வசந்த கால வாழ்வின் வழியனுப்பு மடல்
இத்தனை அவசரமா இந்த நாட்காட்டிக்கு?
நம் வாழ்வின் இனிமையான அறுநூற்று சொச்ச
நாட்களை பறித்தோடிவிட்டதே!
இப்போதும் நம் கண்முன் நிற்கிறது - அந்த
அழகான நம் முதல் சந்திப்பு - அன்று
புதிய முகங்களுக்கு வரவேற்பளித்த புன்முறுவல்கள்
புன்னகைகள் - எங்கே அவை?
அந்தப் பொக்கிஷங்களின் மதிப்பு அதற்குள்
காலாவதியாகிவிட்டதோ - நம்ப முடியவில்லை!
எப்படியோ பழகத் தொடங்கினோம்
அப்படியே நட்பில் கரையப் பழகினோம்!
குயில்களாகப் பாடி மகிழ்ந்தோம்...
மயில்களாக ஆடிக் களித்தோம்...
செல்லச் சண்டைகள் புரிந்தோம்...
கொள்ளை சேட்டைகள் செய்தோம்...
மழலைகளாய் மாறி கொஞ்சிக் குலாவினோம்...
ஆம் நினைவிருக்கிறது, அவ்வப்போது பாடங்கள்
கற்றோம் - அட! பரீட்சைகள் கூட எழுதினோம்
பெற்ற பதக்கங்களை பகிர்ந்தணிந்து இரசித்தோம்!
இப்படியெல்லாம் ஆர்ப்பரித்துத் திரிந்தோம்!
எல்லாம் அவ்வளவு தானா!
இனி என்ன செய்யப்போகிறோம்?
புதிய பயணமொன்று நம்மை அழைக்கிறது
புறப்படத் தயாராகிவிட்டோம்!
கைபேசியில் தினசரி அரட்டை...
அவ்வப்போது சில அழைப்புகள்...
எப்போதாவது சந்திப்பு... சற்றே சுருங்குகிறதோ
நம் வாழ்க்கை!
இந்தக் கனமான பிரிவை நினைவுபடுத்தத் தானோ
இங்கு கூடியுள்ளோம் - இன்றென்ன
நட்பின் நினைவஞ்சலி நாளேதுமா?
பட்டாம் பூச்சிகளாய்
சிறகடித்துத் திரிந்த நாட்கள்...
பார்த்து இரசித்த கேளிக்கை சித்திரங்கள்...
பகிர்ந்துண்ட உணவுகள்...
சென்று மகிழ்ந்த சுற்றுலா வாசனைகள்...
புன்னகையோடு எடுத்துக் கொண்ட புகைப்பட நிழல்கள்...
கவலையிடம் கடன்பட்ட தருணங்களில்
காசு பணத்தோடு கைமாற்றாகப் பெற்றுக் கொண்ட கண்ணீர்…
இத்தனையும் கோர்த்துச் செய்த நினைவுத் தூரிகை
மனதை வருடிட - என் விழியோரம் பெருகி நிற்கும்
கண்ணீர்த் துளிகளை துடைக்க முனையும்
அந்தப் பொழுதில் - உன் பெயர் சொல்லி அழைக்கும்
அலைபேசி நினைவுபடுத்தும் - நம் நட்பிற்கு
வழியனுப்பு நாளேதும் இல்லையென்பதை!

