என் வீட்டு இயந்திரம்
என் வீட்டு இயந்திரம்...!
மாமியார் மாமனார் கண்டுபிடித்த
கணவன் இயந்திரம்
ஏராளமாய் உற்பத்தி செய்திருக்கிறது
காந்தி நோட்டுக்களை...!!
பண உற்பத்தி காலத்தின் இடையே
உற்பத்தியாய்
இரண்டு உயிர் ஜீவன்களும் தான்..!!
நல்ல வேளை..!
இயந்திரம் உற்பத்தி செய்தது
இயந்திரங்களாய் இல்லாமல்....!!
ஓயாத காந்தி நோட்டு உற்பத்திகளில்
பாசமும் அன்பும் மறந்துவிட்ட
இயந்திரமானவருக்கு
எத்தனை முறை நினைவு படுத்துவது??
"நாம் மனிதர்கள்" என்று...!!
பூங்கா செல்ல வேண்டும்
திரைப்படம் பார்க்க வேண்டும்
தொலைதூர பயணங்களில்
இயற்கையை இரசித்து
இன்புற்றிருக்க வேண்டும்..
இன்னும் எப்படி எல்லாமோ...!!
இளமைக் கால கனவுகளை எல்லாம்
எத்தனை ஆண்டுகளாக
சிதைத்துவிட்டிருக்கிறது
இந்த இயந்திரம்...!!
பதி இயந்திரத்தால் உற்பத்தியான
உயிர்ப் பொருட்கள் இரண்டும்
என் கனவுகளை நனவாக்கியத்தில்
நான் இறுமாந்திருந்தேன்...!!
என் தோட்டத்திலும்
தேன் சொரியும் வாச மலர்கள்
நான் நேசிக்கவும்... சுவாசிக்கவும்...!
நினைத்த இடங்களுக்கு
நினைத்த நேரத்தில்
மூவருமான வாகன சவாரிகளில்
சிறு பிள்ளைகளுக்கிணையான
கேலி.... நையாண்டிகளுடன்
நானும்.... நாங்கள் பெற்றதும்...!
ஆனந்தமாகத்தான் இருந்தது
சில காலங்களாய்...!!
வளர்ந்துவிட்டார்களாம்
அவரவர் நட்பு வட்டங்களுடன்
அவரவர் கொட்டங்கள்...!
அவரவர் கொண்டாட்டங்கள்..!
மீண்டுமானதொரு வெற்றிட வாழ்க்கை
புரியாத ஏக்கங்களுடன்
இதயத்தில் மலையை
இறக்கி வைத்தது போலான உணர்வுகள்..!
இனி ஏமாளியாக இருக்கும் உத்தேசம்
எனக்கில்லை...
இயந்திரத்தை மனிதனாக்கும் முயற்சிகளில்
நேற்று தற்காலிக வெற்றி.. !!
கொண்டாடினேன்
எனக்கு பிடித்த ஹீரோவின் 'மாசு' படத்தை
எனக்கு சொந்தமான ஹீரோவுடன் கண்டு ரசித்து...!
மாறுபடாத இயந்திரத்தை
முழு மனிதனாக்கும் முயற்சிகளில்
இன்னமும் நான்..
ஓர் நாள் மாறும் என்கிற நம்பிக்கையில்..!!