போர்----அக்கப்போர்

காலக்கடன முடிச்சு
கம்மா வழி திரும்பையில
கனல் விழுந்த வைக்கப் படப்பா
ஊரே எரியுது...

என்னமோ ஏதோனு
ஊர்க்குள்ள நான் நுழையயில
ஐயோ ஆத்தான்னு
ஒரு கூட்டம்
எனக்கடந்து ஓடுறாக...

ரத்தம் சதையை எல்லாம்
எரிச்சுவரும் புகையில
என ஆத்தா புடவை நெடிய
தேடுது என் நாசி..

அனிச்ச செயலுக்கு
ஆளான என் வாயி
ஆத்தா ஆத்தான்னு கத்துது...

அதோ என் வீடு....

ஆடு மாடெல்லாம்
கயித்து கனையோட ஓடுதுக
ஆத்தா நீ எங்க?

காத்தாற்று வெள்ளமென
கரும்புகை வருகுதே
ஐயோ
எமன் வீட்டு எருமை
இப்போ என் வீட்டில் மேயுதே..

வெள்ளப்புடவக்காரி
நீ உடல் கருத்துப்போனதென்ன?
நான் வந்து கூட்ட பின்னும்
எழாம கிடப்பதென்ன?

வெள்ளைக்கொடி கண்டவுடன்
துவக்கை தூக்கும் கோழைமாரே
வெள்ளைப்புடவை கண்டு
குண்டு வீசிப்போனாயோ?

நடை பழகும் உன் குழந்தை
இடறிவிழும் போது கண்ட வலி
குறிபாத்து சுடும் போது
கொஞ்சமும் நீ உணரலையோ?

பட்டாளம் போகும்போது
பாவ புண்ணியம் மறந்திடுமோ?
பட்சிளம் குழந்தையும்
பல் போன கிழவியும்
எதிரியா தோணுமோ?

புலிகளை பிடிக்க வந்து
மான்களை வேட்டையாடுவதுதான்
உங்கள் வீரமா?

ஓ இறைவா....

வெள்ளையின் மதிப்பினை
வீரனை அறியச்செய்.

என் அழுகையின் வலியினை
என் பகைவனை உணரச் செய்.

போர் எனும் சொல்லுக்கும்
எதிர் பதம் உண்டான
உலகுக்கு உரைக்க சொல்.

மனம் என்பதுதான்
உனக்கும் மிருகத்திற்கும் வேறுபாடென
மறுபடியும் ஓர் முறை
போர் வீரனுக்கு நினைவூட்டு
.
வெள்ளைக்கொடி கண்டவுடன்
துவக்கை தூக்கும் கோழைமாரே
உன் நாட்டு ஆயுதச்செலவு
என் ஆத்தாவோட போகட்டும்
அசலூர் வாழும் என் அக்கா மகனாது
அமைதியா தூங்கட்டும்....

எழுதியவர் : மு.ஜெகன் (17-May-15, 1:31 pm)
பார்வை : 639

மேலே