கைம்பயலின் காதல் குறிப்பு

கழன்றுவீழும் நியூரான்கள்
வாழ்வைத் தொடர்பவைகளிடம்
தவறாமல்
திணித்துவிட்டுச் சென்றுவிடுகிறது உன்
ஞாபகங்களை....

நிலவொளியும் விளக்கொளியும்
கலந்த நாளொன்றில் ஒரு
யட்சியைப் போல நீ வந்திருக்க...
பேசுவதற்கு ஏதுமில்லாமல்
சலிக்கச் சலிக்க காமம் துய்த்துப்பின்.....

பாதிராக்கோழியின் சத்தத்திற்கு
முன்னதாக
முத்தங்களோடு காதல் பகிர்ந்தது...

காதலுக்குப் பிந்தைய
காமம்.... காமத்தோடவே முடிந்து போகிறது...
காமத்திற்குப் பிந்தைய
காதல்... காதலாகத் துளிர்விடுகிறது..

அவ்வாறாகத்தானே... ஒவ்வொருநாளும்
எனக்குள்
சமைக்க...குளிக்க...
விளம்ப...உடுத்த... அவிழ்க்க.. என
நிகழ்வுகளில் எல்லாம்...
தீண்டல்களாகவும்.. சிணுங்கல்களாகவும்....
துளிர்த்துக் கொண்டிருந்தாய்.....

அழுந்தப் பொட்டுவைத்த
அதிகாலையொன்றில்... காரணம்
சொல்லாமலேயே நீ..
செத்துப் போயிருந்தாய்....

நம் முதல் முத்தத்தைப் போலவே
இளஞ்சூட்டோடு இருந்தது
உன் நெற்றி... கடைசியாக உன்னை
நான் முத்தமிட்டிருக்கையிலும்....

மணவறைக்கு வந்ததைப்
போலவே... பிணமாகவும் புடைசூழச்
சென்று விட்டிருந்தாய்.....இப்பொழுதும்
உன் மென்புன்னகையானது
மாறியிருக்கவில்லை...

ஏதுமில்லா நினைவுகளோடு
அன்றைக்குக் காத்திருந்தவன் போலவே.
இன்றைக்கும் நான்....!!

கூடை நிறைத்த ஆடைகளிலிருந்து
பெருகி வழிந்துகொண்டேஇருக்கும்
உன்.... வாசங்கள்தான்
திரட்டிக் கொண்டே இருக்கிறது......
நான் ஒற்றைப் பட்டவன் என்னும்
உன் ஞாபகங்களை..........

எழுதியவர் : நல்லை.சரவணா (29-May-15, 2:34 pm)
பார்வை : 76

மேலே