உயிர்க் கொல்லி வேதியல்-o0o-வேதியலின் விந்தைகள் போட்டிக் கவிதை

அணுகுண்டுகள் அமெரிக்கர் பிரசவத்தில்
லிட்டில் பாயும், பேட் மேனும்
செல்லப் பெயராம்
யுரேனியமும், ப்ளுட்டோனியமும்
வேதிப் பெயராம்...

இரட்டைப் பிறவிகள்
பத்தாயிரம் மீட்டர் உயரத்திலிருந்து குதித்து
5000 டிகிரி சென்டி கிரேட் வெப்பம் பாய்ச்சி
தீக்கிரையாக்கியத்தில் மிஞ்சவில்லை எதுவும்...
ஹீரோஷிமா நாகசாகி நாசமாகி...

புல்பூண்டும் முளைக்காமல்
விடம்.. விடம் ... எங்குமாய்...
மனிதநேயத்தை ஆழக் குழி தோண்டி புதைத்து
பலி/பழி வாங்கிய பரவசத்தில் அமெரிக்கர்
இரண்டாம் உலகப் போர் வெறி ஆட்டங்களில் .

இன்னமும் வேதியல் ஆட்டம்
முடிவடைந்தபாடில்லை...
சர்வதேச நாசங்கள்
கண்களுக்குப் புலப்படாமல்...
மருத்துவ மனைகளில்
அவசர தேவைகளின்போதான
குருதி ஏற்றங்களில்...

உடனடி மரணமின்றி
மெதுவிடமாய் குடலரித்து உடலரித்து...
நோய்க்காரணம் அறியாமலேயே
இறப்பதற்கான வேதிக் கலப்புகள்
ஏற்றப்படும் குருதிகளில்...
உலகின் ஏதோ ஒரு மூலையில்
இன்னமும் நடந்து கொண்டுதானிருக்கிறது
யார் எப்போது கண்டறியப் போகிறார்கள்
சர்வதேச குற்றவாளிகளை...??

உடனடியாக நோய் குணமடைகிறதாம்
குவிகிறது நோயாளிக் கூட்டம்
அந்த மருத்துவரிடத்தில்...

உடல் ஏற்பிற்கு தகுதியற்ற அளவினில்
ஸ்டெராய்ட் கலப்பில் வீரிய மாத்திரைகள்
அளிக்கும் மருத்துவர்
கடவுளாம்... கைராசிக்காரராம்...

வீரிய மாத்திரைகள் அனைத்தும்
புற்று நோய்களுக்கு விதையூன்றியபடி..
புற்று முற்றினாலும்
மகிழ்ச்சிதான் மருத்துவருக்கு
மீண்டும் பணம் அறுவடை செய்யலாம் ...

பணத்தாசையில் தொழில் தர்மமும்
இறந்தேதான் போனது....

உண்ணும் உணவில் வேதிப் பொருள்
பிணிக்கான மருந்தில் வேதிப் பொருள்
வேதிக் கலப்போடு
தினம் மனித வாழ்க்கை
எங்குபோய் முடியுமோ???
இதயம் கனக்கிறது..... !!

எழுதியவர் : சொ.சாந்தி (15-Jun-15, 9:59 pm)
பார்வை : 150

மேலே