மழையென்பது யாதென -2
இருண்டது வானம்
எண் திசை எங்கும்.
சுருண்டது சூரியன்
சூனியப் புள்ளியாய்.
மண் மகள் மலர்ந்து
மகிழ்ச்சியில் நெகிழ்ந்து
பொன் நகை அணிய
பொலிந்து பூத்திருந்தாள்.
கார் முகில் கவிந்த -வான்
கடற்பரப்பின் மேல்
திரண்ட வெண்நுரையாய்
குவிந்தன கொக்குகள்.
ஊழிகாற்றாய்
சுழன்ற புயலில்
நெட்டைப் பனைகள்
வட்டைத் தொலைத்தன.
மேழிச் செல்வம்
கோழை படாமல்
ஆழியைக் கயிற்றில்
அனுப்பினான் வானவன்.
நித்திலம் எங்கும்
கொத்து நீர்த் துளிகள்
சித்திரம் வரைந்து
சிரித்து நின்றன.
சிற்றிலை நுனிகளில்
முற்றிய திவலைகள்
சிலிர்த்து இன்பச்
சுகத்தில் கிறங்கின!
கத்திடும் குருவிகள்
கண்களை மூடி
காதலில் திளைத்து
குலவிக் களித்தன.
தெப்பக் குளத்தில்
தவளைக்கூட்டம்
தொப்பெனப் பாய
தாமரை இலைகள்
தன்னிலை திரும்பின.
உப்பளக் காட்டில்
உயர்ந்திட்ட மலைகள்
தப்பிதம் அறியாது-தம்
உருவம் கலைந்தன
அப்பளப் பாயுடன்
ஓடிய கிழவி
ஐயோ கொடுமழை
கொட்டுதென வைதாள்.
அரசனும் ஒன்று
ஆண்டியும் ஒன்று-மழை
அசைவைக் கண்டால்
ஒதுங்குவதுண்டு!
பெய்யும் மழையின்
மகத்துவம் இங்கு
பேசப் போனால்
முடிவது இல்லை!
மலையோ மடுவோ
மாடியோ சேரியோ
மழையின் கைகள்
பிரித்தாள்வதில்லை.
கோபுரம் குடிசை
யாவையும் ஒன்றாய்
பேதங்கள் இன்றி
பெருமையாய் கழுவி
ஓடும் மழையின்
உயர்வை யார்அறிவார்?

