இறுதியாகிவிட்ட அந்த நாள்- சந்தோஷ்

என் மரணம்
அசாதாரணமாக வேண்டும்
மரணம் எனக்கு
சாதாரணமாகவே வேண்டும்.

பறவையாய் இறக்கை மனமுண்டு
பயனில்லை.
அது விரக்தி கூட்டில்
அடைப்பட்டிருக்கிறது

எட்டியுதைக்க
கால்களில் பலமுண்டு.
உபயோகமில்லை
மனச்சிதைவு சங்கலியில்
சிறைப்படுத்தியிருக்கிறது.

கூரிய விழிகளில்
பார்வை கூர்மையுண்டு
வழியில்லை
வியாதியின் இருட்டுக்களில்
கைதாகியிருக்கிறது.

பத்துக்கு பதினாறு அளவுடைய
அறையைவிட குறைவுள்ள
ஒரு தனிமைச்சிறை.
கொஞ்சம் தன்னம்பிக்கையுண்டு
நிறைய கற்பனையுண்டு.

என் கரங்களில் மட்டும்
ரணங்களின்
விலங்கிடாமலிருந்தால்
ஆட்காட்டி விரலை உடைத்து
பேனாவாக்கியிருப்பேன்.
அருகிலிருக்கும் சுவற்றை
எழுதும் தாளாக்கியிருப்பேன்.

என் ஆழ்மனதில்
ஓர் ஆணவமுண்டு
நான் ஒரு கவிஞனென்று.

புலன்கள் யாவும்
சிறைப்படுத்தியிருந்தாலும்
மூளையின் மடிப்புக்களில்
சிந்தனைகள் சுதந்திரக் கீதம்
இயற்றிக்கொண்டிருக்கின்றன.

எப்படியும் எழுதிடுவேன்
சின்ன சின்னதாய்
சில கவிதைகள்.

எவ்வாறு ?


உலக மலர்களின்
நறுமணத்தை அள்ளி
என் எதிரிகளுக்கு
நன்றியுரை எழுதிடவேண்டும்.

எந்தன் வியர்வைகளை
சேகரித்த அனுபவப்பேனாவில்
என் துரோகிகளுக்கு
வாழ்த்துரை எழுதிடவேண்டும்.

என் இருதயத்தில் பிரியும்
நல்ல குருதியை தொட்டு
எனது உயிரில் கலந்த
அன்புக்குரிய காதலியவள்
படித்து ரசித்திட பிரமாண்ட
காதல்கவி உணர்ச்சி
கிளர்ச்சியோடு எழுதிடவேண்டும்.


எல்லாம் சரி,
எனை ஈன்ற அன்னைக்கு
நான் என்ன எழுதிடமுடியும்......?


நீயெனை பெற்ற கடனை
திருப்பிச்செலுத்த முடியா
பிள்ளை இவனை
மன்னித்துவிடு அம்மா.

இறுதியாய் ஒருமுறை
உன் மடியில்
சேய் இவன் சாயும்
சாத்தியமும் பாக்கியமும்
எனக்கில்லையா அம்மா ? “



--------------------------------------------------------

-இரா.சந்தோஷ் குமார்

எழுதியவர் : இரா. சந்தோஷ் குமார் (23-Mar-15, 9:35 pm)
பார்வை : 244

மேலே