பொள்ளாச்சி அபி சிறுகதைகள் - திறனாய்வு போட்டி-புயலின் மறுபக்கம்
பொள்ளாச்சி அபி சிறுகதைகள் திறனாய்வுப் போட்டி –
புயலின் மறுபக்கம்.
-------------------------------------------------------------------------------
தலைப்பு என்பது கேள்வித்தூண்டலாகவும், எதிர்ப்பார்ப்பு கருவியாகவும் , ஈர்க்கும் நுழைவாசலாகவும் அமைந்திருந்தாலே அது படைப்பிற்கான வெற்றிச்சுவடாக பார்க்கலாம்.
புயலின் மறுபக்கம் ! இந்தத் தலைப்பு படிக்கும்போதே ஏதோ ஒரு கொடூரத்தின் பிண்ணனியை கொண்டு பின்னப்பட்ட கதையென்று வாசகர்கள் யூகிக்க முடியும்.
1996இல் கோவையில் மதக்கலவரத்தினால் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தை நினைவுகூறுவதாக கதைக் களத்தை அமைத்திருக்கிறார் கதாசரியர் பொள்ளாச்சி அபி. இந்த கதையின் கரு மனிதக்குலத்தின் மடைமை சீண்டி மதவெறிப்படித்தவர்களின் செவிட்டில் அறைந்து கேள்விக் கேட்கிறது.
மதக்கலவரத்தின் கொடுஞ்சுவடுகளை விவரித்தவாறே கதையின் நாயகியான தேவகியை மருத்துவமனை பிணவறையின் முன்பு நமக்கு அறிமுகப்படுத்தும் காட்சியிலிருந்து தன் எழுத்து ஆளுமையில் கதையின் போக்கில் வாசகர்களை சிறைப்படுத்த முயன்றிருக்கிறார் கதாசிரியர்.
சில மணி நேரத்திற்கு முன்புவரை உயிரோடிருந்த கணவனை இழந்த துக்கத்தில் வேதனையின் விளம்பிலிருக்கும் தேவகி, ஒரு மரநிழலில் சென்று அமரும் காட்சியை விவரிக்கும் வரியில் மதவெறிக் கொண்ட மானிடருக்கு மரம் சொல்லும் மெளனச்செய்தியை ஊட்டுவது சிறப்பு. அவ்வரி
“பிரம்மாண்டமாய் விருப்பு வெறுப்பின்றி எல்லாதிசைகளிலும் தன் கிளைகளைப் பரப்பியிருந்த அந்த மரத்தின் நிழலுக்கு வந்து,குத்துக்காலிட்டு,அதில் முகத்தைப் புதைத்து அமர்ந்து கொண்டாள் தேவகி. ”
மரநிழலில் அமர்ந்து துயரங்கொண்டிருந்தவளுக்கு ”நீ நாசமாத்தாண்டி போவே.” தன் அம்மாவின் சாபம் நினைவுக்கு வர தேவகியின் நினைவுகள் பின்னோக்கி செல்கிறது. அதில் தேவகியின் பெற்றோர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்க, அண்ணனின் நண்பனை காதலிப்பதாக அவளின் அண்ணனிடமே தெரிவிக்கிறாள் தேவகி. மூடநம்பிக்கையை எதிர்க்கும் ஓர் எழுத்தாளாரான அண்ணனும் சம்மதம் தெரிவிக்கிறார். இக்காட்சியில் பகுத்தறிவு சிந்தனைகளை மேடையில் பேசியும் எழுதியும் கொண்டிருக்கும் ஓர் எழுத்தாளர் நிஜவாழ்விலும் அதை கடைப்பிடிப்பது போல சித்தரித்தது பாரட்டத்தக்கது.
மருத்துவமனையில் உயிரிழந்தவர்களின் இரு வேறுப்பட்ட மதத்தினரை மதத்தின் பெயர் குறிப்பிடாமல் அவர்களின் உடைகளின் மூலம் , பெயர்களின் மூலம் மட்டுமே சொல்லும் சூட்சமம் அருமை.
கலவரத்தில் உறவை இழந்த கருப்பு பர்தா போட்ட ஒரு பெண் தேவகியின் நிலையறிந்து “மதத்தைக் காப்பாத்தறேன்னு மனுஷங்களை கொன்னுபுட்டா ஆச்சா..?” “ என தீடிர் ஆவேசமடையும் வசனம் சவுக்கடியாய், இடியொலியாய் வினா எழுப்புவது சபாஷ்,
இவ்வாறு உணர்ச்சிமிக்க காட்சிகளால் உச்சக்கட்ட முடிவை எதிர்நோக்கி கதை விறுவிறுப்படையுமென எதிர்பார்க்கும் போது, தீடிரென்று கதாசிரியர் மதங்கள்,அது உருவான வரலாறை எடுத்துகாட்டுகிறார் மதங்கள் என்பது எவ்வாறு பரந்துவிரிந்தது என்பதை தேவகியின் வரலாற்று ஆசிரியர் சொல்வதுபோல தெரிவிக்கிறார். இது கதைக்கு தொடர்புடையதாக இருந்தாலும், அறியக்கூடிய தகவலாக இருந்தாலும் கணவனை இழந்த அதிர்ச்சியிலும் துயரத்திலும் இருக்கும் தேவகி இதுபோன்ற மதம் வந்த வரலாற்றை நினைப்பதாக எழுதியிருப்பது கதையின் விறுவிறுப்பு எனும் அளவில் கதையோட்டத்தில் தொய்வு ஏற்படுவது போல உள்ளது.
அரசு மருத்துமனைக்கு மதக்கலவரத்தில் மரணித்தவர்களின் உறவுகள் வருகையும் அவ்வுறவுகளில் சிலர் அதிர்ச்சியுற்று மயக்கமடையும்போது வேற்று மதத்தினர் மனிதநேயத்துடன் உதவதுமாக செல்லும் கதை நகர்விலும், மதங்கள் எப்போதும் மனிதநேயத்தை தடுக்கும் வல்லமையற்றது என்பதை பறைசாற்றுகிறார் ஆசிரியர்.
“உயிரோட இருக்கும்போது சாதி மதத்துக்காக சண்டைபோடற மத்தவனெல்லாம், இப்போ ஒண்ணா சுடுகாட்டுக்கு போற பிணங்களைப் பாத்தாவது யோசிப்பாங்களா பாய்..?”
“எல்லாருக்கும் ஆறடி மண்ணு தவிர கடைசியிலே சொந்தமா எதுவுமே
இல்லேங்கிறது புரிஞ்சாலே போதுமே..!” இந்த வசன வரிகளில் வாழ்வியலின் உன்னதத்தையும் மதம் ஜாதி கடந்த ஒற்றுமையின் அவசியத்தையும் சிந்திக்கத்தூண்டுகிறார் கதாசிரியர் பொள்ளாச்சி அபி
கதையின் உச்சகட்டத்தில் தேவகி எனும் இந்துப்பெண் காதலித்து மணம்புரிந்தது ஒரு இஸ்லாமிய ஆடவரை என தெரியப்படுத்துவது கதை படிக்கும் வாசகர்களுக்கு ஒரு தீடிர் அதிர்ச்சி திருப்பமாக இருக்குமென கதாசிரியர் எதிர்பார்த்திருந்தால், அதில் நூறு சதவீதமும் நிறைவேற வாய்ப்பில்லை. ஏனெனில் கதை முழுவதும் மதங்களால் ஏற்பட்ட தீயரேகைககளை பதிவுசெய்திருப்பதால், தேவகி காதலித்தது ஓர் இஸ்லாமியரைத்தான் என கதையின் இடைப்பட்ட பகுதியிலேயே வாசகர்கள் யூகிக்கமுடியும்,.
எவ்வாறினும்,
மதங்கள் மனித நேயத்தை புறக்கணித்தால் மதத்தையே புறக்கணிக்கவேண்டும் என உரக்கச்சொல்ல முயன்றிருக்கும் இக்கதையின் ஆசிரியர், எழுத்தாளர் பொள்ளாச்சி அபியின் ஆளுமைக்கொண்ட வீரிய எழுத்துகள் மதப்பித்துக் கொண்ட சில மானிட அற்பர்களை நிச்சயம் உரசிப்பார்க்கும்.. சிந்திக்கத்தூண்டி மனமாற்றம் நிகழ வைக்கும்.
--------------------------------------------
இக்கட்டுரை எனது சொந்தப்படைப்பே. .
-
-இரா.சந்தோஷ் குமார்.