தாகக் குருவி-----அஹமது அலி--

தீராத் தாகமெடுத்த
தனிக் குருவியொன்று
அந்திப் பொழுதினில்
ஆகாய அடுக்குகளை
அலகால் கிழித்து ஏறியது...
0-0
காற்றலைகள் கடந்து
வான்கடல் படகாய்
சிறகுத் துடுப்பசைத்து
எதிர் நீச்சல் நீந்தி
வானேறு கண்டது....
0-0
மேகப் படுகைகளில்
படுத்துறங்காமல் படபடத்து
தேகக் களைப்பில்லாமல்
வேகமெடுத்த வேள்வியில்..
0-0
நிலவொழுகும் அமுதை
அலகுக் குழல் வழியே
அள்ளிப் பருகிட ஆவல் மிகுந்து
அம்புலியை மிதந்து நெருங்கியது
0-0
ஆன மட்டும் நெருங்கிப் பார்த்தும்
அம்புலியை விரட்டிப் பார்த்தும்
தொடமுடியா சோகத்தில்
பயணம் முறித்து பாதை திரும்பியது
0-0
கூட்டின் நினைவுப் பெருக்கால்
கூடுதல் சிறகசைப்பில்
கூடகாரம் விட்டிறங்கி
குவளையம் விரைந்தது...
0-0
இருண்ட வானத்தில்
இடறியது மீள் பயணம்
திசைகளெல்லாம் மறந்து
திப்பிரம்மையில் ஆழ்ந்தது..
0-0
கரியமில வாயுக்களும்
கழிவுப் புகை மூட்டங்களும்
கண்ணைக் கட்டி ககனம் அடைத்து
மண்ணை மறைத்தது...
0-0
அபயக் குரலெழுப்பி அலறியது
ஆகாய வட்டம் சுற்றியழைந்தது
அதிகாலை வரையிலும் தேடலே
ஆதவன் விழிப்பில் கூடடைந்தது..!

எழுதியவர் : அலிநகர்.அஹமது அலி (15-Jun-15, 10:41 am)
பார்வை : 159

மேலே