நிலத்தை வாசிப்போம்
புலம் பற்றி
புகழ்ந்து தள்ளும் நாம்
நிலம் பற்றி
நினைத்துப் பார்ப்பதேயில்லை.
ஒரு மண்ணும்
அறியாதவர்களாகவே
இருக்கிறோம் இன்னும்.
விளை நிலமாய் தென்படும் வெளி
கட்டிடங்கள் நடப்படும் களம்
பயணிக்க
பாதை விரித்திருக்கும் பரப்பு
இவ்வளவுதான் நாம்
இருக்கும் நிலம்பற்றி
அறிந்திருக்கும் அளவு
தாய் வழி தொடங்கிய பயணம்
தரைவழி நகர்ந்த பின்
நிலத்தின் வழிதானே
நிறைவுக்கு வருகிறது?
வேலிகளை நகர்த்த பழகிய நாம்
விளையாட்டுக்கேனும்
மண்ணை நேசிக்கும்
மரியாதையை பழகவில்லை ஏன்?
தானியங்கள் தருவித்து
பஞ்சமின்றி
உயிரினங்கள் உயிர் வாழ
நீரை உள்ளே நிறுவி
இறைவன் ஈந்த நிலம் பற்றி
ஆழ்ந்து அறிந்து உணராமல்
சடப் பொருட்களுக்கு உள்ள
சம்மந்தம் போலும் இல்லாத
தான் இயங்கிகளாகவே இருக்கிறோம்
பூமி ஒரு புல் கம்பளம்
பச்சை வயல் நூல் இழைகளால்
நெசவு செய்து
இச்சைதீர மனிதம் சுகிக்க
இயற்கை போர்த்திய பொன்னாடை
மண்ணை சுரண்டுவதற்கு
படித்த நாம்
கொஞ்சமாவது
நிலத்தை சுத்தப் படுத்த பழகவில்லை
மலைகள் உயர்ந்து யாசிக்கின்றன
விதைகள் பூமியால் சுவாசிக்கின்றன
வனமோ வேரால் வாசிக்கின்றன
இலைகள் நிழலால் நேசிக்கின்றன
வானமோ மழையால் பூஜிக்கின்றன
நாம் மனசால் யோசிக்கிறோமா?
இனியாவது;
தாய்நிலம் தொட்டு தரிசிப்போம்
உதிர்ந்து வணங்கும் பூக்களுக்குள்ள
புரிதலேனும் நமக்கு இல்லாததுதான்
நடைமுறை குற்றம்
சுற்றத்தை ஏனும் சுத்தமாக வைத்திருந்து
வளரும் தலைமுறைக்கு
நிலத்தின் வரலாறு சொல்வோம்
மாதா மடிக்குப் பின்
நிலம் தானே நமக்கு நிரந்தரம்.
ரோஷான் ஏ.ஜிப்ரி-இலங்கை.