அஃது யாதென அதுவே சொல்லும் – 2

இருள்மறை இளம்பகல்
பொழுதினில் துயில்களைந்
தெழுந்ததும் முகம்நுகர்
நறுந் தேநீர்...!
*****
இளம்பிறைக் கருஇமை
இரண்டதன் நடுவினில்
சுடர்ந்தெழும் கதிரென
திகழ் சாந்து!
*****
பசித்திருச் சிறுமலர்
இடையினில் தவழ்ந்திட
முழுமதி யிரவினில்
தரும் சோறு...!
*****
சுடர்பவன் சுடுந்தழல்
சிரந்தனை வறுத்ததும்
படர்ந்திரு மரம்தரு
குளிர் நீழல்...!
*****
புதைகுழி சதுப்பதில்
பிறப்பது முளைப்பினும்
நுகர்நறு மணந்தரும்
மலர்க் கமலம்!
*****
இவரவர் செய்குவர்
எனுங்குர லெழுங்கணம்
விரைந்துயிர்த் துயர்த்துடைப்
பெருந்தொண்டு!
*****
குருஉரை மறைபொருள்
இடர்தனில் புரிபட
உளந்தனில் பெருகிடும்
உணர் வாறு!
*****************************************
சுந்தரேசன் புருஷோத்தமன்