செல்மாவின் ஜிப்ரான்
நீண்ட நாட்களுக்கு பின் என் பெயர் ஜிப்ரான் என்று ஞாபகம் வருகிறது.... நான் எங்கு சென்றேன் என்று நீங்களே யூகிக்கும் மணித்துளிகளை நீங்கள் கடப்பீர்கள்.. எனக்கு கொஞ்சம் மறதி.... கொஞ்சம் அல்ல.... நிறையவே....... சென்றேன்... சென்றேன்.. சென்று கொண்டே இருந்தேன்.... நீண்ட நாட்களுக்கு பின் திரும்பி இருக்கிறேன்... மனம் முழுக்க நினைவுகளின் அலைதல்...... நினைவுகள் முழுக்க மறதிகளின் கூட்டு....ஒரு புயலைப் போல எனை சுற்றிக் கொண்டே இருக்கிறது.... மூளை மடிப்புகளில் எல்லாம்.. என் தேடலின் வலிகள் ஒற்றையடியாகவும், பின் மெல்ல மெல்ல பாதையாகும் பரிணாமமாகவும்.. ஒரு சொல்லொணா சேருமிடத்தை நோக்கி ஓட சொல்கிறது.... நான் சுற்றிப் பார்க்கிறேன்... எனக்கு அழுகை வருகிறது... பிசைய பிசைய பிழிந்து ஒழுகும் பச்சை ரத்தம் போல எனது நினைவுகள் மெல்ல கசிகின்றன... நான் இப்போது பாதி சிதிலமடைந்த, பாதி தரை மட்டமான புகழ் வாய்ந்த திரை அரங்கினுள், ஒரு வெளியாக, ஒரு விடுதலையாக நின்று கொண்டிருக்கிறேன்.... எனக்கு அழுகை பெரிதாக வருகிறது... ஆத்திரம் வருகிறது.... இதே திரை அரங்கினில் நான் எத்தனை படங்கள் பார்த்திருப்பேன்......ஒவ்வொரு படமும் எனக்கு பாடமாக இருந்ததை நினைக்காமல் இருக்க முடியவில்லை... தொடர்பற்ற சங்கிலியின் ஏதோ ஒரு முடிச்சில் என் கதை பின்னோக்கி விரியத் தொடங்குகிறது......
என் பேர்... ஜிப்பான்...... ஒரு நாள் ஒரு வெள்ளைக்காரன் எங்க தேட்டர்க்கு படம் பாக்க வந்தான்.. அவன் கூப்ட தெரியாம ஜிப்ரானு கூப்டான்... எல்லாரும் அப்புறம் அப்டியே கூப்ட, எனக்கும் பிடிச்சு போச்சு...அப்புறம், எங்க தேட்டர்ணா.. என் அப்பன் தாத்தா கட்டினது இல்ல... நான் வேலை செய்யற தேட்டர்.. என்ன வேலையா.......?.
"சீடை, வட, முறுக்கு, டியே..."என்று இடைவேளைகளில் நடமாடும் தின்பண்டங்கள் விற்கும் வேலை... எனக்கென்று ஒரு பெயர் இருந்தது.. நான் யாரிடமும் இனிமையாக பழகக் கூடியவன்.. எல்லாருக்கும் என்னைப் பிடிக்கும்... நான் இந்த ஊருக்கு எப்போ வந்தேன்னு தெரியாது.. ஆனா இங்கயே தான் இருக்கறேன்...
"ஒத்திப் போ.. ஒத்திப் போ.. கொஞ்சம் ஓரமா ஒத்திப் போ"-ன்னு சத்யராஜ் பாடிக் கொண்டு வரும் போது தலை நிறைய மல்லிகைப் பூ வச்சிக்கிட்டு , சிகு சிகுனு பவுடர் பூசிக்கிட்டு, செல்லமா வந்து 2.50 டிக்கட்டுல உக்காரும் போதே எல்லார் கண்ணும் அவ மேல திரும்பும்.. எனக்கு உடம்பு முழுக்க கண்ணாதான் இருக்கும்.. காரைவேலைக்காரி... வாரம் முழுக்க பசு மாதிரி உழைப்பா... வாரக் கடைசினா... எங்க தேட்டர்க்கு ட்ரெண்டு மூணு சேக்காளி புள்ளைங்கள கூட்டிக்கிட்டு படம் பாக்க வந்த்ருவா...
இந்த படம்தான் பாப்பேன், அந்த படம்தான் பாப்பேன், அப்டி எதுவும் இல்ல.. அவளுக்கு படம் பாக்கணும்.. என்ன மாதிரியே.. எனக்கும் அப்டிதான்... வாரக் கடைசியல ரெண்டாவது காட்சி மட்டும் நான் வேலை செய்ய மாட்டேன்.. காசு குடுத்து டிக்கட் வாங்கி ஜம்முனு உக்காந்து படம் பார்ப்பேன்... அது போன வாரம் ஓடின படமா இருந்தாலும் நானும் அப்டிதான்.. செல்மாவும்(நான் அப்டிதான் கூப்டுவேன்) அப்டிதான்....
"ஆமா செல்மா.. ஏன் பல்லு காறையா இருக்கு...." என்று கிண்டல் அடிப்பேன்..முறுக்கு கடித்துக் கொண்டே..
"ம்ம்ம்.. நான் கார வேலை செய்யறேன்ல.. அதான்...." என்பாள்... நெற்றி தொடும் கூந்தலை லாவகமாக சரி செய்து கொண்டே..
அது கூட அத்தனை அழகாருக்கும்.....அவகிட்டதான் அத்தனையும் அழகாருக்கும்.
"ஆமா, ஜிப்ரான்...... உனக்கு சொந்த பந்தமெல்லாம் கிடையாதா.. நானும் வயசுக்கு வராத போதிருந்து பாக்கறேன்.. நீ இருக்க.. ஆனா எங்க இருக்கனு தெரிய மாடேங்குதே..."-என்பாள்....
தேநீர் இடைவேளையில் நான் வேண்டுமென்றே அவளைப் பார்க்க அந்த பக்கம் செல்வேன்... எனக்காகவே ஒரு டீயும் கடியும் வாங்கி வைத்திருப்பாள்...
"இல்ல செல்மா, நானும் அத பத்தி யோசிச்சதே இல்ல,... எத்தன யோசிச்சாலும், ஒரே மங்கலாவேதான் இருக்கு என் சின்ன வயசு ஞாபகம்..." என்பேன்...
"சரி.. தின்னு.... ரெம்ப யோசிச்சா மூளை குழம்பி போய்டும்.. நாம் நாயனகாரர் பாரு, ரெம்ப யோசிச்சு யோசிச்சு, இப்போ தானாவே பாடி,தானாவே பேசிக்கிட்டு இருக்கார்.. நீ ரெம்பெல்லாம் யோசிக்காத.... யோசிக்கறவன் பொலப்பு கிழிஞ்சிடும்...."-என்று தலையில் செங்கல்லை சுமந்து கொண்டு வியர்வை வழிய அவள் கட்டடத்துக்குள் செல்லும் போது, அப்டியே இந்த பாரதி பாடுவாப்லல.......
"அள்ளி அணைத்திடவே உள்ளம் தான் கள்வெறி கொள்ளுதடி...." அது மாதிரி பாடத் தோணும்.. என்னடா... தேட்டர்ல முறுக்கு விக்கறவுனுக்கு பாரதி பாட்டு எப்டி தெரியும்னு யோசிக்கறீங்களா...?....அது ஒரு மேட்டர் இல்ல... இந்த வெள்ளகாரன் வந்தான்னு சொன்னேல. அவன் தான். டேப் ரிகார்டர வச்சிக்கிட்டு பாரதியார் பாட்டு, அப்டி இப்டின்னு ஊரு முழுக்க சுத்தினான்.. அவன் கூட சும்மா போவேன்.. காசு குடுப்பான்.. அப்டியே பாட்டும் சொல்லிக் குடுத்தான்.. பரவால்ல... நல்லாதான் பாடிருகாப்ல பாரதி......
என் நினைவுகள் இப்போது மங்கி மங்கி திடும்மென மேலெழும்புகிறது.. நான் இப்போது எங்கு நிற்கிறேன்.... ஆம்.. இது செல்மாவின் வீடு தான்.. யாருமே இல்லை.. அனைவரும் வேலைக்கு சென்றிருக்க வேண்டும்.... எனக்கு உதறலாய் இருந்தது..... இத்தனை வருடங்களுக்கு பின் செல்மாவின் வீட்டு வாசலில் நிற்பது உள்ளுக்குள் செங்கல்களால் யாரோ எனை நிரப்புவுது போல இருந்தது... நான் திண்ணையில் சற்று அமர்ந்தேன்... தாகமாக இருந்தது... தாகம் அடக்க கூடியது ஏது?.. அடங்கினால் அதற்கு ஏன் பெயர் தாகம்...?.... அஞ்ஞான, விஞ்ஞான முறிவுகளில் நான் கிளையற்றுக் கிடப்பதாக ஒரு தியான சாயல் கொண்டு நான் தலை சாய்ந்து கண் மூடினேன்.........
இதே இடத்தில்தான் செல்மா என்னிடம் காதல் சொன்னாள்.. அதும்.... நேராக சொல்லவில்லை... சரசக்கா... என்னிடம் இதே இடத்தில் அமர்ந்து கொண்டு பேசியது.. அப்போது உள்ளே சமையலில் இருந்தாள் செல்மா...
"டேய் ஜிப்பான், இந்த செல்மா பத்தி என்ன நினைக்கிற....?" என்றது... எங்கேயோ பார்த்துக் கொண்டு...
"நினைக்க எவ்ளவோ இருக்கு.. எல்லாமே நினைக்க முடியுமாக்கா..." என்றேன்..
அறுந்து விழுந்த கரண்டு கம்பியில் கால் பட்டது போல.... "டேய் உன் பேரு ஜிப்பான் விட இந்த ஜிப்ரான் சூப்பரா இருக்காம்"- என்றது...
இப்போது எங்கள் கையில் மைதா ரொட்டி இருந்தது...
தின்றுகொண்டே... "எனக்கு பிடிக்கும்க்கா" என்று ரகசியக் குரலில் கூறினேன்..
'எது உன் பேரா..." என்றது அக்கா...
"பேரும்" என்றேன்...
"அப்போ காரைகாரி...?"
"அவள ரெம்ப பிடிக்கும்.. ஆனா அவ ரேஞ்சுக்கு நான் எப்டிக்கா....?" என்றேன்..
"டேய் கிறுக்கா.. உன்ன அவ லவ் பண்றாடா.. கொஞ்சம் எட்டிப் பாரு"- என்று அவளின் நிலைக் கண்ணாடியைக் காட்டியது சரசக்கா..
ஆம்.... அதில் கண் மையில் ஜீப்றான் என்று எழுதி இருந்தது.... நான் சிரித்துக் கொண்டே இதென்னக்கா பெருசு... இங்க பாரு என்று, என் சட்டையை விலக்கி என் நெஞ்சைக் காட்டினேன்... செல்மா என்று பச்சை குத்தி இருந்ததைக் கண்டு முதுகோடு அணைத்துக் கொண்ட செல்மாஅப்படி அழுதாள்...
"உன்ன யாரு லூசு இப்டியெல்லாம் எழுத சொன்னது..." என்று நடுங்கினாள்.. சரசக்கா ஓடியே விட்டது... 'இனி நீங்களாச்சு... உங்க சமாசாரமாச்சு' என்று...
"ஏய் புள்ள உனக்கு ஏஜ் என்ன..?" என்றேன்.. ஒரு நாள் இரண்டாவது காட்சி.. "உன்ன நினைச்சேன் பாட்டு படிச்சேன்.." படம் பார்த்துக் கொண்டே...
"எங்க நீ சொல்லேன் பாக்கலாம்"- என்று என் மார்போடு அணைந்து சாய்ந்தவளின் விரல் வெளிச்சத்தில் மினுங்கியபடி என் மார்பு முடி சுருள் சுருளாகிக் கொண்டிருந்தது....
"ஒரு 23 இருக்குமா...." என்றேன்...
"போடா.... மக்கு மாமா... எனக்கு 19" என்றாள்...
நான் "ஐயோ" என்று யோசிக்கையில், "என்ன உன்ன விட எட்டு வயசு சின்னவன்னு பாக்கறியா... சிறுசு பெருசுகெல்லாம் அவசியமே இல்ல" என்றபடியே சிரித்துக் கொண்டு காதுக்குள் ஒரு கெட்ட வார்த்தை கூறினாள்... காது ஜிவ்வென்று ஆனது....அப்புறம் எங்க படம் பார்த்தோம்....?
"ரெம்ப சூடா இருக்கு. ஒரு பீர் வாங்கிக் குடுடா" என்று கூறிய ஒரு நாளில் நாங்கள் இருவரும் ஆளுக்கு ஒரு பீர் குடித்து விட்டு ராணியக்கா கல்லறை மேல் படுத்துக் கொண்டும்.. சீட்டு விளையாடிக் கொண்டும், கட்டிக் கொண்டும் இருந்ததை ... விடிய விடிய நிலா பார்த்துக் கிடந்தது.... தனிமையில்...
எங்கள் பேச்சு மரணங்கள் பற்றி போனது..
"எதுக்கு மாமா மரணத்தை பத்தி பேசற.. நீயும் நானும் நூறு வருஷம் வாழ போறோம்... வருஷம் ஒண்ணுனு பெத்துகிட்டே இருக்கணும்.. சரியா..."
செல்மாக்கு போதை அதிகமானது... பாவாடையை வேட்டியை மடித்து கட்டுவது போல கட்டிக் கொண்டு சாவுக்கு ஆடுவது போல கல்லறை மேல் நின்று கொண்டு குத்தாட்டம் போட நான் "போடு.. அடி,ம்ம் ம்ம்ம்.. ஜிங்குசிக்கா, ஜிங்குசிகா.. அடி, அடி.."-என்று வாயாலேயே தாளம் போட்டுக் கிடந்தேன்...
வெண்ணிற இரவினில்... பொன்னிற வளைவுகளில் செல்மா, பாரதி கவிதையைப் போல பிரகாசித்தாள்...
"காதலைப் போல ஒரு வார்த்தை தமிழில் இனி வராதோ" என்று நான் கூட புலம்பிய பொழுது அது....உணர்வுகளில் ரத்தம் கசிய வைத்தது நினைவுகள்... நினைவுகளைப் போல குத்தீட்டிகள் பார்க்க முடியாது.. அது இதயம் குத்தி வெளியே எடுத்து ரத்தம் சொட்ட சொட்ட தன் நினைவு நாக்கினால் குரூரம் சுவைக்கும் உளவியல் சிக்கல்.....
பார்த்த இடத்திலெல்லாம் செல்மாவே தெரிந்தாள்.. ஒரு கட்டற்ற வெண் புரவியென நின்ற இடத்திலிருந்து அவள் தூர தேசம் அழைத்து செல்பவளாக, இருந்தாள்..... ஒவ்வொரு சிரிப்பினிலும் கண்கள் சுருக்கி, மூக்குத்தி விரிய காரைப் பல் அழகி, செந்நிற கூந்தலில் பொன்னிறம் மினு மினுக்க, தங்க கம்பிகள் என்று கூறும் கூந்தலில் ஒரு பூந்தோட்டம் உற்பத்தி செய்பவளாக இருந்தாள்... அவளைப் போல ஒரு பெண்ணைப் பார்ப்பது அரிது.... அவளின் அருகாமையில் எல்லாம், நான்... அவளாக மாறுவதை அவள் உணர்ந்தாள்.. நானும் உணர்ந்தேன்.. எங்கள் உணர்தலில் உயிர்கள் இடம் மாறிக் கொண்டே இருப்பதாய் நாங்கள் அறிந்து கொண்டே இருந்தோம்...
முறுக்கு கொண்டு வந்து கொடுக்கும் போதெல்லாம், அவள் எனக்கு வடை கொடுப்பாள்... எல்லாமே பாதி பாதிதான் நாங்கள்... ஒரு முறை, பழைய கஞ்சியில் தயிர் ஊற்றி குடித்துக் கொண்டிருந்தாள்.. நான் காலையிலேயே அவளைப் பார்க்க போய் இருந்தேன்...
"மாமா.. இரு வரேன்" என்று ஓடிப் போய் அன்னமக்கா கடையில் 8 இட்லி வாங்கிக் கொண்டு வந்து கொடுத்தாள்..... நான் பார்த்தேன்..... இடைவிடாமல் பார்த்தேன்.... ஏனோ பார்த்துக் கொண்டே இருக்கத் தோன்றியது....... எண்ண ஓட்டங்களின் சலனம் சட்டென்று நின்ற நொடி அது......
"அயே.. என்ன லுக்கு, நீ இட்லிதான் தின்பேனு எனக்கு தெரியாதாக்கும்...." என்று தட்டு முழுக்க இட்லியாக சிரித்தாள்.. நான் இட்லியை அவளுக்கு ஊட்டி விட தொடங்கினேன்.... கஞ்சியைக் குடித்துக் கொண்டே.....
"செல்மா.. உன்னைத் தேடித்தான் மீண்டும் வந்திருக்கிறேன்... இங்கு எல்லாமே மாறி இருக்கிறது..... இந்த 15 வருடங்களில் வாழ்க்கையில் எத்தனை வழிகள்...... வளைவுகள்...?.... நீ எங்க போன செல்மா...?" -நான் மீண்டும் இடிந்த தியேட்டர்க்குள் நின்றுகொண்டு யோசிக்கிறேன்... இதோ இந்த இடத்தில் தானே நாங்கள் வழக்கமாக அமரும் இடம் இருக்கும்... சினிமாவின் ஒரே காட்சி போல மீண்டும் மீண்டும் நாங்க சந்திந்துக் கொண்ட இடம் தானே இந்த திரை அரங்கம்... எல்லாருக்குமே தெரிந்த ஒன்று தானே எங்க காதல்...
பின் எப்படி நாங்கள் பிரிந்தோம்.....?!....
செல்மா எங்கே.....?- எனக்கு ஒன்றும் புரியவில்லை... 'மருதுபாண்டி" படம் பார்க்கையில் நிரோஷா விஷம் குடித்து சாவை நோக்கி தடுமாறும் காட்சியில், "பழக ஒரு மனது விலக ஒரு மனது"- என்று ராம்கி பாடிக் கொண்டே வாசலில் கதறுகையில், அவள் கண்களை மூடிக் கொள்வாள்..
"இல்ல மாமா... உன்ன மட்டும் என்னால பிரியவே முடியாது...... உன்ன மாதிரி ஒருத்தன இந்த ஜென்மத்துல நான் பாக்க முடியுமா.. ? நீ எவ்ளோ ஸ்டைல் தெரியுமா!" என்று கன்னம் கிள்ளி வாய்க்குள் போட்டுக் கொண்டாள்.....நான் அன்றிரவு கூலிங் க்ளாஸ் உடன் தூங்கியது ஞாபகம் வருகிறது......
"மாமா இனி லுங்கி கட்டும் போது ட்ரவுசர் போடாத, இந்தா இத போட்டுக்கோ"- என்று நவீன உள்ளாடையை முதன் முதலில் அறிமுகப் படுத்தி விட்டு ஓடியே விட்டாள், மறுநாள் கூறினாள், வெட்கம் என்று....
தொடர்பற்ற சிந்தனையின் கண்ணி அறுந்தருந்து விழுவது போல நான் மேலும் கீழும் பக்கவாட்டில் அங்கும் இங்கும் நகர்ந்து கொண்டும் புரண்டு கொண்டும் புளுதியாகித் தவிக்கிறேன்... ஒரே கேள்வி....... "செல்மா எங்கே...?"...
நாங்கள் கடைசியா எங்கு..... பார்த்தோம்...?...... யோசிக்கிறேன்.... யோசனைகளின் ஒவ்வொரு அடுக்கிலும் புது செங்கலாய் சுட்டுக் கொண்டே இருக்கிறாள் செல்மா...இதே இடத்தில்தான் அவளைக் கடைசியாக நான் பார்த்ததாக ஒரு யோசனை வருகிறது.... வருவெதெல்லாம் யோசனையா என்ன.....? இப்படியும் இருக்கலாம்.. என்று யூகிக்க வைக்கிறது....யூகங்கள் எல்லாமே யூகங்கள் தானா?...எது அதுவாக இருக்கிறதோ..அது அதுவாகவே இருப்பதும், இல்லாமல் போவதும் அதுவாக இருப்பதன் விளைவு.. இதில் அதுவல்லாத நான் அதுவாகப் பார்ப்பதில்தான் என் செல்மா.. கிட்ட இருப்பது போன்ற ஒரு உள்ளுணர்வு....
நூறு நாட்கள் ஓடிய தியேட்டர் இன்று இடிந்து, சிதிலமடைந்து பாதி தரை மட்டமாகிக் கிடப்பதே மிகப் பெரிய வலியைத் தருகிறது.. நான், நல்லவேளை இங்கு இல்லை.. இந்த காட்சியைக் காணும், தாங்கும் சக்தி கண்டிப்பாக என்னிடம் இருந்திருக்காது.. இந்த தியேட்டர் எனக்கு வீடு.. இங்குதான் எல்லாமே... நான் வாழ்ந்தது, செல்மாவைப் பார்த்தது, காதலித்தது, வாழ்க்கையைக் கற்றுக் கொண்டது எல்லாமே இங்கு தான்.... நானும் தோழன் "லக்கி"யும் இரவுகளில் இங்கு தூங்கும் போது முன்னால் இருக்கும் கதவு மட்டும் படார் என திறந்து கொள்ளும்.... அல்லது மூடிக் கொள்ளும், எத்தனை தாழ்ப்பாளைப் போட்டாலும்.... நாங்கள் பயந்து கொண்டே ஒருவரையொருவர் கட்டிக் கொண்டே பெரு மூச்சு விட்டுக் கொண்டு அப்படியே தூங்கிப் போவோம்...
பின் ஒரு நாளில் வெள்ளாயி பாட்டி இரண்டாவது காட்சிக்கு சற்று முன் கூறியது..
"அட ஜிப்ரா.. இந்த கொட்டாய் கட்டும் போது. ஒரு கிழவனக் கூட்டியாந்து சாப்பாடு எல்லாம் போட்டு, யாருக்கும் தெரியாம பலி குடுத்து தான் இந்த கட்டடம் கட்டினாங்க..... அரசல் புரசலா இந்த விஷயம் வெளிய தெரிஞ்சிடுச்சு.... காசு குடுத்து காரியத்த கச்சிதமா அமுக்கிட்டாங்க...அதுக்கு முன்னால ரெண்டு தடவ கட்டி கட்டி இது விழுந்துடுச்சு.... அந்த கிழவன்தான் ராத்திரியான இப்டி உலாத்தறதும் கதவ தட்றதுமா தன் கோவத்தக் காட்றான்... அதான்.. வேலை முடிஞ்சா வீட்டுப் பக்கம் போங்கடான்னு சொல்றது..."-
இப்போது எனக்கு கொஞ்சம் கொஞ்சமாக நினைவுக்கு வருகிறது...
ஆம்..... இதே தியேட்டர்-ஐ கொஞ்சம் புதுப்பிக்கலாம் என்று யோசிக்கும் போதும், கட்டிடம் சரியாக நிற்கவில்லை... எனக்கு தலை சுற்றியது..... எனை சுற்றி மிகப் பெரிய ஒரு சுழல் சூழ்ந்து கொண்டதைப் போல உணர்கிறேன்....அந்தக் கிழவனின் ஆன்மா... என்னைப் பார்த்து கொக்கரிப்பது போல உள்ளூர ஒரு கிழிதல்....வேகமாய் போன ரயிலின் தடம் புரண்ட மனநிலையில்தான் நான் இன்னும் இன்னும் என் நினைவுகளை வியக்கின்றேன்...மெல்ல மெல்ல மேலெழும்பும் காட்சிகளின் புகை மூட்டத்தில் குருதி தெறிக்கும் நிஜங்கள் எனக்குள் அமிலம் ஊற்றிக் கொண்டிருக்கிறது....
நம்பிக்கையின் எதிர் வினையைக் கண்ட நாள் அது.... எத்தனை அழுதும் கெஞ்சியும்....அதே "லக்கி" தான் என் கால்களை பிடித்துக் கொண்டான்.... அதே முதலாளிதான் சம்மட்டியால் என் தலையில் அடித்தார்...நல்ல மழை வேறு அன்று.... ஒரு 5 பேர் எனை சுற்றி என்னை சாக்கு பையில் கட்டி இதே இடத்திலதான் புதைத்து காரை போட்டார்கள்.... நான் எப்போது இறந்தேன் என்று எனக்கு நினைவில்லை....அதன் பிறகு நான் செல்மாவைப் பார்க்கவில்லை... நான் எல்லாம் மறந்தவனாகிப் போனேன்... என்னைப் பற்றிய எதுவும் என்னிடம் இல்லை.. நான் தெளிவற்ற ஒன்றாகி போனதும்... ஒன்றுமில்லாமல் போனதும் நானே அல்ல என்றுதான் தோன்றுகிறது. என் பெயர் கூட என் நினைவில் இல்லாமல்தான் இருந்தது... நான் புலம்பிக் கொண்டே அங்கும் இங்கும் சுற்றுகிறேன்.... யாருமே என் கண்களில் விழுகவில்லை... யார் கண்ணிலும் நானும் விழுகவில்லை போல... இரண்டு வேறு வேறான உலகத்தில் நான் இருப்பதாக தோன்றுகிறது....
இப்போது என் கண்களில் ஒரு எலும்புக் கூடு, உடைந்து நொறுங்கி, கிடப்பது தெரிகிறது... எனக்கு தெரிந்து விட்டது.. அது என் எழும்புக் கூடு தான்... வாய் பொத்திக் கத்துகிறேன்.. என் குரல் எனக்கு கேட்கவில்லை...நான் இப்டியா இருந்தேன்....? நான், செல்மா சொன்னது போல சூப்பராதான இருந்தேன்..... என்னை ஏண்டா கொன்னீங்க...?- என் கண்கள் இன்னும் ஆழமாய் உற்று நோக்குகிறது..... ...
ஆம்... என் எலும்புக் கூட்டுக்கு அடியில், இன்னொரு எலும்புக் கூடு கிடக்கிறது....
கண்கள் விரிகிறது எனக்கு..... ஆன்மாவை பிசையும் வலியோடு என் உலகம் வேகமாய் சுற்றுகிறது.........
அது என் செல்மா.....
கவிஜி