அழகியலும் அவலங்களும்

மரமல்லிப் பூக்களின்
மென் உதிர்வைக்
காட்சிப்படுத்திய நாளில் தான்
விமான விபத்தில்
சில நூறுபேர்
மாண்டார்கள் !
வெண்புறா ஒன்றின்
சிறகசைப்புகளுக்கு
பேனா
செவி சாய்த்தபோதுதான்
பக்கத்து நாட்டில்
பூகம்பம் வந்தது !
ஒரு
மீன்தொட்டியின்
அழகியல்
பாடுபொருளானபோது தான்
அவன்
தீவிரவாதிகளால்
எரிக்கப்பட்டான் !
மழையின்
மண்வாசனையைப்
பதிவு செய்து
புல்லரித்த நாளில்தான்
தண்ணீரின்றி
தற்கொலை செய்த
விவசாயியின்
பெட்டிச்செதி
கண்ணில் பட்டது !
தேவதைகளுக்கும்
காதலிக்குமுள்ள
பத்து ஒற்றுமைகளைப்
பட்டியலிட்டு
நிமிர்ந்த போதுதான்
ஓர் இளம்பெண்ணை
வன்புணர்வு செய்து
வீசி எறிந்தது
எமது
தலைநகரப்பேருந்து !
எந்த அழகியலையாவது
இனி
எழுதுவதற்கு முன்
எதற்கும் இருக்கட்டுமென்று
கருப்பு மையிட்டு
நிரப்பி விடுகிறேன்
எனது பேனாவை !