கோடைகாலங்களில்
கோடை விடுமுறை
கொண்டாட்டங்கள்
ஆங்காங்கே துளிர்விட
கிராமத்து பேருந்துகள்
விழாக்கோலம் பூண்டன
புதியவர்கள் வரவால்..
விவசாய நிலங்களை
விற்க மனமின்றி
கிராமத்தோடு கலந்த
தாத்தா பாட்டிகளும்
பரபரப்பை பூசிக்கொண்டனர்
பெயரன் பெயர்த்திகளின்
வருடத்திற்கோர் வரவால்..
நெடுந்தொடருக்கு தற்காலிக
விடுப்பளித்து மெளனத்தைப்
பூசிக்கொண்டது ஓயாமல்
அழுது ஆதரவளித்து
வந்த அந்த தொலைக்காட்சி..
அந்தக்கால புகைப்படங்கள்
அலசி ஆராயப்படுகையில்
புன்னகைப் பூக்கள்
பலநேரங்களில் பலத்த
சப்தத்துடன் படர்கின்றன
சாளரத்தையும் தாண்டி..
அண்டை வீட்டாரிடம்
பேரப் பிள்ளைகளின்
பெருமை பேசிப்பேசியே
அந்திப் பொழுதுகளை
அழகாக்கிக் கொள்கின்றனர்..
மெளனம் பேசிய
வீடுகளின் சுவர்கள்
சிலநாட்களாய் விடியவிடிய
விழித்து இருக்கின்றன
சுவாரசிய பேச்சினில்
சுகமாய் கரைந்து..
வயல் வெளியின்
பசும்மெத்தை வரப்புகள்
பிஞ்சு பாதங்களின்
ஓயாத ஓட்டத்தால்
மெய்சிலிர்கின்றன..
பம்பு செட்டுகளும்
தாவர மழலைகளுக்கு
தாரைவார்த்த தனதுயிரை
அருவியாய் பொழிகின்றன
குதித்து கும்மாளமிடும்
முதலாளியின் உறவுகளுக்கு
விசுவாசமாய்..
வாழ்வின் தருணங்களை
ஒவ்வொரு விநாடியும்
இனிமையாக்கி முதுமையை
மறக்கடிக்க செய்து
தாத்தா பாட்டியின்
முதுமைக்கு மயிலிறகால்
மருந்துபூசி செல்கின்றனர்
பெயரன் பெயர்த்திகள்..
#கோடைகாலங்களில்