ஒதுங்கு முக்கம்

ஒவ்வொருமுறை ஊர்சென்று
திரும்பும்பொழுதும் அனிச்சையாகவே
ஒதுங்கு முக்கத்தில் ஒதுங்கி
நின்றுவிடுவதுண்டு......

ஒவ்வொரு அனிச்சை
ஒதுங்கல் நிகழ்விற்கும் ஞாபகங்கள்
ஒழுகுவதை... வைப்பரைப் போல
காரணங்கள் கேட்டுத்
துடைத்துக் கொண்டிருப்பான் மகன்.....

சைக்கிள் டயர் ஓட்டி
தடுக்கிவிழுந்தது.... கூட்டுகளோடு நின்று
கைலி கட்டப் படித்தது....
நுங்கு வெட்டக்கிளம்பி... அடிவேர்களில்
அரிவாள் தீட்டியது... குடம் தூக்கிப் போனவளை
ஒளிந்து ரசித்தது.. என
சொல்லிக்கொண்டிருக்கையில்....

அம்மாதான் குடம் தூக்கிப் போனதா...?
தலைமுறை நவீனங்கள்
வளர்த்திருந்ததில் அவன் இடைமறித்தும்....
அம்மாவாகியிருந்தவள் பின்னாலிருந்து
முறைத்துக் கொண்டிருப்பாள்...

இளையராஜா பாடலோடு
சமாதானப்படுத்தி... வீடு நுழைந்ததும்
பால்யங்கள் தேடி வாசல்
இறங்குகையில் என்னைப் போலவே
எதிர் நின்றிருப்பான் வேறொருவனும்....

காலார நடந்துசென்று ஒதுங்குமுக்கச்
சமீபங்களில்
சந்தோஷித்துக் கொண்டாலும்...

"நம்ம புளியமரத்தடி போல
வருமாடா...........!"

எங்களைப் போலவே
வெதும்பிக்கொண்டிருக்கலாம்
நாற்கரச் சாலையினடியில்
புந்தைந்திருந்த புளியமரத்தடிகளும்.......

எழுதியவர் : கட்டாரி (சரவணா ) (30-Jun-15, 10:22 am)
பார்வை : 99

மேலே