அழகிய பொய்கள்
பிஞ்சு இதழ்கள் பால்சாதம் சுவைக்க
பால்வண்ண நிலவில் பாட்டி சென்ற
சாகசம் சுவைத்திடுமல்லவா மழலையின் வாயில்...
ஏந்திலை அவள் மச்ச விழிகள் மலர
கவியாய் காதலன் உதிர்க்கும் வார்த்தைகள்
சுகமல்லவா அவள் செவி வருடும்போது...
இன்றே இறுதி என்றே ஆனாலும்
நாளைய பொழுதிற்கான பிரார்த்தனைகள்
நம்பிக்கையல்லவா உடைந்தோர் உள்ளத்தில்...
சுருக்கங்கள் தெரிய மலரும் புன்னகைக்கு
வயோதிக கணவனின் வர்ணனைகள்
இன்பமல்லவா அந்த பேரிளம் பேதைக்கு...
எட்ட இயலா தூரங்கள் எல்லாம்
எட்டிச் செல்லும் கனவுகள்
இதமல்லவா காலை பொழுதின் சோம்பலில்...
கள்ளம் இல்லா புன்னகைக்கு
கோடி பொய்களானாலும்
அவை அழகல்லவா