நான் அவன் பிறைநிலா

என்ன ஊர் இது
சாலை நெரிசல்
சாக்கடை நாற்றம்
காசுக்கு தண்ணீர்
கையளவு இருப்பிடம்
நெஞ்சம் எரிக்கும்
நஞ்சு கலந்த காற்று .....
மாநகரம் இல்லை இது ....
மாநரகம் .......................

இப்படியெல்லாம் நான்
இருசக்கர வாகனத்தின் பின்
இருக்கையில் கத்துவது
வழக்கமாய் இருந்ததால்
இரைச்சலோடு இரைச்சலாய் அதை
கரைத்துவிட்டு கவனியாதவன் போல் அவன் .....

ஆங்கோர் சமிக்ஞையில்
வண்டி நின்றது ...............
சாலை அருகே பூங்கா
இலைகளை உதிர்த்துவிட்டு
நிர்வாணமாய் நின்றதோர் மரம்
அதன் கிளைகளினூடே தெரிகிறது
மூன்றாம் பிறையும், வெள்ளிமீனும்
மூடவா வேண்டாமா என்ற
ஆலோசனையில் அருகே
மேகக்கூட்டத்தின் ஆட்டம் -இதை
ரசித்தபடி நானும்....அவனும்....


அவன் தோள்களில் சாய்ந்தபடி நான்
"ம்ம்ம் ... நல்லாதான் இருக்கு சென்னை"
கடைபார்வை பார்த்தான் .....
குறுநகை பூத்தான்.......
சமிக்ஞையில் பச்சை நிறம்!!!

எழுதியவர் : மேரி டயானா (6-May-15, 1:59 pm)
பார்வை : 151

மேலே