காதலுடைத்து செல்வீயோ - சந்தோஷ்

காதல்..........!
அய்யோ... இது

எந்த அமிர்தத்தில்
ஊற்றப்பட்ட விஷமிது, ?
எந்த வானப்பறவையில்
பிடுங்கப்பட்ட இறக்கையிது ?
எந்த வசந்தப்பானையில்
கொதிக்கப்படும் வெந்நீரிது ?

கால்கள் நான்கும்
ஒன்று சேர்ந்து நடந்ததில்லை
விழிகள் நான்கும்
உற்று நோக்கி ருசித்திடவில்லை
கைகள் நான்கும்
கலந்து கலவி கொண்டதில்லை.

ஹார்மோன்களில் உணர்வையூற்றி
எரித்து எரித்து எரித்து
எரியவைத்தே காதலென்று
கொதிநிலைக்கு மூட்டியது யார்?

ஒருவருக்கு ஒருவர் புகாரளித்து
இதழ் விசாரணைகளில்
முத்த தர்ணா செய்திடுவோமா ?
சொல் ! பெண்ணே சொல்.. !

அன்று நீயெனக்கு அனுப்பிய
காதல்மொழிகளும், தூய்மை
தூதுச்செய்திகளும்
இன்று மரணவேதனையில்
குற்றப்பத்திரிக்கை வாசிக்கிறது..!
உன்னையோ என்னையோ
அது குற்றஞ்சொல்லவில்லை அன்பே...!

நமக்குள் ஏற்பட்ட அந்த காதல்
அலைவரிசையில் ஏதேனும்
ஓரு பிழை ஏற்பட்டிருக்குமாம்..!

அப்படியா செல்லமே...?
அவ்வாறு எனில்,
உன் நிழற்படங்களும்
உன் நிகழ்நினைவுகளும்
நீயோ நானோ
ஏதோ ஒரு நிகழ்வுகளால்
வெறுத்து ஒதுக்கியப்பிறகும்
ஏனடி ஏனடி
என்னுயிரையும்
எனது உணர்ச்சிகளையும்
வேரோடு வேரின் சதையோடு
கிள்ளி எறியும்வேகத்தில்
கொலை வெறியாட்டமாடுகிறது. ?

கொஞ்சம் சொல்லி வை.
உன் நினைவுப்பிம்பங்களிடம்...!

மீண்டும் என் மனத்திரையில்
அது திரையிடப்பட்டால்
உனை களவாடி காதலாடுவதை
தவிர வேறுவழியில்லை எனக்கென்று..


------------------------
-இரா.சந்தோஷ் குமார்.

எழுதியவர் : -இரா.சந்தோஷ் குமார். (22-Mar-15, 5:02 pm)
பார்வை : 153

மேலே