சாகா மருந்து சித்ரா ராஜ்

சாகா மருந் துண்டு
சர்வ பலம் பெற்று
தேவ லோகத்தில் கோலோச்சும்
தேவர்களின் கவனப் பிசகில்
சிதறிய அமுதத்தின்
சிறுதுளி ஒன்றிணைந்து
தொடுவானம் வழி வழிந்து
தூவானமாய் விழுந்து ்
பூமி வந்து
குப்பிக்குள் அடைபட்டது...
அமுதம் கிடைத்த
செய்தி செவி வழி பரவி
செம்மை பட்டுக் கிடந்தது
அரசியலில் பழந் தின்று
கொட்டை போட்டு
தொண்டனுக்கு நாமம் போட்டு
கோடிகளை குவித்த
கேடி அரசியல் வாதிக்கு
உள்ளூர ஆசை உருப் பெற்றது
தன்னிகரில்லா தலைவனாய்
சங்கத்தின் சிங்கமாய்
அரியணையைவிட்டுக் கொடுக்கா
அர்த்த சாத்திர மறிந்த
நாம் ஏன் இறக்க வேண்டும்
மூப்பு ஏன் நமை ஏய்க்க வேண்டும்
பதுக்கிய செல்வம்
பாழ் பட்டுப் போய்விடுமே
கறுப்பு பணம் யாவும்
நிறம் மாறி போய்விடுமே....
நீடித்து வாழ்ந்து விட்டால்
நீலக் கடல் திரித்து
நிலமாய் கையகப் படுத்தி
நிலாவில் கிளை பரப்பி
அங்கும் கழகம் நிறுவி
இரண்டு, மூன்று கிரகம் வாங்கி
வாரிசுக்கு சொத்தாக்கி
வாழையடி வாழையாய்
வாழ்வாங்கு வாழலாமே....?
அனைத்தும் கண்ட இறைவன்
அசந்தே போனான்
மரணம் உண்டெனும் போதே
பணத்திற்கும் பதவிக்கும்
நாக்கை தொங்க விட்டவன்
சாவே இல்லா சாஸ்வதம் பெற்றால்
என்னைக் கொன்று
ஏழு லோகமும் பிடித்திடுவானே?
அரக்கனை விட
அரசியல் வியாதி கொடிது
அலறிய கடவுள்
அழித்தே விட்டான்
அமுத குப்பியை....

எழுதியவர் : சித்ரா ராஜ் (8-Apr-15, 8:56 pm)
பார்வை : 121

மேலே