காதல் அழிவதில்லை

மாலை நேரம்! ஏகாந்தவேலை!
கல்லூரிச் சொர்க்கவாசல் திறந்தது!
திருவிழா வீதியில் வலம் வந்த சாமியைக் காண அலைமோதும் கூட்டத்தில் அவனும் ஒருவன்!

முட்டிமோதி முன்னவன் தலைமீதேறி எப்படியும் கண்டுவிட்டான் அந்த அழகு தேவதையை!

அவள் ஓரக்கண் பார்வையில் தொலைத்த இதயத்தைப் பின்தொடர்ந்தான், மீட்பதற்காகஅல்ல!
மீண்டும் மீண்டும் தொலைப்பதற்காக!

அவள் ஏறிச்செல்லும் சிற்றுந்து ரதமானது!
அந்த ரதத்தின் ஓரத்தில் இவனுக்கும் ஓர் இடம் கிடைத்தது!

இவன் கேட்காமலே சீட்டு கொடுத்தார் நடத்துநர் அவள் இறங்கும் இடத்திற்கு!

பாதையில்
அவள் விழியொளியின் வெளிச்சத்தில் மங்கித்தான்
போயினவோ
தெருவிளக்கு!

இதயத்தைக் களவிழந்து
கனவுகளைச் சுமந்தபடி
திரும்பிவந்தான் வீட்டிற்கு!

நாட்கள் நடந்தன
கடிகாரத்தைக் கயிற்றைக்கட்டி இழுத்தான்!

அரண்மனைக்கிளியை தொலைவில் ரசித்திருந்தவன் துணையாக்கத் துணிந்துவிட்டான்!

பொறுமையிழந்தவன்
தன் பேனாமையிடம் ஒப்படைத்தான்
பொறுப்பை!

அன்புக்கடலுக்கு அணைகட்டி வைத்திருந்தான்
மடைதிறக்கும் சாவியானதவன்
பேனாமுள்!

உயிரற்ற காகிதத்தில்
உயர்வைத்தான்!

மடைதிறந்தது வெள்ளம்
கொட்டியதவன் உள்ளம்!

இதயத்தை நான்காக மடித்து
இதயத்தின் ஓரத்தில் வைத்தான்!

மகிழ்ச்சியும் வருத்தமும் கலந்த முகம்,
அன்றுமட்டும் ஏனோ
அழகாய்த் தெரிந்தது
அவன் அடிக்கடி பார்த்த
கண்ணாடியில்!

புதிதாய்த் தெரிந்தான்
புதிதாய் நடந்தான்
வழக்கம்போல் தொடர்ந்தான்
வழக்கமான துணிவின்றி!

அவள் கண்பார்த்து மயங்கியவன்
மண்பார்த்து மடல்கொடுத்தான்
கண்பார்க்கத் துணிவின்றி!

அவள்,
அச்சம்
மடம்
நாணம்
பயிற்ப்பு
நான்கின் மொத்தத்தின் மௌனத்தில்
பெற்றுக்கொண்டாள் மொத்தத்தை!

மடித்ததைப் பிரித்தவள் படித்தாள்
மடைதிறந்த வெள்ளத்தில்
அலைபாய்ந்தது அவள் உள்ளம்!

என்றோ பிறந்துவிட்ட குழந்தைக்கு
இன்றுதான் பெயர்வைத்தனர்
காதல் என்று!

வெட்கமும் கூச்சமும்
விலகின
இதயங்களும் கைகளும்
இணைந்தன!

சிற்றுந்து நடத்துநருக்கு
சில்லரைப் பிரச்சனை
தீர்ந்தது!

சுதந்திரப் பறவைகள்
சிறகடித்துப் பறந்தன
நாட்களையும் அழைத்துக்கொண்டு!

அன்றொருநாள்
இருவரும்
இறந்தகால நாட்களை
நிகழ்கால நிலவொளியில்
பரிமாறிக்கொண்ட காட்சிகண்டு
எதிர்காலக் கனவுகளை
இழந்து நின்றார் அவள் தந்தை!

போர்மூண்டது!
காதல்கோட்டையை இடிக்க
சாதிக்கனைகள் தொடுக்கப்பட்டன!

சுதந்திரப்பறவை
சிறைப்பறவையானது!

காதலின் கருணையில்
இறுதிப்போரில் வென்றது
இவர்களே!

இவர்கள் ஓடிப்போகவில்லை
வாழப்போயினர்!

ஐயர் மட்டும் சாட்சிகொண்டு
நடந்தது திருமணம்

வந்தாரை வாழவைக்கும்
சென்னை இவர்களையும்
வாழவைத்தது!

அன்பான கணவனுடன்
அழகான வீட்டில் ஆறாவது மாடியில்
வசித்துவரும்
அவள்
அலைபேசியில்
அழைத்தாள்
அவனுக்கு!

"அப்பா வராருங்க
ஆபீஸ்க்கு லீவ் போடுங்க"

அனைத்தையும் அப்படியே போட்டுவிட்டு
பலவருடம் கழித்து மாமனாரின்
கோபம் தணிந்த பாசமுகம் காண
ஓடிவந்தான் வீட்டிற்கு!

முதல் படியில் கால்வைத்தவன்
உணர்ந்தான் பூமித்தாய்
கைவிரித்ததை!
ஓடினான் ஆறாவது மாடிக்கு
மேசையும் நாற்காலியும்
நகரத் தொடங்கின!

கண்டான் அவளை
கண்டவன் கட்டி அணைத்துக் கொள்ள
இறந்தாலும் பிரிந்துவிட
வேண்டாமென்றவள் சொல்ல

இடிந்தன சுவர்கள்
விழுந்தன கற்கள்
பிரிந்தன உயிர்கள்
பிரியாமல் இனைந்தே
இருந்தன உடல்கள்!!!

மற்றவர்களுக்கு இவர்கள்
உடல்இணைந்து உயிர் பிரிந்தனர்

இவர்களுக்கு இவர்கள்
இணைந்த உடல் பிரிந்து உயிரிணைந்தனர்.

காதல் அழிவதில்லை!!!!!
.

எழுதியவர் : த.கோபாலகிருட்டிணன் (9-Apr-15, 12:32 am)
பார்வை : 128

மேலே