கண்மணிகளின் கனவுகள்-ரகு
அமானுஷ்யக் கனவில்
அதிர்கிறது பொழுதுகள்
எவ்வாறேனும்
நிகழ்ந்து விடுகிற வன்புணர்வில்
உதிர்கிற பூக்களை
ஏந்துகிற மண்ணில்
ஈரங்கள் கிறுக்கத் தொடங்குகிறது
ரத்தவாடையை
அன்பின்
வெளிப்பாடுகளில் கூட
முத்தமும் அரவணைப்பும்
அருவெறுப்பாகிறது
சேலை சுடிதார்
தொடர்ந்து இப்போது
சிற்சிறு கவுனுகளும்
சிதறுகின்றனத் தெருக்களில்
தாடிவைத்தவனோ
மீசையற்றவனோ இன்னபிற
இரண்டுங் கெட்டான்களோ
முகர்ந்து ஓடுகிற
காவல்நாய்கள் அறிந்திருக்க
வாய்ப்பில்லை அவ்விதத்
தேடலின் அவசியத்தை
வழக்குகள்
வாய்தாக்களாய்த் தூர்ந்து
வேசி மகன்களை
விடுவித்துவிட
சட்டத்தின் ஓட்டைக்குள்
புதைக்கப் படுகின்றன
கண்மணிகளின் கனவுகள்
உயிர் பறிபோனப்
பூக்களின் மீது
ஈரத்துணியாய்க் கிடக்கிறது
நஷ்டஈடும்
எங்கோ விசும்பும்
ஒரு தாயின் ஒப்பாரியில்
சுவாசத்தைச் சுட்டு
தகிக்கிறது காற்று இப்போதும்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
