தொலைந்துபோனவை -ரகு
பச்சை வயல்கள் பல கடந்து
காற்றின் வீச்சில்
கிளை வாய்க்கால் நீரில் உதிரும்
நாவல் பழம் பொறுக்க
மைல்கள் கடந்தேகும் பால்யவயதோடு
விடிந்து விடிந்து காலங்கள் வடிந்ததில்
தொலைந்து போயின எல்லாம்
இன்று
நச்சுப்புகை சூழும் சாலைகளில்
நிழற் சதையற்றுக் கூடுகளாகிய
மரங்களைக் கடந்து
சுவர்களற்றப் பெருவெளிகளைத்
தேடித்தேடிக் களைத்திருக்கலாம்
என்னைப்போல் அந்தக் காற்றும் .........!