மும்மாரி பொழிந்த மேகமெங்கே முப்போகம் விளைந்த நிலங்களெங்கே

பசுமைப் புரட்சி போதாதென்று
பலவண்ண புரட்சியோ?
பச்சை சிவப்பு நீலம் மஞ்சள்
எத்தனை வண்ணங்களில் விளைந்திருக்கிறது
இந்த விவசாய களைகள்
இது செடியினம் இல்லை கொடியினம்...

இதோ
என் கழனியெல்லாம்
கலர் கலராய் விளைந்துவிட்டது கட்டிடங்கள்
உயர உயரமாய் வளர்ந்துவிட்டது காற்றாலைகள்..
இனி
செயற்கையாக ஆடை நெய்வாய்
ஆலைக் கட்டிடம் செய்வாய்
அரிசி எப்படி செய்வாய்.?

கடலை மணக்கும் காடெங்கே?
நெற்கதிர்கள் நாணும் கழனியெங்கே?
பூக்கள் மலரும் சோலையெங்கே?
கனிகளாடும் தோட்டமெங்கே?
நஞ்சையெங்கே? புஞ்சையெங்கே?
உணவில்லா தேசத்தில்
இனி
நானுமெங்கே? நீயுமெங்கே?

விவசாயிகளே மகிழ்ச்சி கொள்ளுங்கள்
விளைபொருட்களின் விலை விலையேறிவிட்டதாம்
ஆனால் ஒன்று
நீங்கள் விற்கும் பொருட்களுக்கல்ல
வாங்கும் பொருட்களுக்கு மட்டுமே..
உங்களின் சந்தையில்
பணவீக்கம் எப்போதும் சரிவுதான்...

மும்மாரி என்னடா மும்மாரி
முப்போகம் என்னடா முப்போகம்
எப்போதும் இங்கே விளையுதடா
மாதம் முப்பதும் இங்கே பொழியுதடா..
ஆமாம்
என்
ஏழை "விவசாயிகளின் கண்ணீர்"...

எழுதியவர் : மணி அமரன் (15-Jun-15, 5:32 pm)
பார்வை : 380

மேலே