நீயும் நானும் யாரோ இன்று

பசுமை புரட்சி படைக்கும் முயற்சி
==பாதை வகுத்த பழைய நாட்கள்
பசுமை வளர்க்க, நீயும் நானும்
==பழகிய நட்போ நினைவில் மலர்ச்சி.

பள்ளிக் கூடம் நானும் போக
==பக்கத் துணையாய் வந்த நீயும்
தள்ளி நின்று மழைக்கு ஒதுங்கி
==தனித்த நாளின் நனைதல் எனக்குள்

தண்ணீர் பஞ்சம் போக்கக் கட்டாந்
==தரையில் எங்கும் மரங்கள் நாட்ட
எண்ணங் கொண்ட இனிய நாளின்
==ஏக்கம் இன்னும் வற்ற வில்லை

மழைநாள் ஊரில் வெள்ளம் புகவே
==மணலை ஆற்றில் அகழ்வோர்க் செய்த
பிழைகள் கண்டு பிடித்துச் சொன்ன
==பெருமை வெள்ளம் மனதுள் பொங்கும்

தேர்தல் காலம் மட்டும் வந்து
==திரும்பிப் பாரா தலைவர் கண்டால்
நார்நார் என்றுக் கிழிக்கக் கேட்ட
==நாவின் சூடு மாறவே இல்லை.

அந்த நாளின் நினைவு பூக்கள்
==அவிழும் போது வந்த வாசம்
இந்த நாளில் ஏனோ இல்லை
==எண்ணும் போதோ நிம்மதி இல்லை.

கஞ்சிக் காய்நான் கழனி வெட்டிக்
==கஷ்ட்டப் பட்ட வேளை நீயோ
காஞ்சா நாட்டிக் காவல் பார்த்தே
==காசு சேர்க்கும் களங்கம் கொண்டாய்

படித்தப் படிப்பின் அறிவைக் கொண்டு
==பாமரர்க் குதவி நானும் செய்ய
படிக்கா உந்தன் குறுக்கு வழியோ
==பாமரர் தன்னை ஏய்த்துப் பிழைக்க,

பொதுவாய் மக்கள் நலனை வேண்டி
==பூம்புனல் குளம்நான் தூர்வா ரிடவே
மதுவின் மூலம் மக்கள் மனதில்
==மாசுகள் நீயும் படிந்திடச் செய்தாய்

மரத்தின் கண்டு நாட்டி ஊரில்
==மழைவர நானும் முயன்றிடும் காலம்
மரங்கள் வெட்டித் திருட்டுத் தனமாய்
==மக்கள் கண்ணில் மண்ணை போட்டாய்

ஆற்றின் அரிப்பை தடுக்க கரையில்
==அணைகள் நானும் கட்டும் காலம்
ஆற்று மணலை அகலும் நீயோ
==அதிபதி யானாய் ஊருக் குள்ளே..

தலைவர் மார்கள் தேடிப் பிடித்து
==தவிக்கும் மக்கள் குறைகள் போக்க
அலையாய் அலையும் நிலையை சொல்லி
==அல்லும் பகலும் நானும் உருக

தலைவர் மார்க்கு வாலும் பிடித்து
==தரையில் இருந்து விண்ணில் பறக்க
அலையாய் அலைந்து தொகுதி பிடித்து
==அடைந்தாய் நீயும் தலைவர் பதவி

நாயும் பேயும் நடத்தும் உறவு
==நாடக மேடை ஆனது என்று
நீயும் நானும் யாரோ இன்று
==நினைவில் வாழக் கற்றது நன்று!
*மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (14-Jun-15, 3:01 am)
பார்வை : 132

மேலே