கோட்டோவிய மழலைகள் 19
![](https://eluthu.com/images/loading.gif)
பப்புக்குட்டி உம்மா கொடுடா
என்றதுமே
இரு இதழ்களை குவித்து
தேன் எச்சில்களை வழித்து
என் கன்னத்தில் வரைந்த
அந்த முத்த ஒவியத்திற்கு
போட்டி ஒவியம்
ரவி வர்மனின் தூரிகையினால்
தீட்டமுடியுமா ?
கையிடுக்கிலும்
குட்டி தொந்திவயித்திலும்
கிச்சுகிச்சு மூட்டும்போது
என் அப்புக்குட்டி தன்
சின்னஞ்சிறு மென்பாதங்களால்
என் தொடையிலும் மார்பிலும்
தத்தி தத்தி நடந்து
குதித்து குதித்து குதூகலித்து
வைத்தியமிடும் மருந்து
ஏதேனும் ஒரேஒரு மருத்துவத்தால்
கொடுத்திடமுடியுமா ?
என் கோமாளி
பாவனைகளை கண்டு,
விழிகுறுக்கி இதழ்விரித்து
என் அம்முக்குட்டி
சிரிக்கும் சிரிப்புக்கு
ஈடுக்கொடுக்கும் சரியான
சங்கீதத்தை
இசைப்புயல், இசைஞானிகளால்
தயாரிக்க முடியுமா ?
என் செல்லக்குழந்தை
முதன் முறையாய்
கோண கோணலாய் எழுதிய
அகர கிறுக்கல்களுக்கு
சவால்விடும் கவிதையேதும்
கவிஞர்களே உங்களால்
எழுதிடமுடியுமா ?
உலக அழகிகளே
பொறாமை கொள்ளாதீர்கள்..!
என் செல்லக்குட்டியின்
பொன்னழகு முகத்தினை
கண்டுதான் தினம்
வெண்ணிறநிலவே
உண்ட ஏப்பம் விடுகிறதாம்.
இப்படியாகவே,
தன் கர்ப்பபை சுவற்றில்
குட்டிவிரல்களும் குட்டிகால்களும்
அழுத்தமாய், தீர்க்கமாய்
ஒரு ஒவியம் தீட்டாதோ..?
கனாக்களில் மிதந்தப்படியே
எண்ணி ஏங்கி கவியெழுதினாள். .
இந்தமுறையும் எழுதுகிறாள்.
நம்பிக்கையோடு இந்த மலடி.