கல்யாணத்துக்கு பின் காதல்

கல்யாணத்துக்குப்
பின்னர்தான் எங்கள் காதல் -

பிப் 14-ஐ ரோஜாக்களோடு
கொண்டாடியதில்லை !
வளர்ந்த பிள்ளைகளால்
மீண்டும் புதுப்பிக்க பட்டன
எங்கள் திருமண நாள்
கொண்டாட்டங்கள் !

காதல் என்ற வார்த்தைப்
பரிமாற்றம் ஒன்றும்
நடந்ததில்லை -
அவள் அக்கறையாய்
சமைத்து பரிமாறும்
குழம்போ கூட்டோ
ருசித்தபின் என் பார்வை
பரிமாற்றம் அதைச் செய்துவிடும் !

இந்த வீட்டில் வைத்த
பொருள் அகப்படாதென்று
கூச்சலிடும் என் கண் முன்னால்
எடுத்துத் தரும் அவளின்
புன்முறுவலை நான் ரசிப்பதுண்டு !
வழக்கத்துக்கு மாறாக
மௌனமாய் நானே
தேடி எடுத்துக்கொண்டால்
ஏதோ பிரச்சனை என்று
சிந்தனையில் அவள் ஆழ்வதுண்டு !

உலக மனைவியரின்
ஏகோபித்த குற்றச்சாட்டு
அவளுக்குமுண்டு ;
"அவளோடு அதிகம் பேசுவதில்லை"
என்னடி என்ற ஒருமையின்றி
பெயர் மட்டும் சொல்லியழைத்தால்
உடம்புக்கு என்னவென்று
என் கழுத்தில் அவளின்
உள்ளங்கை சோதிப்பு தவறுவதில்லை !

அவளின் சமையலறை
அரசாட்சியின் மகிமையை
நான் புரிந்து கொண்டது
அவளது உடல் நலம்
குன்றியபோது !

தாய்க்குப் பின் தாரம்-
முற்றுப் பெறா வார்த்தை... ?
தாய்க்குப் பின்
தாரம் நம் தாயாகிறாள் !
முற்றுப் பெறுகிறதோ வார்த்தை ?

எழுதியவர் : ஜி ராஜன் (23-Mar-15, 4:58 pm)
பார்வை : 140

மேலே