திருவதிகை வீரட்டானம் - பாடல் 3

நான்காம் திருமுறை – திருநாவுக்கரசர் தேவாரம் - திருவதிகை வீரட்டானம்
திருவதிகை வீரட்டானேசுவரர் கோயில் தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் உள்ள பழமையான சிவன்கோவில் ஆகும். இது பண்ருட்டியில் இருந்து 2 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இந்தக் கோவில் தமிழ்நாட்டில் உள்ள எட்டு வீர சைவக் கோவில்களுள் ஒன்று.
அப்பர், சம்பந்தர், சுந்தரர் மூவராலும் பாடல் பெற்ற தலமாகும். இது தென் ஆற்காடு மாவட்டத்தில் அமைந்துள்ளது. இறைவன் சம்பந்தருக்குத் திருநடனம் காட்டியதும், அப்பரின் சூலைநோய் நீங்கப் பெற்றதும், திலகவதியார் தொண்டாற்றியதும், மனவாசகங் கடந்தார் அவதரித்ததும், திரிபுரத்தை எரித்ததும் நடந்த தலம் இதுவென்பது தொன்மநம்பிக்கை (ஐதிகம்).
பாடல் எண்: 3 - அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
ஒத்த வடத்திள நாக முருத்திர பட்ட மிரண்டும்
முத்து வடக்கண் டிகையு முளைத்தெழு மூவிலை வேலும்
சித்த வடமு மதிகைச் சேணுயர் வீரட்டஞ் சூழ்ந்து
தத்துங் கெடிலப் புனலு முடையா ரொருவர் தமர்நாம்
அஞ்சுவதி யாதொன்று மில்லை அஞ்ச வருவது மில்லை.
பொழிப்புரை:
தோளில் மாலையாக அணிந்த இளைய பாம்பும், தோள் பட்டிகை இரண்டும், பல வடங்களாக முத்துக்களால் அமைந்த மாலையினை இணைந்த உருத்திராக்கக் கண்டிகையும், மூன்று இலைகளாக உருவெடுத்து அமைந்த முத்தலைச் சூலமும், சித்த வடம் என்ற பெயருடைய சைவமடம் உள்ள திருத்தலமும், விண்ணளவு உயர்ந்த மதில்கள் உடைய அதிகை நகரை ஒருபுறம் சூழ்ந்து விரைந்து செல்லும் கெடில நதித் தீர்த்தமும் உடைய அதிகை வீரட்டானருடைய அடியாரும், உறவினருமாம் நாங்கள்.
ஆதலின் எங்களுக்கு அஞ்சுவதற்குரிய பொருள் யாதும் இப்பொழுது இல்லை. இனி அஞ்சுவதற்குரிய எதுவும் வரப்போவதும் இல்லை.
குறிப்புரை:
முத்துவடக் கண்டிகை - கண்டிகை: உருத்திராட்சமாலை, a necklace of sacred beads,
இலைக்குரிய அடை முளைத்தெழு என்பது.
சித்த வடம் - அதிகைக்கு அருகில் ஒரு சைவ மடம் உள்ள ஊர்.
சேண் உயர் வீரட்டம் – திருவதிகை வீரட்டத்தின் விண்ணளவும் ஓங்கிய மாநகர்.