பொள்ளாச்சி அபி சிறுகதைகள் திறனாய்வுப் போட்டி - அவரது சொந்தங்கள்

கதை : அவரது சொந்தங்கள்

ஆசிரியர் : தோழர் பொள்ளாச்சி அபி அவர்கள்



ஒரு முழுநீளப் புத்தகமொன்றைப் படித்து முடித்த பின் புத்தகத்தின் கடைசிப் பக்கத்தை மூடி வைக்கும்போது மனதில் படர்ந்து கொள்ளும் ஒரு அமைதியோடு இந்தக் கதைக்கான கட்டுரையைத் தொடங்குகிறேன்...


ஒரு பயணத்தின் போது பல மனிதர்களையும் பல சம்பவங்களையும் நாம் கண்டும் கடந்தும் செல்கிறோம்.. அவற்றுள் , நம் பார்வையில் பட்டும் நம் எண்ணத்தில் வீழாமல் அகன்று சென்ற சம்பவங்கள் பலவற்றுக்கு நடுவே , ஏதோ ஒரு காட்சி மட்டும் நம் கண்களில் முழுமையாக விழுவதற்கும் முன் நம் எண்ணத்தில் ஊடுருவி ஆழப் பதிந்துவிடும்.. அந்த இடத்தை விட்டு நாம் சென்ற பின்னும் நம்மையும் அறியாமலே அந்த ஒரு காட்சி நம் நினைவில் தங்கிவிடும்...


அப்படி நினைவை விட்டு அகலாத ஒரு காட்சியே இந்த 'அவரது சொந்தங்கள்' என்னும் சிறுகதை ...


இந்தக் கதைக்கான கட்டுரையை , கதையின் முதல் வரியில் இருந்து துவங்குவதா இல்லை கதையின் கடைசி வரியில் இருந்து துவங்குவதா என்று யோசித்து விட்டு , பின் கதையின் மத்திய பகுதியில் இருந்து துவங்குகிறேன்..


/// 'இயற்கையை வெல்ல யாரால் முடியும்..?’ ///


ஆம்.. இயற்கையை வென்றவர் யாருமில்லை.. 'அவரது சொந்தங்கள்' என்னும் இந்தக் கதை ஞானபாரதி என்னும் எழுத்தாளனுடைய வாழ்வின் கடைசி சில நிமிடங்களின் ஒரு காட்சிப் பதிவு... மழை நின்ற பிறகும் இலையோடு ஒட்டிக் கொள்ளும் ஈரம் போல் படித்து முடித்த பிறகு வாசகனின் மனதோடு ஒட்டிக் கொள்கிறது இந்தக் கதை..


ஒரு கதையை எழுத முடியும்.. ஒரு கதையை உணர முடியும்.. ஒரு கதைக்குள் புகுந்துவிட முடியும்.. ஒரு கதைக்குள் ஒளிந்துகொள்ள முடியும்.. ஒரு கதையை வாசிக்கவும் முடியும் அதே கதையை சுவாசிக்கவும் முடியும்.. ஒரு சிறுகதைக்குள் முழுமையான ஒரு வாழ்க்கையை வாழ்ந்து விடவும் முடியும்.. இவை அத்தனை வர்ண ஜாலங்களையும் ஒட்டு மொத்தமாக ஒரே சமயத்தில் செய்து காட்டுகிறது இந்தக் கதை.. ஒரு நீண்ட வெறுமையையும் ஒரு சின்னக் குளுமையையும் ஒரே சமயத்தில் ஒன்றாகக் கொடுக்கிறது இந்தக் கதை..


இரண்டு முறை சாகித்ய அகாடமி விருது பெற்று , புகழின் வெளிச்சத்தினூடே வாழ்ந்த ஒரு எழுத்தாளன் இன்று தன் வாழ்வின் கடைசி நிமிடங்களில் மங்கிய இருளுக்குள் தன்னந்தனியாக மரணத் தருவாயில் கிடக்கிறார்...


புகழையும் பணத்தையும் நிறையவே கொடுத்த விதி அதை விட அதிகமான தனிமையையும் சேர்த்துக் கொடுத்து விட்டது... தனிமை மட்டுமே முழு வாழ்வென்று வாழ்ந்த ஞானபாரதிக்கு , அவருக்கென்று இருக்கும் சொந்தங்கள் யாரென்பதை வாசகர் அறிந்து கொள்ளும் நொடியில் முடிந்து போகிறது இந்தக் கதை.. முடிவுற்ற பிறகு படிக்கும் வாசகனை சிந்தனையில் ஆழ்த்தி விடுகிறது...


ஊர்க்கவுண்டர் ராமசாமி
பறையடிக்கும் சின்னா
தம்பதிகள் சுமித்ரா ஜெயபாலன்
மக்களின் நலனை மட்டுமே சிந்திக்கும் அதிசயமான அரசியல்வாதி கணேசலிங்கம்
சிறுமி கல்பனா
பாதிரியார் ஓசேப்பு
பாலியல் தொழிலாளி காமாட்சி
வாத்தியார் அப்துல்லா


என்று ஞானபாரதி உருவாக்கிய இந்தக் கதாப்பாத்திரங்களின் பெயர்களைக் காணும்போதே , சமூகத்தின் வெவ்வேறு நிலைகளில் இருந்தும் பல்வேறு கதாப்பாத்திரங்களை உருவாக்கி உயிர் கொடுத்து உலவ விட்டிருக்கிறார் என்பது புரிய வருகிறது... விளிம்பு நிலை மனிதர்கள் தொடங்கி அரசியல்வாதிகள் வரை , குடும்பம் , குழந்தைகள் உலகம் வரை கதாப்பாத்திரங்களை உருவாக்கியவர் எனும்போது சமூகத்தின் அத்தனை நிலைகளையும் தன் கதைகளில் கையாண்டவர் என்பது புலனாகிறது...


இந்தக் கதையை முதல் முறை படித்த போது ஒரு கோணத்திலும் இரண்டாம் முறை படித்த போது வேறோர் விதத்திலும் என்னால் காண முடிந்தது... மீண்டும் மூன்றாம் முறை படிக்கப் படிக்க , இந்தக் கதையும் சரி எழுத்தாளனின் வாழ்வும் சரி முடிந்து போய் விடக் கூடாதே என்று தோன்றத் தொடங்கியது.. ஆழ்ந்து படித்தால் அர்த்தம் பொதிந்த வரிகள் பல உண்டு கதையின் ஓட்டத்தோடு இணைந்தபடி ...


/// வெவ்வேறு இடத்தில் நின்று கொண்டிருந்தாலும் அவர்கள் அனைவரின் பார்வையும் ஒட்டு மொத்தமாய் ஞானபாரதியின் மீதே குவிந்திருந்தது. //// கதையின் உயிர்நாடியென நான் நினைத்த வரிகளுள் என்னை மிகவும் கவர்ந்த வரி இதுவே..


நம் மனதிற்கு மிக நெருக்கமான ஒரு கதையைப் படிக்கும்போது ஒரு கட்டத்தில் அந்தக் கதையில் வரும் கதை மாந்தர்களை வெறும் கதாப்பாத்திரங்களாகப் பார்ப்பதை விடுத்து உண்மை மனிதர்களாகப் பாவிக்கத் தொடங்கி விடுகிறோம் நாம்... அதே சமயத்தில் அந்தக் கதைகளில் கதாசிரியரால் உருவாக்கப்படும் ஒவ்வொரு கதாப்பாத்திரமும் வெவ்வேறு வாழ்க்கை முறைகளைச் சார்ந்த மனிதர்களாய் இருந்த போதிலும் தன்னை உருவாக்கிய எழுத்தாளர் மேல் எந்த அளவு ஒன்று போல் நேசம் கொண்டு விடுகின்றன என்பதைத் தெள்ளத் தெளிவாகக் காட்டுகிறது இந்தக் கதை...


ஞானபாரதியின் இளமைக் காலங்களையும் அவரின் மனைவியின் மறைவுக்குப் பிறகு 30 வருடங்கள் அவரின் தனிமை வாழ்க்கையையும் தற்போது கிடக்கும் மரணத் தருவாயையும் நினைத்துக் கண்ணீர் வடிக்கிறார் அவர் எழுதிய முதல் கதையின் நாயகி... எனும்போது தனிமை மட்டுமே துணையாகக் கொண்ட காலங்களில் இருந்தே தான் உருவாக்கிய கதை மாந்தர்களோடு ஞானபாரதி கொண்டிருந்த ஒரு பிடிப்பும் பற்றும் தெளிவாகிறது...


தன் ஒவ்வொரு கதைகளிலும் பல்வேறு கதாப்பாத்திரங்களை உருவாக்கி அவர்களுக்கு இருந்த சமூகச் சிக்கல்களைச் சரி செய்து அவர்களின் வாழ்க்கையை மாற்றி அமைத்த எழுத்தாளர் ஞானபாரதியின் வாழ்க்கையின் முடிவை இன்று இயற்கை எழுதி விட்டது... ரத்தப் புற்று நோயின் கொடூரத்தால் உடல் நலிந்து கிடக்கும் எழுத்தாளரின் உண்மைச் சொந்தங்கள் இப்போது அவரைச் சூழ்ந்து நின்று கொண்டிருக்கும் அவர் உருவாக்கிய கதாப்பாத்திரங்களே...


அத்தனை பேரின் வருத்தத்தையும் கண்ணீரையும் கடந்து , மரணித்தலின் கடைசி நொடியில் ஞானபாரதியின் உயிர் பிரிந்த போது , இத்தனை காலமும் அவரின் பணியாளனாகவும் தாயுமானவனாகவும் இருந்த அவரின் ஒரே துணையான மாரியப்பனின் பெருத்த அழுகுரலோடு முற்றுப் பெறுகிறது ஒரு எழுத்தாளனின் வாழ்க்கைச் சரித்திரம்...


தங்கள் அத்தனை பேரையும் உருவாக்கி உயிர் கொடுத்து உலவ விட்டிருந்த ஒரு அற்புத ஜீவன் பிரிந்து விட்ட நொடியில் , இனி அவர் உருவாக்கிய அத்தனை கதாப்பாத்திரங்களும் இத்தனை காலமும் தாங்கள் வாழ்ந்து கொண்டிருந்த கதைகளுக்குள்ளே புகுந்து கொண்டிருக்கக் கூடும் என்று முற்றுப் பெறுகிறது இந்தக் கதை...


வசனங்கள் இல்லாமல் காட்சிக்குக் காட்சி நீண்ட பெரும் பயணங்கள் எதுவும் இல்லாமல் துளியும் ஆரவாரமில்லாமல் ஒரு பெருவாழ்வை ஒரு சிறுகதைக்குள் வாழ்ந்து விட முடியுமென்று நிரூபிக்கும் ஒரு கதை இது... ஒரு எழுத்தாளன் தான் வாழும் காலங்களில் உருவாக்கும் கதாப்பாத்திரங்கள் அவன் மறைந்த பிறகும் உயிர் கொண்டு நிலை பெற்று இருக்கும்...


ஒரு மரணத்தை அவல நிலையாகக் காட்ட முடியும்.. ஒரு மரணத்தை அழகாகக் கூட காட்டி விட முடியும்.. இந்தக் கதையில் எழுத்தாளர் ஞானபாரதியின் மரணத்தை , ஒரு முற்றுப் புள்ளியாகவே பார்க்கிறேன் நான்... எந்த ஒரு முற்றுப் புள்ளியும் அர்த்தமுள்ளதே... ஒரு எழுத்தாளனாய் இருக்கும்போது அவனின் மரணம் கூட அர்த்தமுள்ளதாகி விடுகிறது..


அவரது சொந்தங்கள் - காலம் உள்ளவரை உயிர் கொண்டிருக்கப் போகும் அவர் உருவாக்கிய கதாப்பாத்திரங்களே...




- கிருத்திகா தாஸ் ...



இது என் சொந்தப் படைப்பே என்று உறுதியளிக்கிறேன்...

எழுதியவர் : கிருத்திகா தாஸ் (13-Jun-15, 9:02 pm)
பார்வை : 175

மேலே