தலைமுறைத் திருடர்கள் -ரகு
விலங்குகள் தாம்
விலங்கென அறிந்திருக்கும்
பறவைகளுக்குத் தாம்
பறவை என்பதும் புரிந்திருக்கும்
ஆனால்
மனிதனுக்கு மட்டுமே தான்
மனிதனா என்கிற தேடலின் சாபம்
அன்று ஆன்ம பரிகாரத்தோடு
வீதியுலா வருமெந்தன்
பாதந் தரிசித்தனர்
லட்சோப லட்சம்பேர்
என்பவன் ஆயுள் கைதி இன்று!
கொலை கொள்ளை முடித்த கையோடு
அன்னதானம் அன்பளிப்பு
நான் நல்லவனா ? கெட்டவனா ?
கேட்கிறவனோ தனக்குத் தானே
யோகி எனப் பெயரிட்டுக் கொண்டவன் !
என்னை மீறி
எல்லா பாவங்களும்
நடந்து விடுவதாகக் கூறி
பாவமன்னிப்புக் கேட்குமொருவன்
தவறாமல் வந்து விடுகிறான்
வாரா வாரம்
சக மனிதர்களைச் சிதறவிட்டும்
தீவிரவாதமூற்றி மதம் வளர்த்தும்
என்னிலும் கொஞ்சம்
மனிதம் வை என்றொருவன்
மன்றாடுகிறான் மண்டியிட்டு!
தலைமுறைக்கும்
சொத்து சேர்த்தாயிற்று
இனி தானம் தருமமே எனும்
வெண் சொக்காக்காரனின்
வாழ்க்கையைத் திரும்பிப்பார்த்தபோது
அத்தனையும் கழிசடை!
விளக்குகள் எரியும்
மரங்களென ஊருக்குள் வரும்
விலங்குகளை விடுங்கள்
இன்னமும் மனிதன்
காட்டுக்குள்தான் இருக்கிறான்!