பக்தன் நானே ……
பொய் ஒன்றைக் கூறிப் பரிசுப் பெற
நீர் எம் நாட்டு மன்னரும் அல்ல
மெய்யுடைய புலமையைக் கூறிப் பரிசுப் பெற
நான் இந்நாட்டு கவிஞனும் அல்ல
வானுலகம் கூட கண்டு வியக்கும்
எம் நாட்டு மக்களின் வாழ்வியலைப் பார்த்து
உயிர் குடிக்கும் எமன் கூட அஞ்சுவான்
எம் நாட்டு மக்களின் உடல்வாகைக் கண்டு
காற்றும் பூவும் காதல் கொள்ளும் காட்சியைக் காண
மூவுலக பெண்களும் வருவது
எம் நாட்டில் மட்டுமின்றி வேறுயெங்குமுண்டோ
தன் நிலை மாறாத ஆடவரும்
என் நிலை மாறாத பெண்களும்
எம் நாட்டின் தலையாயச் செல்வங்கள்
எவ்வறிவு பெற்றிருப்பினும்
மவ்வுயிருக்கு அறிந்தும் அறியாமலும்
தீங்கிழைக்காத ஆறறிவுப் பெற்று வாழும்
புண்ணிய பூமியே எம் நாடு
இத்தகைய வளங்கள் பெற்ற
இந்நாட்டிலிருந்து வரும் நான்
பரிசுப் பெற வருவேனாயின் அது
எம் நாட்டின் காவலனுக்குக் கூட இழுக்கு
இத்தகைய வளங்களைக் கொண்ட
இந்நாட்டில் ஆட்சி செய்வது
அரசன் என்றால் எள்ளி நகையாடுவார்களே
நீரோ மூவுலகையாளும்
என் ஹரிகரனே; என் பரம்பொருளே
உமக்கு நிகர் நீயே; உன்னைக் கண்குளிரக் கண்டு
உன்னிடம் ஆசி பெற வந்த பக்தன் நானே ……!