ஞானத் தங்கம்
அவனோட ஆபீஸ் தரைத்தளத்தில இருக்குது. அதால அடிக்கடி இந்த பாதயாத்திரைக்குப் போறவங்கள்லிருந்து கைதட்டி வரும் அரவாணிகள் கூட்டம் வரை நாளும் சில்லறை கேட்டு வருவதும், ரயில் பயணங்களைப் போலவே சிலமுறை கொடுத்தும் சிலமுறை கடுத்தும் (அவங்ககிட்ட இருக்கனுமுள்ள? ) அனுப்பி விடுவதும் அவுங்க வாடிக்கை.
அது இருக்கட்டும். இன்னைக்கு அவன் மட்டும் சாவி, கிறுக்கின குறிப்புகள், சார்ஜர், ஹெட் போன், போனு, ஸ்டாப்லெர், வாட்டர் குப்பி மற்றும் லாப் டாப்பு என சகலமும் கலைந்திருந்த மேசையின் முன் அமர்ந்து எதோ முக்கியமில்லாத வேலையை முக்கி, முக்கியமாகச் செய்து கொண்டிருக்க புதிதாக ஒரு அரவாணி காசு கேட்டு உள்ளே வந்தார்.
அவன் லேசா வெறுப்போட, ”இந்தாம்மா, நேத்துத்தானே உங்க குருப் வந்து காசு வாங்கீட்டுப் போனீங்க. இப்ப மறுபடி இன்னைக்கு கேட்டா நாங்க எங்க போறது?.” எனக் கடுக்க...
“இல்ல ராசா, நான் அடிக்கடி வரமாட்டேன். உனக்கே தெரியுமில்ல, திருவிழாவுக்குப் போகணும். அதான் வந்தேன்.” என நீட்டி முழக்கியபடியே மேசை மேலிருந்த விகடனை எடுத்துப் புரட்ட, திடீருன்னு அந்த அரை முழுக்க ஒரு பேட் ஸ்மெல்லோ/செண்டோ பரவி அவனுக்கு மூச்சு முட்டிடுச்சு.
கோபத்தோடு ஒரு பத்து ரூபாயை எடுத்து நீட்டி “ம்ம்...உடனே எடத்தக் காலி பண்ணு, எனக் கத்திய அவனை....”ம்ம்ம்.........நேரம்” என்பததைப் போல முறைச்சுக் கிட்டே கிளம்பினார் அந்த அரவாணி.
அப்பறம் கொஞ்ச நேரங் கழிஞ்சு, செமப் பசியாக லாப் டாப்பை க்ளோஸ் பண்ணீட்டு சும்மா கின் கின்னு சாப்பிடப் போலாமுன்னு, கிளம்பி வண்டி சாவியத் தேடறான், தேடறான்ன்ன்.... கானோம்.....
அய்யய்யோ, வண்டியிலேயே விட்டுட்டேனோ? ( சாவியக் கானலன்னா உடனே எல்லாருக்கும் வர்ற மைன்ட் வாய்ஸ் இதுதான் ) என்று முனகியபடியே மேசையிலிருந்த அத்தனையையும் எடுத்துப் போட்டு மேல கீழ எல்லாந் தேடி வெளில ஓடி, வண்டியில தேடி...... ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்...............
மூச்சிறைக்க பரபரக்குற அவனைப் பாவமாப் பாத்துட்டு பக்கத்து மளிகைக் கடை ராஜாத் தம்பி என்னனு வந்து விசாரிச்சு, “நல்லாப் பாருங்கண்ணே இங்கனதான் கிடக்கும்” என்று சொன்னபோது அவனுக்கு ஆத்திரமே வந்தது..
“ டூப்ளிகேட் சாவி போடுற இடம் தெரியுமா?, போன் நம்பர் இருக்கா ராஜா.? கூப்பிட்டா வருவாங்களா?” பசிவேறு அவனுக்கு, புலம்பினான்......... அதைக் கேட்டவாறே ராஜாவின் கண்கள் சாவியைத் தேடின.
“ இல்லப்பா, நான் டேபிள் மேலதான் வச்சிருந்தேன். ஏப்பா அந்த அரவாணி வந்து போச்சுல்ல இப்போ?,” என்றவுடன் “ஆமாண்ணே அதுக்கு?” என்றவன் நிமிர “கொஞ்சங்கோவமா திட்டிட்டேன். அது கீது சாவியை களவாண்டு போயிருக்குமோ? அது வேற ஒரு மாதிரியா முறைச்சுட்டே போச்சு போகையில. அதைத் தெரியுமா உனக்கு.?..”
“ ஹலோ எனக்கு எப்டித் தெரியும்ங்க.. விளையாடறீங்களா? ”, சாவியை எங்க வச்சீங்களோ தெரியல. அதத் தெரியுமா, இதத் தெரியுமானுட்டு, பர்ஸ்ட் நல்லாத் தேடுங்க......ம்ம்.... அது எதுக்குண்ணே எடுக்கப்போவுது...?.” என்று ரிலாக்சானவனை ஒரு போலீஸ் பார்வையை வீசி வெறுப்பேற்றினான்.
ராஜா அங்கயும் இங்கயும் தேடிட்டிருக்க இவன் மூளை அந்த அரவாணி வந்து போன காட்சிகளை பார்வேட் ரீவைண்ட் செய்து கொண்டிருந்தது. “ராஜா, எனக்கென்னவோ சாவி எடுத்ததுதுது...............என்று இழுத்துக் கொண்டிருக்க,........
“அண்ணே, இதான்னு பாருங்க!..” என ச்சேருக்குப் பின்னால் சுவரிடுக்கிலிருந்து ராஜா எடுத்தான், அந்த தொலையாத சாவியை. அதனை சற்றும் எதிர்பாராத அவன் நிலை தடுமாறி நின்றான்......
-முற்றும் -