம்பியிருந்தாள்.
அனாதை இல்லத்தில் ஏதோ ஆண்டு விழா.
மேடையில் நந்தினி, ஓரிரு கன்யாஸ்திரிகள், சில பிரமுகர்கள் அமர்ந்திருந்தனர். பிரசாத் கீழே நின்று போட்டோ எடுத்துக் கொண்டிருந்தான். கொத்துக் கொத்தாய் குழந்தைகள்... பெரும்பாலும் பெண் குழந்தைகள்...
பிரசாத் போய் நின்றதும் “அண்ணா, அண்ணா” என்று சுற்றிக் கொண்டன குழந்தைகள். ஜாஸ்மின், ரோஸ் மேரி, ஜாய் செவ்வந்தி, தாமரை, லில்லி என்று எல்லாருக்குமே பூக்களின் பெயர்கள். ஜாஸ்மினுக்கு ஞாபக சக்தி அதிகமாம். அவள் தோளில் கை போட்டு ரோஸ் மேரி.... ஜாஸ்மினுடைய கவுன் நந்தினி அணிந்திருந்த சேலையைப் போலவே பச்சை நிறத்தில் டிசைன்களே அற்றிருந்தது. குழந்தைகள் வயது எட்டிலிருந்து பத்துக்குள் இருக்கும்... பிரசாத் அவர்களையும் புகைப்படம் எடுத்தான்.
பிரசாத் இப்போதெல்லாம் நந்தினி இருக்கிற ஏரியா பக்கம் அடிக்கடி தென்படுகிறான். நந்தினி புழங்குகிற இடமெல்லாம் பிரசாத்தின் இடங்களாயின. ஸ்டார் ஹோட்டல் சாப்பாடு சாப்பிட்ட கடனா? நந்தினி மேல் காதலா? தனக்கு ஏற்பட்ட அனுபவத்துக்கு விடை தேடும் முயற்சியா, இல்லை இவை அனைத்துமா? பிரசாத்துக்கு புரியவில்லை. ஆனால் அதே சமயம் தனது இருப்பு நந்தினியை உறுத்தாதபடிக்கு நடந்து கொண்டான்.
பிரசாத் சந்தித்தது சக்கரை என்கிற சுகர் எனப்பட்ட சுகிர்த ராஜாவை. ஐடி கம்பெனியில் வேலை பார்க்கிற பெரிய இடத்துப் பையன். பிரசாத்தின் பள்ளித் தோழன்.
“ ஜூன் அஞ்சாம் தேதி ரெஹெனா ஐடி கம்பெனியில ராத்திரி டியூட்டி ரெகார்ட் ஆகியிருக்குமில்ல, அந்த ஒரிஜினல் பதிவு வேணும்.” பிரசாத் சக்கரையிடம் கேட்டான்.
“எதுக்குடா? ”
“எனக்குத் தெரிஞ்ச ரிசப்ஷனிஸ்ட் அங்க வேலை பார்க்கிறாங்க. அவங்க டியூட்டி டயத்துல இருபத்து நாலு நிமிஷம் விட்டுப் போயிருக்கு. அது என்னன்னு பார்க்கணும். ”
“அடுத்த நாள் கம்யூட்டர்ல சேவ் பண்ணும் போதா? ”
“ஆமா. ”
“ஏண்டா, ரிசப்ஷனிஸ்ட்டை வேலைக்கு வைக்கிறது லோகல் ஏஜென்ஸி. மாசா மாசம் கன்சோலிடேடட் பே (தொகுப்பூதியம்) கொடுத்துடுவாங்க. ஐடி எஞ்சினியருங்களுக்கு சம்பளம் போடுறவன் ஃபாரின்காரன். அவன் பயோமெட்ரி, காமிரா பதிவு லொட்டு லொசுக்கு இதுகளை பார்த்துட்டு சம்பளம் தர்றான். ஐடி ஆளுங்க யார் எப்ப வந்தாங்க, எப்ப கிளம்பிப் போனாங்கங்கிறதை தெரிஞ்சிக்கத்தான் சிசி காமிரா. அதுல இருபத்து நாலு நிமிஷம் விட்டுப் போறது அதிசயமே இல்ல. சமயத்துல நாலு மணி நேரம் கூட எடிட்டாகும். இதுக்கு ஏன் நீ அலட்டிக்கிற? ”
“காரணத்தோடதான்.. கொண்டு வந்து கொடு! ”
“ஜூன் ஐந்தாம் தேதின்னா ஜூன் அஞ்சு, விடிஞ்சா ஆறா, இல்ல நாலு-ஐந்தா?
“ஜூன் ஐந்து -ஆறு.
அன்றிரவு பிரசாத்தும் வேல்முருகனும் நந்தினியின் ஏரியாவுக்கு வந்திருந்தனர். நந்தினி இரவுப்பணி சென்றிருக்க வேண்டும்..
பிரசாத் பைக்கிலிருந்த சின்னப் பழுதை சரி செய்து கொண்டிருந்தான். வேல்முருகன் விசிலடித்துக் கொண்டே அபார்மெண்டுக்குள் புகுந்தான்.
இரண்டு மூன்று நிமிடங்கள் ஓடியிருக்கும்...
“ஆ...ஆஆ..........! ”
“ஹோ...ஹ் ஹோ...ஹ்....” என்ற இரைச்சலோடு கண்மண் தெரியாமல் ஓடி வந்தான் வேல்முருகன்.
“பைக்கெடுடா... பைக்கை எடுடாஆ..... ”
“என்னடா? என்னடா? ”
பிரசாத்தை தள்ளிவிட்டு பைக்கை கிளப்பினான் வேல்முருகன். “உயிர் வேணும்னா சீக்கிரம் வாடா! ”
பைக் விர்ர்ரிட்டுப் போனது. சாந்தோம் சர்ச் அருகில் ஓரளவு மக்கள் நடமாட்டமுள்ள இடத்துக்கு வந்த பிறகு மூச்சு வாங்கினான் வேல்முருகன். இன்னும் கை நடுக்கமிருந்தது.
“என்னடா ஆச்சு? ” பிரசாத் கேட்டான்.
“டேய், நான் கேட்டேன்டா.. நந்தினி வீட்டுக்குப் பக்கத்து வீடு.. பூட்டின வீட்டுக்குள்ள பேச்சுக் குரல்... இன்னும் கொஞ்சம் பிரியாணி வை எஸ்தர்ங்குது... ! ! சிக்கன் கிரேவி எடுங்குது.. ... ! ! ஆம்பள குரல், பொம்பள குரல், குழந்தைங்க குரல்- எல்லாத்தையும் கேட்டேன்டா. ... ! ! ”
திகீரென்றது பிரசாத்துக்கு !!!!
தொடரும்