தீர்த்தவாரி மீள்பதிவு

................................................................................................................................................................................................
நான் ஜாக்கிரதையான அஜாக்கிரதைப் பேர்வழி. திரு மோகன், செயற்பொறியாளர், பொதுப்பணித்துறை, திருவண்ணாமலை கோட்டம் என்கிற பிளாஸ்டிக் பலகை தாங்கிய அறை என்னுடையது. என் அஜாக்கிரதைத் தனத்துக்கு இரண்டு எடுத்துக்காட்டு சொல்கிறேன். வெகு சிரத்தையாக கம்யூட்டரில் விடுமுறை விண்ணப்பம் டைப்படித்து என் மேலதிகாரியிடம் சமர்ப்பித்தேன். போன வேகத்தில் ‘மறுக்கப்பட்டது‘ என்ற குறிப்புடன் திரும்பியது. பிலுபிலுவென்று சண்டை பிடிக்கப் போன என்னை நிர்வாக அலுவலர் தடுத்து என் லெட்டரைக் காட்டினார். ‘யுவர்ஸ் ட்ரூலி’ என்பதற்குப் பதில் ‘யுவர்ஸ் லவிங்லி’ என்றிருந்தது. கம்யூட்டரின் பாழாய்ப் போன ‘ஜெம் க்ளிப் ஆபிஸ் அஸிஸ்டெண்ட்’ மூன்று ஆப்ஷன் கொடுத்த நேரம் எண்டர் தட்டியிருக்கிறேன். பெண் மேலதிகாரி; சார்ஜ் போடாமல் விட்டதே பெரிய விஷயம்!
இன்னொரு முறை.. மழை வரும் என்று சரியாக கணித்து குடை கொண்டு போயிருந்தேன். ஹோட்டலில் சாப்பிட்ட நேரம் மழை வந்தே விட்டது. குடை விரித்து கிளம்பும்போது இன்னொரு அலுவலரும் குடையில் ஒட்டிக்கொண்டார். இத்தனைக்கும் அவரது அலுவலகம் எனக்கான எதிர்திசையில்.. அவர் என்னோடு வருவது பிடிக்கவில்லை என்பதை நிறைய ‘உச்’ கொட்டி தெரிவித்து விட்டேன். விடாக்கண்டன் என் அலுவலகம் வரை, என் அறை வரை, ஏன் என் மேஜை வரை வந்து விட்டார். மேஜையில் என் குடையைப் பார்த்தேன். அவர் நன்றி சொல்லி விட்டு அவர் குடையோடு சென்று விட்டார்!
சரி, கதைக்கு வருகிறேன். என் அறைக்குள் அப்போதுதான் நுழைந்திருந்தேன். ‘‘சப் கலெக்டர் வரச்சொன்னார்யா’’ என்றார் ப்யூன். ‘‘பக்கத்து கட்டடத்துலதான் மீட்டிங்.’’
கட்டடத்தின் விசாலமான ஹாலில் கலந்தாய்வுக் கூட்டம்.
‘‘ஐயா, சாமி புறப்பாடு பண்ணி தீர்த்தவாரி கொண்டாடணும். வெட்டாத்துல தண்ணி இல்லே. காட்டேரில இருந்து கொஞ்சம் தண்ணி உடச் சொல்லுங்கையா,’’ என்றனர் ஜனங்கள்.
‘‘என்ன மோகன், பண்ணிட்றீங்களா?’’ என்றார் சப் கலெக்டர்.
ஒரு இருபத்தைந்து பேருக்கு எதிரில் வைத்து சப் கலெக்டர் கேட்டால் நான் என்ன சொல்ல முடியும்?
‘‘தாராளமா பண்ணிடலாம் சார்’’ என்றேன். வேறு எதுவும் சொல்ல முடியவில்லை.
உதவியாளர் வேதாரண்யத்தை அழைத்துக் கொண்டு ஜீப்பில் காட்டேரிக்கு புறப்பட்டேன்.
காட்டேரி என்றால் பேய் பிசாசு ரகமல்ல. காட்டுக்குள் இருக்கிற ஏரி. இந்த வெட்டாறு என்பது செய்யாற்றின் கிளை நதியின் உப நதி; ஏதோ ஒன்று விட்ட சொந்தம். வெட்டாறு இந்த ஏரியை உருவாக்கி விட்டு கள்ளழகரை கண்டு மயங்கி தான் போக வேண்டிய தடத்தை விடுத்து அப்படியே வெட்டிக் கொண்டு வேறு வழி போனதாம். ஏரியிலிருந்து ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்தில் இதன் கரையிலும் கள்ளழகர் கோயில் உண்டு. மதுரையில் கள்ளழகர் வைகையில் இறங்கும் போது அதே வைபவம் இங்கேயும் நடக்கும். சில ஆண்டுகளாக தடைபட்டிருந்த கோயில் காரியத்தை ஊர் கூடி இந்த வருடம் நடத்த தீர்மானித்திருக்கிறது.
நான் காட்டேரியை அடைந்தபோது மணி மாலை ஐந்தரை.
ஆளைத் தள்ளி விடும் காற்று.
கிட்டதட்ட 15 ஏக்கர் பரப்பில் ஏரி- மூன்று வருடங்களுக்கு முன்னர் இந்த இடம் கரும்புச்சக்கை போடுகிற பள்ளமாக இருந்ததென்றால் நம்புவார்களா?- இப்போது அடித்த மழையில் ஆனந்தமாய்த் ததும்பி நிற்கிறது. ஏரியில் இரண்டு மூன்று மேடுகள் பல தரப்பட்ட தாவரங்களைத் தாங்கியிருந்தன. இதை ஆழப்படுத்தி, கரையை பலப்படுத்தி மெனக்கெட்டவர்களில் நானும் ஒருவன் என்பதால் இந்த ஏரியிடம் எனக்கொரு ஒட்டுதல்.
வேதாரண்யன் மதகுகள் பக்கம் போய் விட நான் தனித்தேன். அகண்டு விளங்கிய நீல நீரில் வானம் தெரிந்தது. அந்த சிலுசிலுக்கும் மாலை வேளையில் மேலும் கீழும் வானமிருக்க, நடுவில் நிற்கிற சுகம் அனுபவித்தாலன்றி வார்த்தைகளில் வசப்படாது.
ஏரியின் வடக்குப் பகுதி சற்று மேடு. இதன் காரணமாக இந்த ஏரியை அண்ணாமலை உச்சியிலிருந்து பார்த்தால் நீலத் திரவம் அடங்கிய கோப்பையை சாய்த்து வைத்தது போல் தெரியும். விமானத்திலிருந்து பார்க்க நேர்ந்தால் பூமித் தாய் தன் நீலக் கண்களுள் ஒன்றை விழித்துப் பார்க்கிற காட்சி தெரியலாம். நீரின் சலனங்கள் கண்களின் உணர்ச்சிப் பிரதிபலிப்பாக விளங்கலாம்.
ஏரியின் மேற்குப் பகுதியில் கண் கோளம் நிரம்பும் மட்டும் வயல்கள். முன்பெல்லாம் தொடுவானம் வரை வயல்களாக இருக்குமாம்.தெற்குப் பகுதியில் காடுகள் இருந்ததற்கு அடையாளமாக ஆங்காங்கு நின்றிருக்கும் வேம்பு, வேங்கை மற்றும் புங்க மரங்கள்.
ஏரியின் கிழக்குப் பக்கமாக சென்று வெட்டாற்றை பார்வையிட்டேன். அதிர்ந்தேன்! இப்பொழுது வெட்டாற்றில் பொட்டு நீரில்லை. ஆறு போன அடையாளத்துக்கு முப்பத்து நான்கு கிலோ மீட்டர் வரை நீளும் வண்டல் ஆற்றுப் படுகை. இங்கேயும் ஆற்று மணலை விட்டு வைக்காமல் கொள்ளை அடித்ததில் ஆங்காங்கே பெரும் பள்ளங்கள்.
‘‘வெள்ளோட்டம் பார்த்திரலாமா சார்’’ என்றார் வேதாரண்யன். அவருடன் இன்னும் இரண்டு பேர் இருந்தனர். நான் சரியென்றதும் கிழக்கு பக்க மதகை விடுவித்தனர்.
ஒரே சமயத்தில் நாற்பது இளம்பெண்கள் சலங்கை அணிந்து ஓடியதைப் போல ஒலி. ஆற்றுப்படுகையில் சலசலத்து ஓடியது நீர்.
‘‘சார், அஞ்சு லாரித் தண்ணி விட்ருக்கேன் ’’ வேதாரண்யன் ரிப்போர்ட் பண்ணினார்.
ஒரு முக்கால் மணி நேரம் நான் இங்கிருக்க வேண்டும்.
ஆறு மணி வாக்கில் எங்கிருந்தோ வந்தன நூற்றுக்கணக்கான மைனாக் கூட்டம். ஒரு போர்வையாய் ஏரியை மூடின. ‘‘கயமுய கயமுய ‘‘’’ என்று நூறு டெசிபல் அளவு சத்தம்; குளிப்பதும் குலாவுவதுமாய் கழித்து விட்டுப் பறந்தன. ஒரு மைனா போகிற போக்கில் எங்கள் ஜீப் கண்ணாடியை நாலைந்து தரம் கொத்தி விட்டுப் போனது.
‘‘காலங்கார்த்தால காக்கா கூட்டம் வருது சார். மூன்றரை மணிக்கு கொக்குங்க, அப்பால இவுங்க. ராவுக்கு வெண்ணாந்தைக் கூட்டம் இரையெடுக்க வருது’’, வேதாரண்யன் விவரித்தார்.
வெட்டாற்றுக்குள் இறங்கி நடந்தோம். பிறகு ஜீப்பில் பயணித்தோம். நீர் பாய்ச்சிய அடையாளத்துக்கு மூன்று கிலோ மீட்டர் வரை படுகை ஈரமாக இருந்ததே ஒழிய நீரோட்டமில்லை. பாய்ச்சிய நீர் பாதாளத்துக்குப் போய் விட்டது!
நான் மனக்கணக்கு போட்டேன். ‘‘ ஒண்ணு பாதி ஏரிய காலி பண்ணணும், இல்ல, அஞ்சு சென்டிமீட்டர் மழையடிக்கணும்.. அப்பத்தான் தீரத்தவாரி நடக்கும் போல இருக்கேயா’’, என்றேன் கவலையுடன்.
‘‘சப் கலெக்டர் கிட்ட சொல்லிடலாம் சார். இதெல்லாம் ஆகிற வேலையில்லே; நாம செஞ்சாலும் அதே சம்பளம், செய்யாட்டியும் அதே சம்பளம்தானே’’.
திரும்பவும் ஏரிக்கரையில் நின்றேன். தளும்பி நிற்கும் ஏரியின் வனப்பு! வளர்ந்த மகளின் பருவச்செழிப்பு ஒரு தந்தையின் கண்ணில் எதிர்பாராத விதமாக தட்டுப்படும் போது தோன்றும் மனநிலையில் என்னைத் தள்ளியது. பெருமிதம்..பாசம்... சங்கடம்...கவலை..
இந்த ஏரியைக் கண்டுதான் ஜனங்களுக்கு தீர்த்தவாரி யோசனை தூண்டப்பட்டிருக்க வேண்டும். இன்னும் என்னென்ன தூண்டப்பட்டு ஓடுகிறதோ? வெள்ளாமை செய்விக்கலாம்; ரியல் எஸ்டேட்காரனிடம் ’’இப்போதைக்கு விக்கிற யோசனையில்ல தம்பி‘’ என்று சொல்ல வைக்கலாம்; கன்னிகளுக்கு அறுவடையைத் தொடர்ந்து கல்யாணக் கனவுகளை விதைக்கலாம்... ஏதேது, தமிழ்நாடு தந்தது ஒரு கலாமை. என் காட்டேரி தருவது ஏகப்பட்ட கலாம்களை.. இதற்கெல்லாம் இந்த தீர்த்தவாரி ஆரம்பமாகத் திகழ வேண்டும். அது தருகிற எழுச்சி பிற கனவுகளையும் நனவாக்கும்.
அதே சமயம் தாய்மார்கள் காலிக் குடங்களுடன் கலெக்டரேட்டை முற்றுகையிட்டால்...? காய்ந்த பயிரைப் பார்த்து விவசாயி தற்கொலை செய்து கொண்டால்..?
நான் படுகையை விட்டு ரோட்டுக்கு வந்தேன்.
கார் வருகிற சத்தம்...என் சக அதிகாரி வர்கீஸ் காரிலிருந்து இறங்கினார். என் பிரசினையை கேட்டு உதடு பிதுக்கி கை விரித்தார். ‘‘எந்தா சாரே! மலையாளி பெரியாரைத் தர மாட்டேன்றான், கர்நாடகாகாரன் காவிரிய விட மாட்டேன்றான்னு பேசத் தெரியுதுல்ல? தமிழன் புத்திசாலின்னா என்ன பண்ணியிருக்கணும்? நிஞ்கள் நதியை காவு கொடுக்கறீங்க, இல்லங்கில் சாக்கடையா ஓட விடுறீங்க; ஏரிய ஃப்ளாட் போட்டு கட்டடம் கட்றீங்க. ஒரு மழை பெய்ஞ்சா டைல்ஸ் இடுக்கிலேர்ந்து ஒரு அடி உயரத்துக்கு தண்ணி பீச்சியடிக்குது. மணல் கொள்ளையை தடுக்கப் போன தாசில்தாரை லாரி ஏத்தி கொன்னது மலையாளியுமில்ல, கர்நாடகாகாரனுமில்ல!’ வர்கீஸ் பொழிய நான் தலை கவிழ்ந்தேன்.
வர்கீஸ் தொடர்ந்தார், ‘‘நாளைக்கே ஒரு கிறுக்குப் பய குண்டு போட்டு தமிழ்நாட்டை பஸ்பமாக்கினால் இருபத்து நாலு மணி நேரத்தில் கேரளா பட்டினி கிடந்து மரிச்சு போம். இவ்வளவு பவரை வச்சிகிட்டு கெஞ்சறீங்க; ஒரு பிரசினைனா மத்த மாநிலத்துல ஆளுங்கட்சி, எதிர்கட்சி, உதிரிக்கட்சி எல்லாம் ஒண்ணாயிடுது. இங்கதான்.. சரி, தமிழ்நாட்டுல வீசுற நீலம் புயல் கூட நூத்திப்பத்துலதானே வீசுது! ’’
‘‘ஏ, கொலையாளி! ஏதாவது வழி சொல்லு’’
‘‘ஓபிசில் பாகீரதி மேடமுண்டு; போய் சரண்டராய்க்கோ!’’
பாகீரதி மேடம் குடிநீர் வாரியத்தின் சக அதிகாரி. இந்த ஏரியை ஒட்டிய மோட்டார் அறை, சின்ன நீர் சுத்திகரிப்பு நிலையம், பத்து கிராமங்களின் ஆறு நீர் தேக்கத் தொட்டிகள், கவிதையாய் நீளும் பைப் லைன்கள்- இவையெல்லாம் அவர் வினைச்செயல் திறமிக்கவர் என்பதை பறை சாற்றும். சரி, அவர் எப்படி இந்த ப்ரசினையைத் தீர்ப்பார்?
பாகீரதி மேடம் கோடவுனுக்கு இன்சார்ஜ் என்பதும் நினைவிலாடியது. அவரது கோடவுனில் பெரிய பெரிய சின்டெக்ஸ் தொட்டிகளும், துளைக்கப்பட்ட –perforated பிவிசி பைப்புகளும் உண்டு.
சின்டெக்ஸ் டாங்க்குகள்! பிவிசி பைப்புகள்! ஐடியா!
நதியின் கால்களை ஒடித்து விட்டோம்; வேறு வழியில்லை; கட்டைக்கால்தான் கொடுக்க வேண்டும்.
மூன்று ராட்சத சின்டெக்ஸ் டாங்க்குகள் வேண்டும்; இரண்டு கிலோ மீட்டர் நீளத்துக்கு பிவிசி பைப்புகள் பொருத்த வேண்டும்; ஜல்லி வேண்டுமானால் இங்கேயே அள்ளிக் கொள்ளலாம்.
அது தவிர ஒரு முப்பது ஆட்கள் வேண்டும்; சரக்கு லாரி வேண்டும்; எல்லாவற்றையும் விட முக்கியமானது, நான் பாகீரதி மேடத்துக்கு ஃபோன் செய்து விவரம் சொல்ல வேண்டும்;
‘கொசகொச’ என்றிருக்கும் கோடவுனில் டாங்க்குகளையும், பைப்புகளையும் வெளியே எடுப்பது சுலபமான காரியமல்ல. ஐயாயிரம் லிட்டர் கொள்ளளவுள்ள சின்டெக்ஸ் டாங்க்கை அகற்றியபோது அதன் கீழ் ஈர மணலில் குடியிருந்த நூற்றுக்கணக்கான தேள்கள் கொடுக்கை தூக்கிக்கொண்டு கொட்ட வந்தன! ஒரு பழைய பைப்பை வெளியே எடுத்து பதித்தும் விட்டோம். தண்ணீருக்குப் பதிலாக பன்னிரெண்டு அடி நீள மலைப்பாம்பு சாவகாசமாக வந்தது. ஐயாவை அப்படியே கோணிப்பையில் புகுத்தி வனத்தில் விட்டோம்!
‘ஆழ்ழ்ழ்ந்த’ யோசனையில் திளைத்த சமயம் சிணுங்கிய செல் ஃபோனில் என் மனைவி... இவ ஒருத்த்தி!
‘‘என்ன பாகீரதி? ’’ உளறி விட்டேன். ஆண்டவனே! என் மனைவி பெயர் பானுமதி! அவளுடைய அக்கா மகன் நாளை வருகிறானாம். காய்கறி வாங்கி வரச் சொன்னாள். கடைசியாக கேட்டாள். ‘‘ஆமா, என்ன பேர் சொன்னீங்க? ’’
‘‘ நான் பானுமதின்னுதான் சொன்னேன்’’.
லொடக்கென்று துண்டிக்கப்பட்டது செல் ஃபோன்.
கள்ளழகர் வைபவத்துக்கு ஒரு நாள்தான் பாக்கி. அக்கா மகனை அளவுக்கதிகமாகத் தாங்கிவிட்டு பதினொன்றரை மணி வாக்கில் காட்டேரி போனேன்.
அதிசயம்!
ஏரிக்கு சிறு கீறல் கூட ஏற்படுத்தாமல் சின்டெக்ஸ் டாங்க்குகள் மினி மோட்டார் மூலம் நிரப்பப்பட்டு பைப்புகள் பதிக்கப்பட்டுக் கொண்டிருந்தன. பாகீரதி மேடம் பம்பரமாய் சுழன்று கொண்டிருந்தார். நான் அவரிடம் தேவைகளை கூறினேனே ஒழிய என் ஐடியாவை கூறவில்லை.
‘‘ எப்படி மேடம் இது?’’
‘‘ஏன் சார், சின்டெக்ஸ் டாங்க்கை மண்ணுக்குள்ள புதைக்கவா கேட்பீங்க? பிவிசி பைப்பை வச்சி உங்க பெண்டாட்டிக்கு நகையா பண்ணி போட முடியும்? உங்க ஐடியா எந்த பக்கம் பாயுமுன்னு எனக்குத் தெரியாதா? ’’ அலட்டிக்காமல் அக்கறையும் நக்கலுமாக பாகீரதி மேடம்!
பாகீரதி மேடம் பக்கத்திலிருப்பது யானை பலம். அவர் வார்த்தைகள் என் காதுகளில் தேனாய் பாய, கற்பனையில் அவரை தலைக்கு மேலே தூக்கி தட்டாமாலை சுற்றினேன். நிஜத்தில் கனத்த மௌனத்தை அணிந்து அவரிடமிருந்து ஒரு மீட்டர் தூரம் தள்ளி நின்றிருந்தேன்!
இப்போது ஒரு விளக்கம்..
சூழ்நிலை அறிந்து, மனதறிந்து தானாக முன் வந்து பாரம் குறைப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர் குரல் நம் காதுகளில் தேனாய்த்தான் பாயும். இது ஹார்மோன் சம்பந்தப்பட்டதல்ல; அறிவு சம்பந்தப்பட்டது.
மாலைக்குள் வேலை முடிந்து வெள்ளோட்டம் பார்த்து சில திருத்தங்கள் செய்தோம். ஏரி நீர் டாங்க்கில் நிரம்பி ஒரு அழுத்தத்தோடு பைப்பில் பாய்ந்தது. மணலில் புதைந்த பைப்புகளின் துளை வழியே ஆற்றுப்படுகையில் ஒரு துள்ளாட்டத்தோடு செயற்கை நீரோட்டம் புறப்பட்டது!
வெட்டாற்றில் தீர்த்தவாரி வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டதாக புகைப்படங்களுடன் செய்தி வெளியாகின. நான் பானுமதியை சமாதானப்படுத்த முயன்று...
தோற்றுப் போனேன்!