கடவுளைக் கண்டவன் - அறிவியல் புனைவுச் சிறுகதை

ரங்கராஜன் தன் சொந்த ஆய்வுக்கூடத்தில் இருந்தான். அவனைச் சுற்றி ஆறு திரைகள், இரண்டு பெரியது, நான்கு சிறியது. அவைக் காட்டிக்கொண்டிருந்த வண்ணக்கோலங்களைப் பார்த்து குறிப்பெடுத்துக்கொண்டிருந்தான் ர.ராஜன்.

ரொம்பவும் இல்லாத கொஞ்சமும் இல்லாத சிக்கனமான தேகம், கூர்மையாகப் பார்க்கும் விழிகள், அகன்ற நெற்றி, காதை உறுத்தாத கட்டைக் குரல். ஆங்காங்கு எட்டிப்பார்த்த நரைமுடி இல்லையென்றால் ரங்கராஜனை முப்பத்தைந்து வயதுக்காரன் என்று சொல்லமாட்டீர்கள். மாநிலப் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பேராசிரியன்.

ர.ரா-வின் வேகத்துக்கு அவனது கைக்கணினி ஈடுகொடுக்கவில்லை போல, அவ்வப்போது குறிப்புகளைச் சரளமாய்க் குரல்பதிவும் செய்துகொண்டிருந்தான்.

“வந்தனம் பாஸ்! எவ்ளோ போயிருக்கீங்க?” வசந்த் விசிலடித்துக்கொண்டேதான் உள்ளே வருவான்.

ரங்கராஜனைவிட அரையடி உயரம் அதிகம், அலைபாயும் கேசம். நேர்த்தியான உடற்கட்டு, அதை எடுத்துக்காட்டும் டி-சட்டையும், ஜீன்சும் அணிந்து ‘ஸ்மார்ட்’ என்று சொல்ல வைக்கும் முகம். ரங்கராஜனின் முதல் மற்றும் ஒரே ஆய்வு மாணவன் (’அந்தாளுகிட்ட எவன் டா சேருவான்!’.) ஆய்வு முடித்தபின் இவனோடே உதவியாய்ச் சேர்ந்துகொண்டுவிட்டான். பல்கலை வேலைக்கும் முயற்சி செய்துகொண்டிருக்கிறான்.

”இரண்டாயிரம்” ர.ரா திரைகளைவிட்டுப் பார்வையைத் திருப்பாமலே பதில் சொன்னான்.

“பாஸ்… க்ளியோபாட்ராவக் கொண்டுவருவோமா? செம்ம அழகுனு வரலாறு பூரா வழிஞ்சு வெச்சிருக்காங்க பாஸ்…” ஆய்வுக்கூடத்திற்கான வெள்ளை மேலங்கியை எடுத்துப் போட்டுக்கொண்டு, திரைகளை நோட்டம் விட்டபடியே கேட்டான்.

”’ஸ்டாடிஸ்’ஸோட ஃபீல்டைத் தாண்டிப் போனா ஒரு வாரத்துக்கு எல்லாம் மரத்துடும், பரவால்லயா?” வழக்கமான பொய்க் கோவத்தைக் காட்டினான் ர.ரா.

“சரியான கடி பாஸ் நீங்க!”

”உண்மையாவே நீ நான்–லீனியர்ல டாக்ட்ரேட்’டா டா?”

“தீசிஸ்-ல நீங்கதான் கையெழுத்துப் போட்டிருக்கீங்க!”

“தப்புதான்!” ர.ரா இலேசாக தலையில் அடித்துக்கொண்டான்.

“மரத்துப் போனா என்ன?” குரல் கேட்டு இருவருமே திரும்பினர், பெண்குரல் என்றதால் வசந்த் கொஞ்சம் அதிக ஆவலோடே திரும்பினான்.

“ஹே, ஹாய்!” வசந்த் தானாகவே அவள் கைகளைக் குலுக்கினான், “பாஸ், நி.நா. கணினி வல்லுநர் கேட்டிருந்தீங்களே, நம்ம பல்கலை-லதான் ஸ்காலரா இருக்கா, செம மூளை, உங்களுக்கு ’பிசிக்ஸ்’லனா இவளுக்கு ’கம்ப்யூட்டர்’ல…” கையை விடவில்லை இன்னும், “நி.நா, டாக்டர் ரங்கராஜன்” ர.ரா-க்கும் சேர்த்து அவனே கைக்குலுக்கினான்.

“வந்தனம் நீனா” ர.ரா திரைகளைப் பார்த்துக்கொண்டே சொன்னான்.

“நீனா இல்ல பாஸ், நி.நா. நித்ய… அப்பறம் என்னமா?”

“நித்யநாராயணி! நி-நா!” அழுத்திச் சொன்னாள். வசந்திடமிருந்து கையைப் பறித்துக்கொண்டு மணிக்கட்டைத் தடவிக்கொண்டாள்.

நி.நா-வைப் பார்த்தவுடன் முதலில் அவளது பட்டையான கண்ணாடியைத்தான் கவனிப்பீர்கள். அப்புறம் குதிரைவால் கொண்டை, கொஞ்சம் தொளதொள ஆடை, பூச்சு இல்லாத முகமும் உதடும், இவற்றையெல்லாம் தாண்டி அலட்டிக்கொள்ளாத அழகும் அலட்டிக்கொள்ளும் அறிவும் மின்னும் அவளிடம்.

”சரி, நி-நா” ரங்கராஜனும் அவளைப் போலவே அழுத்திச் சொல்லிக்காட்டினான், “நீ எதுக்கு தேவப்படுறனு வசந்த் சொல்லிருப்பான்…”

“இல்ல!” முடித்தாள்.

“என்னடா?” திரைகளைவிட்டு வசந்தை நோக்கி முறைத்தான்,

“சொல்ல வரதுக்குள்ள வீட்டுக்குப் போய்ட்டா பாஸ்” வசந்த் தனது அக்மார்க் இளித்தான்.

“இதக் கூட சொல்லாம ரெண்டு மணி நேரமா என்னடா பண்ணிட்டு இருந்த?, வேண்டாம் சொல்லாத!”

“நீங்க நினைக்குற மாதிரி இல்ல பாஸ்!” அப்பாவியாக முகத்தை வைத்துக்கொண்டான், ”அவ ரிசர்ச் பத்திதான் பேசிட்டு இருந்தேன், இல்ல நினூ?”

“இல்ல!” நி.நா வசந்தைச் சீண்டிப்பார்த்தாள்.

“ஆல் ரைட், எனக்கு அதிக நேரம் இல்ல, முழு விவரமும் உனக்குத் தேவையில்ல, புரியவும் புரியாது…” ‘புரியாது’ என்றதில் நி.நா இடுப்பில் கைவைத்துக்கொண்டு முறைத்தாள், வசந்த் ‘அமைதி’ என்று பின்னாலிருந்து கையசைத்தான், ரங்கராஜன் எதையும் கண்டுகொள்ளாமல் தொடர்ந்தான்,

“எங்க ஆராய்ச்சி ஒருவகை ‘டைம் டிராவல்’, ஆனா நாம எங்கயும் போகல, வெவ்வேறு காலத்திலிருந்து பொருளையோ ஆளையோ இங்க கொண்டு வரலாம், இதோ இந்தக் கூண்டுக்குள்ள, “ஸ்டாடிஸ்’, இதைச் சுத்தி மின்காந்தப் புலத்தை ஒரு குறிப்பிட்ட பேட்டர்னல் அலையவிடுறது மூலம் உள்ள இட-காலப் பரிமாணங்களை மாற்ற முடியும், அவ்ளோதான்!” நி.நா-வையும் திரைகளையும் மாறிமாறிப் பார்த்தவண்ணம் பேசினான் ர.ரா. வசந்தும் தன் பங்கிற்குச் சில கருவிகளை இயக்கிவிட்டுத் தன் கைக்கணினியில் குறிப்பெடுத்துக்கொண்டிருந்தான். ர.ரா நிறுத்தியதும் வசந்த் தொடர்ந்தான்,

“ஜடப் பொருள்கள்ல தொடங்கி ’ஸ்டாடிஸ்’-குள்ள ஆளைக் கொண்டு வர அளவுக்கு வந்துட்டோம். ஆனா இப்போதைக்கு எங்களால ‘ராண்டமா’தான் கொண்டுவர இயலுது. குறிப்பிட்ட இடம், காலத்துல குறிப்பிட்ட ஆளைக் கொண்டுவரதுதான் குறிக்கோள். இங்கதான் உன் உதவி தேவை…” வசந்த் நி.நா-வை நோக்கிக் கண்சிமிட்டினான். நி.நா (செல்லமாக) முறைத்தாள்.

“யெஸ் யெஸ்… வசந்த் சொல்ல மறந்துட்டேனே, நேத்து நீ போனப்புறம் என்ன ஆச்சு தெரியுமா, நம்பவே மாட்ட” ர.ரா சட்டென பரபரப்பானான், வசந்தும் நி.நா-வைவிட்டு அவனைக் கவனித்தான், “ஸ்வீப் ரேஞ்ச் ஆயிரம் ஆண்டுலேர்ந்து ஆயிரத்து ஐந்நூறுக்குப் போச்சு, டெஸ்ட் ரன் ஓட்டினேன்…” சின்னக் குழந்தைக்குக் கதை சொல்வதைப் போல ஆவலைத் தூண்ட இடைவெளிவிட்டுத் தொடர்ந்தான், ”ஸ்டாடிஸ்-குள்ள தி கிரேட் சோளா எம்பரர் வந்து நிக்குறாரு!”

வசந்தின் கண்கள் விரிந்தன, நி.நா-வும் பரபரப்பானாள், “என்ன சொல்றீங்க பாஸ்? ராஜ ராஜனா?”

“இல்லடா, ராஜேந்திரன்!” ர.ரா தன் கைக்கணினியில் தட்டினான், பெரிய திரைகள் இரண்டிலும் காட்சிகள் ஓடின- வெளிர்நீலம், இளஞ்சிவப்பு இழையோடி ஒளிர்ந்த அந்தக் கூண்டிற்குள் மஞ்சள் பட்டில் தார்ப்பாய்ச்சிக் கட்டிய வேஷ்டியும், இளஞ்சிவப்பு பட்டில் மேல் துண்டும் அணிந்த, ஆறடிக்குக் கொஞ்சம் உயரமாய், கட்டான உடலுடன், இடுப்பில் சொருகிய கட்டாரியும், முறுக்கு மீசையும், கொண்டை போட்ட சடைமுடியுமாக கம்பீரமான ஒருவன் கைகளை ஆவேசமாக ஆட்டிக் கத்திக்கொண்டிருந்தான்…

நி.நா. நம்ப சிரமப்பட்டாள்.

”என்ன பாஸ், மனுஷன் இவ்ளோ டென்ஷனா கத்துறாரு? என்ன பண்ணீங்க?”

“நான் என்னடா பண்ணேன், சட்டுனு இங்க வந்ததுல ஒன்னும் புரியாம கோவமாயிட்டாரு போல…”

“எந்த நேரத்துல தூக்கினீங்களோ! மனுஷனுக்கு எத்தன அரசிங்க தெரியுமா பாஸ்? மரத்துப் போச்சுனா கோவம் வரத்தான செய்யும்…”

“ஷட் அப் வசந்த்!”

வசந்த் நி.நா-வைப் பார்த்து மறுபடி கண்சிமிட்டினான்.

“’மரத்து’ மீன்ஸ் என்ன?” நி.நா திரையையே பார்த்தபடி கேட்டாள், பள்ளிப்பெண் போல துள்ளின அவள் கண்கள், வசந்த் கொஞ்சம் அவளுக்கு அருகில் சென்றான்,

“அது வந்து நி.நா…”

“ஒத வாங்காத வசந்த்!” ர.ரா தன் கட்டைவிரலால் கழுத்தை வெட்டிக் காட்டினான்.

“இதெல்லாம் உண்மையாவே உண்மையா?” திரையைக் காட்டிக் கேட்டாள், அதில் இப்போது வெறும் கூண்டு மட்டும் தெரிந்தது, “எப்படி இறந்தகாலத்துல இருந்தவங்க இப்பவும் இருப்பாங்க? எப்படி அவங்களை ‘கார்ப்போரிய’லா கொண்டு வர முடியும்?”

”கேள்விலியே பதில் இருக்கு நீனா…”

“நி.நா.” முறைத்தாள்,

“சரி… இறந்தகாலத்துல இருந்தவங்க இப்ப இருக்க மாட்டாங்கதான், ஆனா அப்ப இருப்பாங்கல?”

“கிராமர் தப்பு பாஸ்!”

“நீயே சொல்லித்தொலை!” ர.ரா தன் கைக்கணினியைப் பார்த்தான்.

“அதாவது நி.நா, இப்ப மணி 6.15, நீ இங்க இருக்க, சரியா…” அவள் அருகில் சென்று தோளில் கைகளை வைத்தான், அவளை மெல்ல நகர்த்திக் கூடத்தின் மற்றொரு மூலைக்குக் கொண்டுவந்தான், “மணி 6.16, நீ இப்ப இங்க இருக்க, ரைட்?”

“ம்” அழுத்தமாக ஒற்றை மாத்திரையில் சொன்னாள், தோளிலிருந்து அவன் கைகளை எடுத்துவிட்டாள்,

“6.15-க்கு நீ அங்க இருந்தது உண்மைதான? அங்க இருந்த ‘நீ’ மாயை இல்லைல? ‘கார்ப்போரியல்’ நி.நா-தான? ஒத்துக்குறியா?”

“நல்ல உதாரணம் வசந்த்”

“நன்றி பாஸ்!” வசந்த் வலது கையை நெஞ்சில் வைத்து குனிந்து வணங்கினான், “புரிஞ்சுதா நி.நா? 6.15-க்கு என்னால அங்க மறுபடி போக முடிஞ்சா அந்த நொடில நான் மெய்யாவே உன்னை அங்க சந்திப்பேன்…”

“ஆனா, எப்படி அங்க போறது?”

“ஹ! நாங்க நாலு வருஷம் கஷ்டப்பட்டது அதுக்குத்தான!”

“ரைட்…” நி.நா ஆழ்ந்த சிந்தனையுடன் தலையசைத்தாள்,

“வேணும்னா சொல்றேன்… எக்ஸ்ட்ராபொலேஷன் ஆஃப் க்வாண்டம் எண்டாங்கிள்ட் ஸ்டேட்ஸ் ஆஃப் ஸ்பேஸ்-டைம் கண்ட்டினுயம் வித் மாடுலேட்டட் இ-எம் ஃபீல்டு அண்டர்-”

“போதும் வசந்த்… நீ அவளுக்கு அப்பறமா பாடம் நடத்தலாம்…”

“இல்ல பாஸ், அவளும் இதுல வேலைப் பார்க்கப்போறா…”

“முட்டாள், நீ அவள பயமுறுத்துற…” ர.ரா நி.நா-வைப் பார்த்தான், அவள் வழக்கம்போல முறைத்தாள்,

“முழுசா புரியலைதான், ஆனா சுத்தமா புரியாம இல்ல, நானும்-” ர.ரா இடைவெட்டினான்,

“ஆல்ரைட் ஆல்ரைட், என்னை மன்னி!” தலைமேல் கைகூப்பினான், ”வசந்த், நி.நா-வோட லீகல் பார்மாலிட்டிலாம் முடிச்சுட்டியா? அக்ரிமெண்ட்?”

“நான் ஒன்னும் வக்கீல் வசந்த் இல்ல பாஸ்!” கோவமாய்ச் சொல்லிவிட்டு, நி.நா-வைவிட்டு நகர்ந்து மீண்டும் தன் கருவிகளின் பக்கம் போனான்.

“அது நீ சொல்லாமலே தெரியும்! இவ இங்க இருக்கனும்னா லீகலா ரெகார்ட் பண்ணிடறது நல்லது, என் ஆராய்ச்சி என் மூலமா இல்லாம வெளில போறத நான் விரும்பல!”

”யூனிவர்சிட்டில அனுமதி வாங்கிட்டேன், உங்க அக்ரிமெண்ட்டையும் கொடுத்தா படிச்சுட்டுக் கையெழுத்துப் போட்டுக் கொடுத்துடுறேன்… எனக்கே தெரியும்!” ஏனோ நி.நா ர.ரா-வைச் சண்டைக்கோழி போலப் பார்த்தாள்.

”தேர்… போதுமா பாஸ்?” வசந்த் கைகளைக் காற்றில் வீசினான்.

”லிசன், உன் அறிவைச் சந்தேகப்படுறதா இருந்தா உன்னை உள்ளயே விட்டிருக்க மாட்டேன், புரியுதா? திஸ் இஸ் ஒய் ஐ டோண்ட் டேக் பிளடி-”

“சொல்லாதீங்க பாஸ்!” வசந்த் இரயில் வண்டியை நிறுத்த முயல்பவனைப் போல கைகளை விரித்து ஆட்டினான்.

”ஒரு கேள்வி கேட்கலாமா?” கைகளை மார்புக்குக் குறுக்காகக் கட்டிக்கொண்டு ர.ரா-வை நேராகப் பார்த்துக் கேட்டாள், வசந்த் அவளைப் பார்த்தான், ‘கேளு’ என்று ர.ரா கையசைத்தான்,

“இதனால் என்ன பயன்? பழைய ஆளுங்களை இங்க கூட்டி வந்து என்ன பிரயோஜனம்?”

”டு ஸ்டார்த் வித்…” ர.ரா-வும் தன் கைகளை மார்புக்குக் குறுக்கே கட்டிக்கொண்டு, அருகில் பெரிய அலமாரி போல இருந்த ஒரு கருவியின் பக்கம் சாய்ந்துகொண்டான், வசந்த் கண்களை உருட்டினான் (”போச்சு டா!”), “வரலாற்றை உண்மையா கத்துக்கலாம், நோ மோர் கெஸ்ஸிங்…”

“ஆனா-” வசந்த் கையசைக்க நி.நா. நிறுத்திக்கொண்டாள், ர.ரா ஒருமுறை அவளை ஏறிட்டுப் பார்த்துவிட்டு, பின் தன் உள்ளங்கையைப் பார்த்தவாறே தொடர்ந்தான்,

“வரலாறு ரொம்ப முக்கியம், அதுல எனக்கு மாற்றுக் கருத்து இல்ல! ஆனா நீ நினைக்குறதும் சரிதான், இதுல வரலாறையும் தாண்டி விஷயம் இருக்கு, வரலாறு இந்தப்பக்கம்னா” விரல்களை மடக்கி கட்டைவிரலை மட்டும் நீட்டி தனக்குப் பின் பக்கம் காட்டினான், “எதிர்காலம் இந்தப் பக்கம் இருக்கு…” விரலை முன்னால் காட்டினான்.

“யு மீன்…” நி.நா நிமிர்ந்து நின்றாள்,

“எஸ்… அதேதான்… ராஜேந்திரனைக் கொண்டு வந்தது போல ரெண்டாயிரம் வருஷம் முன்னாடிப் போய் ஒருத்தனைக் கொண்டு வந்தா நாம் என்னலாம் கத்துக்கலாம்? பட் நாட் எனி ராண்டம் காய், யு சீ…”

“ம்ம்… ஒரு விஞ்ஞானி தேவை, எதிர்காலத்துலேர்ந்து…”

“ஆமா, ஆனா அது பின்னால போறதைவிட ரொம்ப கஷ்டம்… பின்னாலயாவது யார் யார் எப்ப எங்க இருந்தாங்கனு குத்துமதிப்பா தெரியும், டார்கெட் பண்ணிடலாம், ஆனா எதிர்காலத்துல எப்படி தேடுறது? ராஜேந்திரர் டென்ஷன் ஆனா மாதிரி, ஒரு எதிர்கால ராணுவ வீரன் ஸ்டாடிஸ்-குள்ள வந்து அவன் கோவப்பட்டான்னா… என்ன எதிர்ப்பார்க்குறதுனே நமக்குத் தெரியாதே….” ர.ரா கைகளை விரித்தான்.

“ம்ம்…” நி.நா இப்போது ஆர்வமே கண்களாய் இருந்தாள், வசந்த் பேச்சைத் தொடர்ந்தான்,

“அதனாலத்தான் எதிர்காலத்துல கை வெக்குறதுக்கு முன்னாடி இறந்தகாலத்துல ஸ்டாடிஸ்ஸோட செயல்பாட்டை முழுசா சீராக்க விரும்புறோம்… இப்போதைக்கு எங்களால இரண்டாயிரம் வருஷம் வரைக்கும் பின்னால போய்க் கொண்டுவர முடியும், இடத்தைத் துல்லியமா குறிக்க முடியும், காலத்தையும் துல்லியமாக்கத்தா உன் உதவி எங்களுக்குத் தேவை…”

“ஓ.கே… நான் என்ன பண்ணனும்னு இன்னும் கொஞ்சம் தெளிவா எனக்குத் தெரியனும், அதுக்கு முன்னாடி இந்த கருவிகள் என்னென்ன பண்ணுதுனு தெரிஞ்சுக்கனும்…”

“அதுக்கெல்லாம் வசந்த் உனக்கு உதவுவான், டேக் யுவர் டைம்” இருவருமே எதிர்பாராத வகையில் ர.ரா நி.நா-வின் அருகில் வந்து நின்றான், “எங்களுக்குத் தெரிஞ்ச கம்ப்யூட்டர் சயின்ஸ் போதல, இடம்-காலம் இரண்டையும் துல்லியமா குறிவெக்க இந்தச் சாதனங்களை இன்னும் கொஞ்சம் மேம்படுத்தனும், ஆயிரம் ரெண்டாயிரம் ஆண்டுனு வரப்ப ஸ்டாடிஸ்ஸோட பீல்டுல ஏற்படுற மைக்ரோ பிக்கோ அளவு அதிர்வுகள் கூட பெரிய மாற்றத்தை உண்டு பண்ணிடுது… என்ன நடக்குது, அதை எப்படி சரிகட்டனும்குற இயற்பியல் எங்களுக்கு அத்துப்படி, ஆனா அதை இந்தக் கருவிகளுக்குச் சொல்லித்தர எங்களுக்குத் தெரியல, இங்கதான் நீ தேவைப்படுற, சரியா?” ர.ரா கொஞ்சம் உருக்கமாகவே பேசினான். முதல்முறையாக இந்த ஆய்வின் தீவிரத்தை அவனிடம் உணர்ந்தாள் நி.நா.

“புரியுது பாஸ்!” இரண்டாவது ’முதல்முறை’யாக நி.நா ர.ரா-வைப் பார்த்து புன்னகைத்தாள். அவள் ‘பாஸ்’ என்றதில் (மூன்றாவது மு.மு!) ர.ரா இலேசாக கன்னம் சிவந்தான்.

”ஒரே ஷாட்ல ஸ்கோர் பண்ணிட்டீங்க பாஸ்! நெப்ட்யூனுக்கே போனாலும் பொண்ணுங்க கிட்ட செண்டிமெண்ட்தான் வேலைசெய்யும் போல…”

”ஷட் அப் வசந்த்!” ர.ரா. சமாளித்துக்கொண்டு பழைய விரைப்பிற்கு வந்தான், “பை த வே, நான் ஒரு டார்கெட் பிக்ஸ் பண்ணிருக்கேன், இனிமே ஏனோதானோ ‘ரன்’ கிடையாது, (’ராஜேந்திரன்கிட்ட வசவு வாங்கினதே போதும்’) லிசன் வசந்த், சரியா மூவாயிரம் வருஷம் பின்னால போறோம், குறிப்பிட்ட தேதி, குறிப்பிட்ட நேரம், குறிப்பிட்ட இடத்துல ஒருத்தரைப் பிடிக்குறோம்… அவரை மட்டும் பிடிச்சோம் ரொம்ப இண்ட்ரஸ்டிங்கான ஒரு விஷயத்தைத் தெரிஞ்சுப்போம்… அநேகமா நம்ம ஆராய்ச்சியைவிட அது அதிகமா பேசப்படும்…” ர.ரா அதிகமாக புதிர் போட்டான், இது அவன் இயல்பு இல்லை.

”பீடிகைலாம் ரொம்ப பலமா இருக்கு… பார்ட்டி யார் பாஸ்?”

“மூவாயிரம் ஆண்டு, துல்லியமா போறா மாதிரி ஸ்டாடிஸ்ஸை ரெடி பண்ணிட்டு வாங்க, அப்ப சொல்றேன்…”

* * * * * * * * * * * * * * *

”பாஸ், உண்மையாத்தான் சொல்றீங்களா?” வசந்த் எதற்கும் அவ்வளவு எளிதாக ஆச்சரியப்படும் ஆள் கிடையாது.

“விளையாட்டில்லை வசந்த்! அறிவியலைவிட இந்த உலகத்துல சக்திவாய்ந்த ஒன்னு இருக்குனா அது மதம்தான். எத்தனையோ மதம், எத்தனையோ கடவுள். எல்லாமே ஒருவித திரைக்குப் பின்னால இருக்கு, ஆனா, ஒரு மதம் மட்டும் எல்லாத்தையும்விட அதிகமா நம்பகத்தன்மை பெற்றிருக்கு…”

“கண்டதேவர் வழி” வசந்த் மெதுவாய், அழுத்தமாய் உச்சரித்தான். நி.நா. நிமிர்ந்து உட்கார்ந்துகொண்டாள்.

“அவர் உண்மையாவே கடவுளைப் பார்த்தார்னு நீங்களும் நம்புறீங்களா?” இருவரையுமே கேட்டாள்,

“நம்புறேன் நம்பல, அதைத்தான் முடிவு பண்ணிக்க விரும்புறேன் நான்” ர.ரா தன் உள்ளங்கைகளை மெல்ல தேய்த்துக்கொண்டபடியே பேசினான் “மத்தவங்களுக்கும் இவருக்கும் ஒரு பெரிய வேறுபாடு இருக்கு நீனா- (’நி.நா!’) சாரி! கடவுளைப் பார்த்ததா சொல்ற யாருக்குமே அதுக்கான ஆதாரம் இல்ல, நம்பிக்கை அடிப்படைலதான் ஏத்துக்கப்பட்டாங்க, ஆனா கண்டதேவர் கதை அப்படியில்ல…”

“ஆமா நினூ, அவர் கடவுளைப் பார்த்ததை ஆயிரக்கணக்கான மக்கள் பார்த்திருக்காங்க… ரெண்டு மூனு வெளிநாட்டு பயணிகள் கூட பார்த்திருக்காங்க… ஒரு பெரிய கூட்டத்துக்கு மத்தில இருந்தவர் அப்படியே ஒளிப்பிழம்பா மாறி காணாம போயிட்டாரு, ஒரு மணி நேரம் கழிச்சு அதே போல ஒளிப்பிழம்புல தோன்றித் திரும்பி வந்திருக்காரு… கடவுள் தன்கிட்ட பேசி, ஐந்து கட்டளைகள் கொடுத்ததா சொல்லிருக்காரு… அவர் திரும்பி வரப்ப ஒளிப்பிழம்புக்கு அந்தப் பக்கம் இருந்த கடவுளை அங்கிருந்த சிலரும் பார்த்திருக்காங்க… வெள்ளவெளேர்னு…” வசந்த் கொஞ்சம் உற்சாகம் தொற்றிக் கொண்டவனாய்க் காணப்பட்டான்,

நி.நா. மெதுவாக ‘ம்ம்…’ என்றாள், வசந்த் இலேசாய் சீற்றமடைந்தான், “நீ நம்பலேன்னா என்ன! ஆயிரக்கணக்கா டாக்குமெண்டட் எவிடன்ஸ் இருக்கு… ஒரு நாட்டுல இல்ல நாலு நாட்டுல, கண்டதேவர் ஒளியா மறைஞ்சு போயி திரும்பி வந்தது, ஒளிக்குள்ள மக்கள் பார்த்த கடவுளின் உருவம் எல்லாம் எல்லா ரெக்கார்டுலையும் ஒத்துப் போகுது… கல்வெட்டு, குகை ஓவியம், செப்பேடு எல்லாம் ஒத்துப் போகுது… ஐ.நா-வே வரலாற்றின் மிக நம்பகமான கடவுள் சந்திப்பு-னு சர்டிபிகேட் கொடுத்திருக்கு, சும்மா ஒன்னும் யாரும் மூவாயிரம் வருஷமா ஒரு விஷயத்தை நம்ப மாட்டாங்க நினு…”

”கூல் டவுன் வசந்த்… ஐ தாட் யு ஆர் அன் ஏதிஸ்ட்!” ர.ரா வசந்தின் தோள்களில் கைவைத்து அமர்த்தினான்,

“ஐ ஆல்வேஸ் ஆம் பாஸ்! பட் திஸ் இஸ்… இதுவும் அறிவியல்தான் பாஸ்!”

“ரிலாக்ஸ், நம்ம ஸ்டாடிஸ் தயார், நாளைக்கு நாம உண்மைய சந்திக்கப் போறோம்…”

”நிச்சயமா பாஸ்?” வசந்திடம் இருந்தது ஆர்வமா ஆச்சரியமா என்று சொல்ல இயலவில்லை.

”சிமுலேஷன் ரன்லாம் கச்சிதமா போயிருக்கு வசந்த், நாம நூறு சதவீதம் தயார்!” நி.நா-வும் உற்சாகமாகவே காணப்பட்டாள்,

“ஸோ, நாளைக்கு நாம கடவுளைச் சந்திச்சவனைச் சந்திக்கப் போறோம்…” ர.ரா மந்திரவாதி போல கையை ஆட்டிக் காட்டினான்.

* * * * * * * * * * * * * * * * *

”ஓ.கே! தொடங்கலாமா?” ர.ரா துல்லியமான வெள்ளை ஆடைகள் அணிந்திருந்தான், ஆய்வக அங்கியோடு சேர்த்து, அவனைப் பொறுத்தவரை இதுவும் ஒரு வாழ்நாள் நிகழ்வுதான்.

“யெஸ் பாஸ்…” “ரெடி பாஸ்!” வசந்த் ஆரஞ்சு வண்ணமும், நி.நா. வெளிர்நீலமும் அணிந்திருந்தனர். வசந்த் ஆய்வக அங்கி இல்லாமல்தான் இருந்தான்.

“ஃபீல்ட் ஸ்டெபிளைசர்ஸ்…”
“செக்!”
“ஆசிலேட்டர்ஸ்…”
“செக்!”
“ஸ்கோப்ஸ்…”
“செக்!” – ர.ரா சொல்லச் சொல்ல வசந்தும் நி.நா-வும் ஒவ்வொரு கருவியாக இயக்கிக் கொண்டே வந்தனர், மெல்ல அந்த ஆய்வுக்கூடம் உயிர்பெற்றது, மூவரின் இதயத்துடிப்போடு சேர்த்துக் கருவிகளும் விரைவாகத் துடித்தன… ர.ரா தனது இறுதி கட்டளையைக் கொடுத்தான் “எங்கேஜ்!”

’சொய்ய்ய்ய்ங்ங்ங்ங்…’ என்று ஒரு மெல்லிய அழுத்தமான கீறல் ஒலி காதை அடைக்க, ஸ்டாடிஸ் கூண்டைச் சுற்றி ஒளிக்கோலம் தொடங்கியது… பலவண்ணங்களில் தொடங்கி முடிவாக இளஞ்சிவப்பு, வெளிர்நீல இழைகளில் ஊசலாடியது…

உள்ளே ஒருவன்!

மூவரும் சில நொடிகள் செய்வதறியாது திகைத்து நின்றனர். ர.ரா-தான் முதலில் பேசினான் (மூவாயிரம் ஆண்டிற்கு முற்பட்ட மொழிவழக்கில். இதற்காகவே அதை கற்றிருந்தனர். இன்னும் உச்சரிப்பு அத்தனை சுத்தமாக வரவில்லைதான்!)

“வந்தனம்… கடவுளைக் கண்டீரா?”

பரபரப்பில் நேரடியாக இந்தக் கேள்வியையே முதலில் கேட்டான், உள்ளே இருந்தவன் திருதிருவென்று விழித்தான், ஏதோ சொல்ல முனைந்து ஒன்றும் சொல்லாமல் தலையை மட்டும் ’இல்லை’ என்று அசைத்தான்,

“ஐயா, கண்டதேவர்தானே தாங்கள்?” ர.ரா உறுதி செய்துகொள்ள விரும்பினான், வசந்த் அவன் தோளை நிமிண்டினான் “என்னடா?”

“பாஸ், கண்டதேவர்-ங்குற பேர் பிற்காலத்துலதான் வந்துச்சு, அவர் இயற்பெயர் சின்னாளன்!”

“ஆமாமா, அவசரத்துல மறந்துட்டேன்… ஐயா சின்னாளர்தானே தாங்கள்?”

ஆமாம் என்று தலையசைத்தான், இன்னும் அவனுக்குப் பேசும் துணிவு வரவில்லை போல, மருண்ட கண்களால் கூண்டைச் சுற்றிச் சுற்றிப் பார்த்துக்கொண்டிருந்தான், ர.ரா தொடர்ந்தான்,

“கடவுளைத் தாங்கள் நேரில் கண்டீர்களா?” மௌனம், “இறைவன்? பகவான்? ஆண்டவன்? என்னையா இந்தாளு?”

“பாஸ், அவர் கொஞ்சம் பயந்திருக்காருனு நினைக்கிறேன்…”

“ஐந்து கட்டளைகள்…” நி.நா ஆசிரியரின் கேள்விக்குப் பதில் சொல்லும் மாணவியைப் போல உற்சாகமாய் கையை உயர்த்திச் சொன்னாள் “அதப் பத்தி கேளுங்க…”

வசந்த் கேட்டான், மெல்ல ஒவ்வொரு கட்டளையாக சொல்லிக் காட்டினான், உள்ளே இருந்தவன் ’திருதிரு’தான்… “ஹோப்லெஸ் பாஸ்!”

”எங்கயோ தப்பு நடந்திருக்கு வசந்த்!” ர.ரா நி.நா-வை சற்றே வெறுப்புடன் பார்த்தான்,

“வாய்ப்பே இல்ல! எல்லாமே சரியா இருக்கு…” நி.நா விரைப்பாக பதிலிறுத்தாள்.

“பாஸ், ஒரு வேள, அங்க கூட்டம் அதிகமா இருந்ததால ஆள் மாறிடுச்சோ? பாஆஆஸ்ஸ்ஸ்…” வசந்த் கூண்டைக் காட்டி அலற, ர.ரா-வும் நி.நா-வும் அவசரமாய் திரும்பி பார்த்தனர், உள்ளிருந்தவன் மண்டியிட்டுத் தலையால் தரையைத் தொட்டுத் தொட்டு வணங்கிக் கொண்டிருந்தான், அவன் உடல் இலேசாய் நடுங்கியது, “ரொம்ப பயந்துட்டான் பாஸ், திரும்ப அனுப்பிடலாம்…”

“ஆமா, ஸ்டாடிஸ்-குள்ள ரொம்ப நேரம் வெச்சிருக்குறதும் நல்லதில்ல, கமென்ஸ் ரிவர்சல்…” மூவருமே பரபரப்பாக வேலை செய்தனர், மீண்டும் ‘சொய்ய்ய்ங்ங்ங்ங்’ ஒலி அதிகரிக்க கூண்டின் வண்ணக்கோலம் நிகழ்ந்தது, எல்லாம் அடங்கிய போது கூண்டு காலியாய் இருந்தது.

* * * * * * * * * * * * * *

”நம்பவே முடியல பாஸ், எங்க தப்பாச்சுனே தெரியல…” வசந்தும் நி.நா-வும் மீண்டும் மீண்டும் அந்த மனிதன் கூண்டுக்குள் இருந்த காட்சியையே திரையில் அலசிக்கொண்டிருந்தனர்.

”அவ்ளோவும் வேஸ்ட்! வெரி சாரி ராஜ்!” நி.நா இலேசாய்க் கொஞ்சினாள், வசந்த் அவளைக் குரோதமாய் பார்த்தான் ‘ராஜ்’?!

”இல்ல நாம எதோ மிஸ் பண்ணிருக்கோம்… வசந்த் நாம எந்த டைம் டா குறி வெச்சோம்?”

“அவர் கடவுளைப் பார்த்துட்டு வந்த ஒரு வாரத்துக்குள்ள பாஸ்! அப்பத்தான் அவர் மெமரி புதுசா இருக்கும், நமக்கு வசதினு சொன்னீங்க… லிட்டரேச்சர் படிதான் டைம கால்குலேட் பண்ணோம் நானும் நி.நா-வும்…” வசந்த் தேவைக்கு அதிகமாகவே பதிலளித்தான், தன்னிடம் தவறில்லை என்று காட்ட, “ஒரு வேள அந்த ஆளு டுபாக்கூரா இருப்பானோ?”

ர.ரா ஆழ்ந்த சிந்தனைக்குப் போனான்… கடவுளைக் கண்டவன்… அத்தனை ஆதாரமும் பொய்யா? இப்படியா கூட்டமாக பொய் சொல்லியிருப்பார்கள்? நிச்சயம் இல்லை, பழைய ஆவணங்களில் அத்தனை பொய்யிருப்பதில்லை, வேண்டுமானால் ஆர்வத்தினால் கூட்டிக்குறைப்பார்கள், கவிதை என்று கொஞ்சம் நீட்டிமுழக்குவார்கள், ஆனால் ஆதாரமாய் பொய் சொன்னதில்லை…

“பாஸ்…” வசந்த் மெல்ல அழைத்துப் பார்த்தான், ர.ரா எதையும் பொருட்படுத்தாமல் கூண்டையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தான், சட்டென ஏதோ பொறி தட்டியவனாய்ப் பரபரப்புடன் எழுந்து நின்றான்,

“வசந்த்…”

“பாஸ்?” இருவருமே எழுந்து நின்றனர்,

“அவர் கடவுளைப் பார்த்த தேதியை எப்படி கணிச்ச?”

”அஸ்ட்ரானமி பாஸ்! எந்த நட்சத்திர மண்டலம் எங்க இருந்துச்சு, எந்த கிரகம் எங்க இருந்துச்சுனு பாட்டுல பாடி வெச்சிருக்காங்க, இரண்டு ‘காமெட்’ சைட்டிங் கூட ரெக்கார்ட் ஆயிருக்கு பாஸ், இதெல்லாம் வெச்சுதான்…”

“மூவாயிரம் வருஷம் டா! எவ்வளவு தப்பாக வாய்ப்பிருக்கு?”

“கொஞ்சம்தான் பாஸ்…” வசந்த் சாதாரணமாக சொன்னான், ர.ரா அவனை எரித்துவிடுவது போலப் பார்த்தான், “ஓ.கே., ஓ.கே. ஒரு நிமிஷம்…” தன் கைக்கணினியை இயக்கினான், ”கோடில ஒரு சதவிகிதம் பாஸ்… அதாவது… பாஸ்!” வசந்த் அலறினான், இதையே எதிர்ப்பார்த்தவனைப் போல ர.ரா அவனைப் பார்த்தான்…

”ம்ம்… சொல்லு வசந்த்?”

“மூனு நாள்வரைக்கும் முன்னப் பின்ன போகலாம்!”

“அப்படினா…” நி.நா மெல்ல இழுத்தாள், ர.ரா பதில் சொன்னான்,

“கண்டதேவர் கடவுளைப் பார்க்குறதுக்கு முன்னாடியே நாம அவரை இங்க இழுத்துட்டு வந்துட்டோம்…”

”இல்ல பாஸ்… கொஞ்சம் வேற மாதிரி…”

“முன்னாலயும் இல்ல, பின்னாலயும் இல்லனா?”

“மை காட்! நிஜமாவா வசந்த்?”

வசந்த் தன் கைக்கணியை ர.ரா-விடம் நீட்டினான், அதில் கண்டதேவர் பற்றிய தகவல் பக்கம் இருந்தது, அவர் கடவுளுடன் பேசிய உரையாடல் இருந்தது, ர.ரா படித்தான், அவனால் அதை நம்பவே முடியவில்லை,

கண்டதேவரிடம் கடவுள் சொன்ன முதல் சொற்கள்…

//வந்தனம்… கடவுளைக் கண்டீரா?//

(முற்றும்)

எழுதியவர் : விசயநரசிம்மன் (2-Jul-15, 7:09 pm)
பார்வை : 840

மேலே