யோகா

மூச்சை
ஆழ்ந்து உள்ளிழுங்கள்
நிதானமாய்
வெளிவிடுங்கள்
மெல்ல மெல்ல
அப்படித்தான்
அப்படித்தான்
ஆன்ம ஒளி
ஆன்ம கதகதப்பு
ஆன்ம பரவசம்
ஆன்ம etc
உங்கள் தேகத்தில்
நிரம்புகிறது
நீங்கள் கடவுளை
நெருங்கிவிட்டீர்கள்
கடவுள்
உங்களுக்குப் பக்கத்திலே
சிரித்துக் கொண்டிருக்கிறார் ...
இதோ
இந்த ஆசனம் இருக்கிறதே
இது கண்டிப்பாக
உங்கள் குண்டலினியை
விழித்தெழச் செய்யும்
ஒரு திங்கட்கிழமை
தூக்கத்திலிருந்து
திடுக்கிட்டு
விழித்தெழுவது போல
திடுக்கென நீங்கள்
ஞானம் பெறுவீர்கள்
உண்மையை
உணரப் போகிறீர்கள்

ஆஹா
இன்றிலிருந்து
நான் புது மனிதன்
புதிய மனிதன்
ஆன்ம ஒளியால்
நிரம்பப்பெற்றவன்
குண்டலினி
கண்டிப்பாய் மேலெழும் ...
எனது மண்டைக்குள்
ஆயிரம் தாமரைகளின்
தரிசனத்தை
நான் காண்பேன்
என்கிற
பரிபூரண
எண்ண சுத்தியோடு
காலையுணவு உண்ண
டைனிங் டேபிளில்
அமர்ந்தேன்

" எலே.........
அறிவுகெட்ட மூதி ..
நல்லா கீழே
உக்காந்து
சம்மணம் போட்டுச்
சோறு தின்னுல .........."

என்றபடியே
தனது வெற்றிலைக் கிண்ணியை
ணங் ணங் என்று
இடித்தது
அப்பத்தா

எழுதியவர் : குருச்சந்திரன் கிருஷ் (20-Jun-15, 11:15 am)
Tanglish : yogaa
பார்வை : 3554

மேலே