கனவே கலைந்து போ பாகம்- 22 துப்பறியும் திகில் தொடர்
முன் கதைச் சுருக்கம்
பிரசாத் ஆழ்நிலை உறக்கத்துக்குப் போகிறான்... நடந்த சம்பவங்களை அவன் கோணத்தில் விவரிக்கிறான்...
................................................................................................................................................................................................
அங்கு ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் மூர்த்தியும் சப் இன்ஸ்பெக்டர் காந்தனும் சூடான விவாதத்தில் ஈடுபட்டிருந்தனர்.
“ முதல் இரண்டு கொலைகளை செய்ததும் தான்யாதான்யா! பெண் வேஷம் போட்டு, பொம்பளை குரல்ல நான்தான் நந்தினின்னு சொல்லியிருக்கான். ”
“ ஆமா ! பிரசாத் முகத்தை பார்க்கலேன்னு சொன்னானே? முருகேசன் வீட்டு கார் டிரைவர் கூட எட்ட இருந்துதான் பார்த்திருக்கார். ஃபார்மோபிரின் வித்தவன் குரலைத்தான் கேட்டிருக்கான்! ”
“ கழுத்துல கத்தி வச்சிட்டு ரத்தத்துல நந்தினி பேரை எழுதுடான்னா சற்குண பாண்டியன் எழுதத் தானே செய்வான்? ”
“ இந்த கொலையாளிக்கு பிரசாத்தையும் நந்தினியையும் தெரிஞ்சிருக்கு! நந்தினியோட அக்கா மேலேயும் அக்கறையிருக்கு! ”
“ ஆமாமா ! இல்லாட்டி பஞ்சாபகேசன் வீட்டு கல்யாணத்துல பிரசாத் என்கிற பேரை ஏன் அவன் தேர்ந்தெடுக்கணும்? நந்தினி வீட்டு விலாசம் ஏன் எழுதணும்? ”
“ ஆனா பாரு, அக்கா மேல அக்கறை இருக்கறவன் தங்கச்சிய கொடூரமா கொல்வானா? ”
“ சார், நந்தினியோட அக்காவுக்கு மருந்து கொடுத்திருக்கான். அவன் கொடுத்த அளவுக்கு உயிர் போகாதுன்னு அவனுக்கே தெரியும்! பின்னே சீஃப் டாக்டரை ஏன் பார்த்தான்? ”
“ தான்யாவோட நோக்கம் நந்தினியோட அக்காவை கொல்றதில்லே! தற்காலிகமா போலிஸ் விசாரணையில் இருந்து அவங்களை தள்ளி வைக்கிறதுதான்! ஐந்து நாட்களுக்கு பூரண ஓய்வுன்னு சீஃப் டாக்டர் சொல்றார். அட்டவணையை பாரு! அஞ்சு நாளுக்குள்ள யார் யாரை போட்டுத் தள்ளணுமோ தள்ளி முடிச்சுட்டான்! ”
“ எதுக்காக நந்தினியோட அக்காவை நம்ம விசாரணையில் இருந்து தள்ளி வைக்கணும்? ”
“ அவங்க வாய் திறந்தா செத்தது நந்தினின்னு தெரிஞ்சிடும்! இத்தனை கொலைகளையும் செய்தது நந்தினிதான்னு நம்மை நம்ப வைக்க பார்த்திருக்கான்! ”
“ இல்ல சார், இங்கதான் இடிக்குது! இப்ப பாருங்க! நீங்க கொலை செய்றீங்க... அந்தப் பழி எனக்குப் போகணும்னு ப்ளான் பண்றீங்க! நான் ஏற்கெனவே செத்துட்டேன்! அந்த விஷயம் நம்ம ஏட்டு சுப்பிரமணிக்குத்தான் தெரியும். அப்ப நீங்க என்ன செய்வீங்க? ஒரேயடியா சுப்பிரமணி வாயை அடைப்பீங்களா? இல்ல, கொஞ்ச நாளைக்கு அடைப்பீங்களா? ”
“ நான் ஒரேயடியாதான்யா அடைப்பேன் ! ”
சற்று நேரம் யோசித்து விட்டு மூர்த்தி கூறினார்.
“ அந்த நந்தினி சடலத்தை முகத்தை சிதைக்கிறதுக்குப் பதிலா முழுசும் சிதைச்சிருந்தா விஷயம் கொஞ்சம் கூட வெளியே தெரிஞ்சிருக்காது ! ப்ளான் பண்ணி கொலை பண்றவன் தப்பிக்கத்தான் பார்ப்பான் ! கடத்தல் பண்றியா? இதுதான் கதின்னு சொல்லி அடிக்க மாட்டான்! ”
சற்று நேரத்தில் அவர்களது நண்பர், போதை தடுப்புப் பிரிவில் இருப்பவர் ஃபோன் செய்தார்.
“ செய்தி கேட்டீங்களா? முதல் மந்திரி எங்களை வானளாவப் புகழ்ந்தார். தமிழகத்தில் போதை சாம்ராஜ்யம் தரை மட்டமானது ! காரணம் உங்கள் அயராத உழைப்புன்னு சொல்லிட்டார் ! ”
“ அடப்பாவி ! தான்யா பயிரிட்டா நீங்க பலனை அறுவடை செய்றீங்களா? ”
நண்பர்கள் உரையாடல் இனிமையாகத் தொடர்ந்தது!
“ சார், நம்ம பிரசாத் போலிஸ் வேலையில செலக்ட் ஆயிட்டாராம்..., ! இனிப்பு கொண்டு வந்து கொடுத்துட்டு நம்ம சாருங்களோட போனார்.... ! இந்தாங்க ! ”
அங்கு ஆழ்ந்த உறக்க நிலையில் பிரசாத் பேச ஆரம்பித்தான். எதிரில் டாக்டர் மேகலா, உயரதிகாரிகள் ஆனந்த் மற்றும் முரளி.
“ ஆகஸ்டு இருபது அன்னிக்கி நந்தினி என்னை கூப்பிட்டாங்க! தங்கச்சி உயிரோடதான் இருக்கா; போய் அழைச்சிட்டு வரணும்னு சொன்னாங்க. ஆட்டோ மேம்பாலத்துல வந்த போது கெட்ட ஆவி ஊசி மருந்தை எடுத்தது. நந்தினிதான் ஊசி மருந்தை அதுக்கே திருப்புனாங்க. கெட்ட ஆவி என்னை தள்ளி விட்டுச்சு. நந்தினி காப்பாத்தினாங்க. கெட்ட ஆவி மயக்கமாயிடுச்சு. நானும் நந்தினியும் பிரியமா பேசிட்டே வந்தோம். நந்தினி இனி இவளை சும்மா விடமாட்டேன்னு கோபமா பேசினாங்க. நான் ஹோட்டல் குருபிரசாத் கிட்ட இறங்கிட்டேன். ”
“ அப்புறம்? ”
“சூட்கேஸை கையில எடுத்தேன். அழுகின வெங்காய வாடை வந்தது. பஸ்ஸேறி மேன்சன் போயிட்டேன்.... ! ”
“இங்க பாருங்க பிரசாத்! முதல் சடலம் நந்தினியோடது. அப்ப நந்தினியை கொலை பண்ணது யாரு? ”
“மேடம், முதல் சடலம் நந்தினியோடதாயும் இருக்கலாம்; வினோதினியோடதாயும் இருக்கலாம்னு சொன்னது நான் ! நந்தினியோட உயிருக்கு ஆபத்துன்னு எனக்குத் தெரியும். நந்தினியை கடத்தல்காரங்க கொன்னிருக்கலாம்! கடத்தல்காரங்களை வேறு யாராவது கொன்னிருக்கலாம் ! எது எப்படி இருந்தாலும் இன்னைக்கு நந்தினி இல்ல! நந்தினி இல்ல! ”
பிரசாத் குலுங்கி குலுங்கி அழுதான் !
“ பிரசாத் ! தப்பா எடுத்துக்காதீங்க ! நந்தினியை கொலை பண்ணது நீங்களா? ”
“ இல்லை மேடம், இல்லை ! நான் எப்படி நந்தினியை...? ”
பிரசாத் துடித்துப் போனான்.
“ சரி, கெட்ட ஆவியை விரட்டியது நீங்களா? ”
“ நான் அவ்வளவு பெரிய ஆளில்லே மேடம் ! கெட்ட ஆவி கிட்ட இருந்து என்னை காப்பாத்தினதே நந்தினிதான்..... ! ”
“ கற்பகா காம்ப்ளக்ஸ் சூட்கேஸ் நந்தினி சடலத்து கிட்ட கிடந்தது பிரசாத் ! ”
“ அதனால? அந்த சூட்கேஸ்ல உள்ளது ஒரு நடிகைக்குத் தேவையான பொருள்கள்தான். நந்தினியும் நடிகைதான். எனக்குத் தோழியும் கூட. என் கிட்ட கேட்டு அந்த சூட்கேஸை அவங்க எடுத்துட்டு போயிருக்கலாம் ! ”
“ மற்றவங்க மரணத்துக்கும் உங்களுக்கும்? ”
“ மற்றவங்கன்னா யாரு? ”
“ முருகேசன், சற்குண பாண்டியன், சட்டநாதன், பஞ்சாபகேசன் ! ”
“ முருகேசன் இறந்தது எனக்குத் தெரியும். பேப்பர்ல படிச்சேன். மற்றவங்க இறந்தது நீங்க சொல்லித்தான் தெரியும்; இவங்க மரணத்துக்கும் எனக்கும் ஒரு சம்பந்தமும் இல்ல ! இன்னும் சொல்லப் போனா இவங்களை அந்த அளவுக்கு எனக்குத் தெரியாது ”
பல முறை பல மாதிரி கேட்டும் இதற்கு மேல் பிரசாத்தால் பதில் சொல்ல முடியவில்லை!
தொடரும்