சிக்னல்

சிக்னலில் நாம் காத்திருக்கும்போது , நம்மைச் சுற்றி நிற்பவர்கள் வெறும் மனிதர்கள் மட்டும் அல்ல..பலவித உணர்வுகளின் எதிர்பார்ப்புகளின் எண்ணங்களின் சங்கமங்கள்...


புதிதாக வாகனம் ஓட்டக் கற்றுக் கொள்பவர்களுக்கு , சிக்னலைப் போல் குழப்பமும் பயமும் கொடுப்பது எதிரில் வரும் லாரி கூடக் கிடையாது..


ஒரே எண்ண ஓட்டத்தில் பலவித முரண்பாடுகளை உள்ளடக்கியது இந்தச் சிக்னல் காத்திருப்பு..


இந்தச் சிக்னலைத் தாண்டி அந்தப் பக்கம் போனால் பிரிந்து வேறு வேறு திசையில் சென்று விட வேண்டி இருக்கும் நட்புகளுக்கும் உறவுகளுக்கும் , சிக்னலைத் தாண்டிப் போய் , தான் கடன் வாங்கியவரிடம் வட்டிக்குத் தவணை சொல்லக் காத்திருப்பவருக்கும் , இந்தச் சிக்னல் இன்னும் கொஞ்சம் நேரம் நீள வேண்டும் என்று தோன்றி இருக்கக்கூடும்..


அன்றே முதன் முறையாகத் தன் காதலைச் சொல்லக் காத்திருப்பவனுக்கும் , விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடும் தன் குழந்தையைக் காண மருத்துவமனைக்கு விரைந்து கொண்டு இருப்பவனுக்கும் , இந்தச் சிக்னலின் ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு யுகமாகத் தோன்றி இருக்கக்கூடும்..


ஐந்து நிமிடம் முன்னாடி வந்து இருந்தால் , தன் தாயிடம் இறுதியாய் இரண்டு வார்த்தைகள் பேசி இருக்கலாம்' என்று , தன் தாயின் உடலைப் பார்த்துத் துடிக்கும் மகனின் தவிப்பு , எப்போதுமே அந்தச் சிக்னலுக்குப் புரியப் போவதே இல்லை..


முண்டியடித்து முன்னால் சென்று நின்று விட வேண்டும் என்பதே ஒரே லட்சியமாகக் கொண்டு , நெருக்கித் தள்ளிக் கொண்டு குறுக்கே செல்பவனை ஏசிக் கொண்டு , ஏன் இப்படி மனிதத் தன்மையே இல்லாமல் நடந்து கொள்கிறான் ' என்று மற்றவர்கள் நினைக்கும் அளவுக்கு முன்னால் சென்று வண்டியை நிறுத்துபவர் கூட , ஒரு ஆம்புலன்சின் சைரன் சத்தம் ஒலிக்கும்போது , ஓரமாகப் போய் ஒதுங்கி நின்று வழிவிடுவது , நெகிழச் செய்யும் நிகழ்வு..


சேலைத் தலைப்பு சக்கரத்தில் சிக்கப் போகுது , பாத்துங்க' என்று பக்கத்து வாகனப் பெண்மணி எச்சரிக்கும்போது , சின்ன நட்பொன்று உருவாகி மறையும்..


பல நேரங்களில் , நாம் தொலைத்து விட்ட நம் பழைய நட்பைக் கண்டுபிடிக்கும் இடமாகக் கூட அமைந்து விடுகிறது இந்தச் சிக்னல் காத்திருப்பு..


சமயங்களில் , இலட்சியங்கள் உருவாகும் இடமாகக் கூட மாறி விடுகிறது இந்தச் சிக்னல் , அது சிறியதோ பெரியதோ..


முன்னால் நிற்கும் பெண்ணின் புடவையைப் பார்த்து , 'சே எவ்வளவு அழகான புடவை , நாமும் இதே மாதிரி ஒரு புடவையை எப்படியாவது தேடித் புடிச்சு வாங்கிரனும்' என்று ஒரு அக்கா முடிவு செய்து இருக்கக் கூடும்..


முன்னால் நிற்கும் அந்தப் பெரிய காரைப் பார்த்து , 'அப்பா நாமும் இதே மாதிரி கார் வாங்கலாம் பா' என்று சிறுவன் கேட்கும்போது , 'நிச்சயமாய் வாங்கலாம் கண்ணு' என்று சொல்லும் தந்தையின் மனதில் அந்தப் பெரிய கார் , ஏக்கமாகவும் இலட்சியமாகவும் பதிந்து போகும்..


சிக்னல் விழுவதற்குள் தாண்டிப் போய் விடவேண்டும் என்று அவசர அவசரமாய்க் கடக்கும்போது சர்வசாதாரணமாக , கண்ணிமைக்கும் நேரத்தில் கொடூர விபத்தொன்று நடந்து முடிந்து விடும்..உயிரை விட்டு விடவும் தயாராய் இருக்கும் சிலர் , ஒரு நிமிடம் பொறுத்திருந்து செல்லத் தயாராய் இருப்பதே இல்லை..அன்று நடந்து போன ஏதோ ஒரு சம்பவமாய் , ஒரு செய்தியாய் அது அன்றோடு மறந்தே போகும்..


நேரத்தைக் கடத்த மட்டுமே ஊரைச் சுற்றும் சிலருக்கு , முன்பு இருந்த அரை மணி நேரம் போல் , இது மற்றுமொரு 'ஒரு நிமிடம்' அவ்வளவே..


சிக்னலில் காத்திருக்கும் அனைவருமே , அந்தச் சிக்னலைத் தாண்டி அந்தப் பக்கம் விரிந்து கிடக்கும் ஏதோ ஒன்றைத் தேடியே ஓடிக்கொண்டு இருக்கிறார்கள்..


பலரது சந்தோசங்களுக்கும் சோகங்களுக்கும் கொண்டாட்டங்களுக்கும் இழப்புகளுக்கும் , தனக்கேத் தெரியாமல் காரணமாகி விடும் அந்தச் சிக்னல் , தன்னந்தனியாய் ஒளிர்ந்து கொண்டு இருந்தது , சாலையில் யாருமே இல்லாத அந்த ஒரு நிமிடத்திலும்...!!!



- கிருத்திகா தாஸ்...

எழுதியவர் : கிருத்திகா தாஸ் (28-Mar-15, 10:22 am)
Tanglish : siknal
பார்வை : 158

மேலே