சமூகம் தரும் கொடுமைகள்

சமூகம் தரும் கொடுமைகள்
‘மிஸ்டர் சபரீசன்’ உங்களை எம்.டி கூப்பிடறாரு, தன் அறைக்கு வந்து சொன்ன உதவி மேனேஜர் பட்டாபியை உற்று பார்த்த சபரீசன், எதுக்குன்னு சொன்னாரா?
இல்லை என்பது போல தோளை குலுக்கிய பட்டாபியை பார்த்த சபரீசனுக்கு ‘எம்.டி’யிடமிருந்து தமக்கு நல்ல தகவல் கிடைக்கப்போவதில்லை என்பதை உணர்ந்தார். இந்த எண்ணம் அவருக்குள் முளைத்த போதே உடல் அப்படியே சோர்ந்து போனது. பட்டாபி நிற்கும் தோரணையும் அதை ஊர்ஜிதப்படுத்துவது போலத்தான் இருந்தது.
ஏற்கனவே பட்டாபி ‘எம்.டி’யின் உறவுக்காரனாக இருந்தும் சபரீசனின் தகுதிக்கும், படிப்புக்கும், அதுமட்டுமில்லாமல் அவரது ஐம்பது வயதுக்கும் மதிப்பளிக்கும் வண்ணம் இவரையே தன் நிறுவனத்துக்கு “மேனேஜராக்கி” இவனை உதவி மேனேஜராகவே நியமித்திருந்தார்.
அது முதலே ‘சபரீசனை’ அவன் மனதளவில் வெறுத்தான். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அவரை அவமானப்படுத்தவும் தயங்கவில்லை. சபரீசன் அதை கண்டு கொள்ளவில்லை. தனது திறமைகளை காட்டி நிர்வாகத்தின் வருமானத்தை உயர்த்தி காட்டினார். இதனால் ‘எம்.டி’ உச்சி குளிர்ந்து மூன்று வருடங்களாக நல்ல மதிப்பும் மரியாதையுமாக வைத்திருக்கிறார். ஆனால் இன்று ‘எம்.டி’ அழைக்கிறார்? அதுவும் நேரம் கெட்ட நேரத்தில். சபரீசன் பதவி ஏற்றதில் இருந்து இந்த கம்பெனி நிர்வாகத்தை இவரிடமே பொறுப்பை ஒப்படைத்து விட்டு, அவரிடம் இருந்த மற்ற வியாபார நிறுவனங்களை கவனிக்க ஆரம்பித்தார், இவரின் மீதிருந்த நம்பிக்கையால். அதனால் இந்த நேரம் அவர் இங்கு வந்ததும் இல்லை,இவரை கூப்பிட்டதும் இல்லை.
வாடகைக்காரில் தன் வீட்டுக்கு சென்று கொண்டிருந்த ‘சபரீசனின் உள்ளம் கனன்று கொண்டிருக்கும் கங்குகளாக இருந்தது. என்ன தப்பு செய்தோம்? ஏற்கனவே செய்யாத தவறுக்கு பத்து ஆண்டுகள் சிறையில் இருந்தவர். விடுதலை ஆகி சமூகத்தில் படாத அவமானங்கள் எல்லாம் பட்டு இந்த நிறுவனத்தில் தான் மூன்று வருடங்களாக பணி புரிந்து கொண்டிருந்தார். அதிலும் ‘வேட்டு வைக்க’ கோபாலன் வந்து விட்டான். அவனை அநேகமாக இந்த பட்டாபிதான் ஏற்பாடு செய்து வரவழைத்திருக்க வேண்டும். ‘எம்.டி’ நாசுக்காய் அவரை நாளை முதல் வர வேண்டாம் என்று சொல்லி விட்டார்.
சபரீசன் வேதியியல் துறையில் டாக்டர் பட்டம் பெற்றவர், உலக அளவில் புகழ் பெற்ற ஒரு மருந்து உற்பத்தி நிறுவனத்தில் மருத்துவ ஆராய்ச்சியாளராக இருந்தவர். அந்த மருந்து உற்பத்தி நிறுவனத்தில் மூன்று கண்டுபிடிப்புகளை கொடுத்து அதற்கான உரிமையை மருத்துவ கவுன்சிலிடம் அனுமதியை தகுந்த சாட்சியங்களுடன் விளக்கி அதனை விற்பதற்கு அனுமதியும் வாங்கி கொடுத்தவர். இன்னும் எத்தனையோ பெருமைகளுடன் வலம் வந்தவர்.
எல்லாமே இந்த பாழாய்ப்போன கோபாலனை சந்திக்கும் வரைதான். ஒரு நாள் இரவு பணி முடிந்து தனது பங்களாவுக்கு சென்றார். இதுவரை திருமணமே செய்யாமல் ஆராய்ச்சி, ஆராய்ச்சி, என்று காலத்தை ஓட்டி கொண்டிருந்ததால், பங்களாவில் இரண்டு வேலையாட்கள், மற்றும் பங்களாவின் வாட்ச்மேன். இவர்கள் மட்டும்தான் இவருடன் வாசம்.
காம்பவுண்ட் கேட்டை திறப்பதற்கு வாட்ச்மேன் முன் பக்கம், இவரே காரை ஓட்டி வந்திருந்தார். அவர் அருகில் வந்து ஐயா ‘கோபாலுங்கறவரு’ உங்களை பார்க்கறதுக்கு வெளியில காத்திருக்காரு. நீங்க வந்தவுடனே உங்க கிட்ட கேட்டு இந்த நம்பருல கூப்பிட்டு சொல்ல சொன்னாரு.
சப்ரீசன் களைப்பாக இருந்தாலும் அரை மணி நேரம் கழிச்சு வர சொல்லு, நான் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு அப்புறம் சொல்றேன். அதுக்கப்புறம் கூப்பிடு, சொல்லி விட்டு காரை கொண்டு போய், சற்று தள்ளியிருந்த “கார் ஷெட்டில்” நிறுத்தி விட்டு நடந்தே பங்களாவின் வாசலுக்கு சென்றார்.
தன்னை ஒரு ஆராய்ச்சியாளனாக அறிமுகப்படுத்திக்கொண்ட கோபால் தான் பணி செய்யும் மருந்து ஆராய்ச்சி நிறுவனத்தை பற்றி சொன்னான். உலக அளவில் மூன்றாம் இடத்தில் இருப்பதையும், அங்கு பணிபுரிய ஆராய்ச்சியாளர்கள் தவம் கிடப்பதாகவும் சொன்னான்.
அவனது தற்பெருமை பேச்சுக்கள் சபரீசனுக்கு சலிப்பை தந்தன. தான் களைப்பாக இருப்பதாகவும் மற்றொரு நாள் ‘விலாவாரியாக’ பேசலாம் என்று நாசுக்காய் அவனுக்கு சொன்னார்.
அவன் அதை புரிந்து கொண்டானோ என்னவோ நேரடியாய் விசயத்துக்கு வந்தான். தற்போது அவர் செய்து கொண்டிருக்கும் மருந்தின் ஆராய்ச்சி முடிவுறும் நிலையில் இருப்பதை கேள்விப்பட்டதாகவும், அந்த கண்டு பிடிப்பை எங்கள் மருந்து நிறுவனத்துக்கு அளித்தால் பெரும் தொகையுடன், அமெரிக்காவில் நிரந்தர குடிமகனாகவும் ஏற்பாடு செய்து தருவதாகவும், கம்பெனி நிர்வாகம் இதற்கு ஏற்பாடு செய்து தர தயாராக இருப்பதாகவும் சொன்னான்.
சபரீசன் புன்னகையுடன் மறுத்து விட்டவர், தனக்கு குழந்தைகள், குடும்பம் என்றோ, தான் அதிகம் சம்பாதிக்க ஆசைப்பட்டோ இங்கு பணி புரியவில்லை, அதனால் இந்த எண்ணங்களுடன் என்னை தொடர்பு கொள்ள வேண்டாம் என்று உறுதியாக சொல்லி விட்டார். கோபாலனும் கிளம்பி விட்டான்.
மறு நாள் இந்த நிகழ்ச்சியை பற்றி சுத்தமாக மறந்து விட்டார். கிட்டத்தட்ட ஒரு மாதம் ஓடியிருந்தது. ஒரு நாள் மாலை வேளை அவரை அழைத்தது மருந்து நிறுவனத்தின் உயர் மட்ட குழு,
நீங்கள் எங்கள் நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டே அடுத்த மருந்து ஆராய்ச்சி நிறுவனத்துக்கு உங்கள் கண்டுபிடிப்பை விற்க முனைந்திருக்கிறீர்கள் என்று குற்றம் சாட்டியது.
அதிர்ச்சியான சபரீசன் ஒரு மாதம் முன்பு நடந்த விவரங்களை சொன்னார். அதை நம்ப மறுத்த நிர்வாகம், அதை அப்பொழுதே நிர்வாகத்துக்கு அறிவிக்காததற்கு காரணம் கேட்டது. இவர் அதை ஒரு சாதாரண விசயமாக நினைத்ததால் இதை சொல்லாமல் விட்டு விட்டதாக சொன்னதை அவர்கள் நம்பவில்லை.
அது மட்டுமல்ல, கோபாலனே அவர் தன்னிடம் இந்த ஆராய்ச்சியின் முடிவை விற்பதற்கு தயாராக இருந்ததாகவும் பெரும் தொகையும், அமெரிக்க குடியுரிமையும் கேட்டதாக தெரிவித்திருந்ததையும் இவர்களிடமே சொன்னதை சாட்சியாக காட்டியது.
அதற்கு பின்னால் நடந்தது மிகப்பெரும் தலைகீழ் வாழ்க்கை மாற்றம் சபரீசனுக்கு நடந்தது. கைது, வக்கீல், நீதி மன்றம் அவரை அலைக்கழிக்க, இறுதியாக பத்தாண்டுகள் சிறைத்தண்டனையை பெற்றார்.
செய்யாத குற்றத்துக்கு தண்டனை, தான் என்ன செய்தோம் அந்த கோபாலுக்கு? இப்படி ஒரு பொய்யை சொல்லி நீதிமன்றத்திலும் அதை சொல்லி தனக்கு தண்டனை வாங்கி கொடுத்து விட்டானே, என்னும் சுய பச்சாதாபத்திலேயே உருக்குலைந்து போனார்.
தண்டனை முடிந்து வெளியே வந்தவர், சமூகத்தில் தனக்கு கொடுக்கப்பட்ட அவமானங்களை கண்டு மிரண்டு விட்டார். தனது படிப்பு, பட்டம், எல்லாவற்றையும் மறந்து ஏதேதோ தொழில்கள் செய்து வாழ்க்கையை ஓட்டினார்.
அதிர்ஷ்டமாய் கிடைத்த இந்த நிறுவனத்தில் மேனேஜர் பதவி இப்பொழுதுதான் அவரை தகுதியுள்ளவனாக ஆக்கி அழகு பார்த்தது. அதற்கும் வேட்டு வைக்க எங்கிருந்தோ கோபாலன் முளைத்து விட்டான்.
இனி என்ன இருக்கிறது தன் வாழ்க்கையில்? இனிமேல் போராட முடியாது, இன்று இரவுடன் தனது வாழ்க்கையை முடிவு செய்து கொள்ள வேண்டும். மனதுக்குள் ஒரு முடிவுக்கு வந்தவுடன் மனம் சற்று அமைதியானது.
இரவு தனது கையில் இருந்த கைபேசியில் மணி பார்த்தார். ஒன்பதை காட்டியது. இன்னும் ஒரு மணி நேரம், பத்து மணிக்கு தயாராக வேண்டும். அவ்வளவுதான், தன் கட்டிலின் அருகில் இருந்த தூக்க மாத்திரைகளின் புட்டியை பார்த்தார்.
கடிதம் எழுதலாமா? ஏன் எழுத வேண்டும்? செய்யாத குற்றத்துக்கு கிடைத்த தண்டனை, நிர்வாகம் தன்னை அவமதித்தது, இன்னும் எத்தனை எத்தனை அவமானங்கள், இதை எல்லாம் எழுதி தன் மரணத்திற்கு பரிதாபம் தேடவா?
தட்..தட்..கதவை யாரோ தட்டும் சத்தம்..
யார் இந்த நேரத்தில்.? எழுந்து முன்னறைக்கு வந்து கதவை திறந்தார்.
ஒரு இளம் பெண் பயத்துடன் நின்றிருந்தாள், சார் உங்க மூணாவது வீட்டுல குடியிருக்கறோம் சார், பக்கத்துல யாருமில்லை சார், அதான் சார் உங்க வீட்டை தட்டினேன் சார், திடீருன்னு என் வீட்டுக்காரரு மயங்கி விழுந்துட்டாரு, என்ன பண்ணறதுன்னு தெரியலை, ப்ளீஸ் ப்ளீஸ் என் கூட வந்து ஹெல்ப் பண்ணுங்க சார்.
இந்த சமூகத்தின் மீது கொண்டிருந்த கோபத்தில் சட்டென கதவை சாத்தி விடலாம் என்று நினைத்தவர், ஒரு நிமிடத்தில் தன்னை மாற்றிக்கொண்டு சட்டை அணிந்தபடியே அந்த பெண்ணின் பின்னால் வீட்டிற்கு ஓடினார்.
மருத்துவமனையில் சேர்த்து, மூன்று மணி நேரத்தில் அவள் கணவன் காப்பாற்றப்பட்டான். அந்த பெண்ணுடன் பயந்தபடியே ஓண்டிக்கொண்டு நின்றிருந்த இரண்டு குழந்தைகளை இரக்கத்துடன் பார்த்தார்.
மருத்துவர் சொன்னது ஞாபகம் வந்தது, சார் இந்த கேஸ் “சூசையிடு அட்டெம்ட்டு” நாங்க தலையிட கூடாது, ஆனா படிக்கறப்ப, உங்களோட “ஆர்டிகிள்ஸ்” நிறைய வாசிச்சிருக்கேன். உங்க போட்டோவும் அடிக்கடி “மெடிக்கல் ஜேர்னல்ஸ்ல” வரும். நீங்களே என் முன்னாடி இந்த பேஷண்டை கூட்டிட்டு வர்றப்ப, அந்த பேஷண்டை காப்பாத்த இதை விட ஒரு சான்ஸ் எனக்கு கிடைக்குமா சார்?
சபரீசனுக்கு தன் காதுகளை நம்ப முடியவில்லை. இப்படி ஒரு மருத்துவர் இன்னமும் தன்னை ஞாபகம் வைத்துக்கொண்டு பேசுவதை கேட்பது.
அதுவரை அவரிடம் இருந்த சமூக வெறுப்பு குறைந்தது.
விடியற்காலை ‘டாக்சி’ ஒன்றில் வீட்டை அடைந்த போது விலையுயர்ந்த கார் ஒன்று அவர் வீட்டு முன்னால் நின்று கொண்டிருந்தது.
இவர் இறங்கி வருவதை பார்த்ததும் காரில் இருந்து இறங்கிய மூவரை பார்த்ததும் அதிர்ச்சியாகி போனார். பதினைந்து வருடங்களுக்கு முன்னால் இவர் பணிபுரிந்து கொண்டிருந்த மருந்து ஆராய்ச்சி நிறுவனத்தின் உயர் மட்ட குழு உறுப்பினர்கள்.
ஒரு நிமிடம் என்ன செய்வது? என்று திகைத்து நின்றார். இவர்கள் அவரின் அருகே வேகமாக வந்து அணைத்து கொண்டனர். எங்களை மன்னிக்கணும் சபரீசன். உங்களை ‘செய்யாத தப்புக்காக’ இத்தனை வருசம் ஜெயில்லயும், வெளியிலயும் கஷ்டப்படுத்திட்டோம். அந்த கோபாலனை நம்பிட்டோம். தயவு செய்து எங்களை மன்னிச்சுக்குங்க. நீங்க மறுபடி இந்த கம்பெனியோட தமிழ்நாட்டுக்கு மொத்தமான பொறுப்பை எடுத்துக்கணும்.
சபரீசனுக்கு தான் காண்பது கனவா நினைவா புரியாமல் நின்றார், என்றாலும் மெல்லிய குரலாய் இப்ப மட்டும் எப்படி உண்மையை கண்டு பிடிச்சீங்க?
போனவாரம் கோபாலன் வேலை செஞ்சுகிட்டிருந்த கம்பெனியோட பதிவு செய்யப்பட்ட டேப்பை யதேச்சையா போட்டு பாத்திருக்காங்க. அப்ப அவன் “ ரிகார்டு மெசேஜா” அந்த சபரீசன் நம்ம ‘டீலுக்கு’ ஒத்துக்கமுடியாதுன்னும், எனக்கு பெரிசா ஆசையும் இல்லை அப்படீன்னு சொல்லிட்டான்.” இந்த பதிவை முதல்ல அவன் கம்பெனிக்கு மெசேஜா கொடுத்திருக்கான். அப்பபுறம் நேர்ல வேற மாதிரி சொல்லியிருக்கான். அவரு “டீலுக்கு” ஒத்துகிட்டாருன்னு. அவங்களும் அதைய நம்பி உங்களுக்கு எதிரா சாட்சி சொல்லியிருக்காங்க. இந்த விசயம் கிடைச்ச உடனே உங்களுக்காக வருந்தி உங்க கிட்ட மன்னிப்பு கேட்டதா சொல்லி எங்களுக்கு அனுப்பிச்சாங்க. நாங்க இது கிடைச்ச உடனே உங்களை சிரமபட்டு கண்டு பிடிச்சு இங்க தேடி வந்தோம்.
ஐயாம் சாரி, அப்படீன்னு சொல்லிட்டா உங்களுக்கு நடந்த அநியாயம் நியாமாயிடாது. ஆனா எங்கனால உங்களுக்கு ஏற்பட்ட மன உளைச்சல், அவமானங்கள், எல்லாத்துக்கும் நாங்கதான் காரணம் அப்படீன்னு நாங்களே வெளிப்படுத்தி உங்களை இந்த சமூகத்துல உயர்ந்த இடத்துல வைக்க விரும்பறோம்.
சபரீசன் சட்டென தன் பழைய புன்னகையை உதிர்த்தவர் “ஐயா நான் அந்த கோபாலனுக்கு சொன்னதுதான் இன்னைக்கும் சொல்றேன்” எனக்கு எந்த விதமான ஆசைகள் இல்லை, மிக சாதாராண மனுசனா இருந்தா போதும்” என்னோட கல்வி, திறமை மத்தவங்களுக்கு உபயோகமானா போதும்.
அன்றிலிருந்து இன்றுவரை “சபரீசன்” மாதிரி ஆட்களைப் போல வாழ்க்கையை ஒரே மாதிரியாக எளிமையாக கடந்து செல்ல வேண்டும் என்று நினைப்பவனுக்குத் தான் இந்த சமூகம் எத்தனை கொடுமைகளை செய்து வேடிக்கை பார்க்கிறது

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (30-Dec-25, 2:02 pm)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 11

மேலே