அவனுக்கான சில அடையாளங்கள்
புதுவரவுகளில்
பிடித்தப் பாடலாய்
இணைந்துக் கொள்ளும்
அவன் பேச்சு...!!
விசேசங்களில்
போடும் மொக்தூளாய்
வண்ணம் மாற்றும்
அவன் பார்வை...!!
ஐஸ் வண்டிகளில்
ஒலிக்கும் மணியாய்
கவனம் ஈர்க்கும்
அவன் பைக் சத்தம்...!!
திருவிழாவிற்கு
கலையும் தூக்கமாய்
விழிக்க வைக்கும்
அவன் ஞாபகம்...!!
வார இறுதிகளில்
அம்மாவின் ஞாயிறாய்
தவிர்க்க முடியாதது
அவன் நினைவுகள்...!!
வேர்களில்
பற்றிடும் தாய்மண்ணாய்
உரிமைக் கொள்ளும்
அவன் கோபம்...!!
குழந்தைகள்
கேட்கும் பொம்மையாய்
மறுக்க முடியாதது
அவன் பிடிவாதங்கள்...!!
மலராத
பூக்களின் நிறமாய்
அழகான இரகசியம்
அவன் முழுக்கை
மடிப்புகள்...!!
சிறுமியில்
கட்டிய சேலையாய்
நினைத்தால் இனிக்கும்
அவன் குறுந்தாடி...!!
அடையாளங்களை
பகிரும் மழையாய்
தூரத்து வாசம்
அவன் தோற்றம்...!!