அந்த வெள்ளை காரும் என் அம்மாவும்

நிறுத்திவைக்கப்படிருந்த கார்களின் நடுவே அந்த கார் மட்டும் அழகாய் இருந்தது முருகனின் கண்களுக்கு .
"எப்பிடி சரி அம்மாகிட்ட ஐஞ்சு காசு வாங்கி இந்த கார நான் வாங்குவேன் பாறேன்." எட்டு வயது நிரம்பிய முருகன் ஆறு வயது நிரம்பிய தங்கை சுதாவிடம் கூறினான் .
"போ அண்ணா அன்னிக்கும் அப்பிடி தான் சொன்ன. எனக்கு கண்மூடுற பொம்மை வாங்கி தருவ என்று வாங்கி தரல. போ அண்ணா நீ பொய் சொல்ற"
"இல்ல சுதா இன்னிக்கு எப்படி சரி அம்மாகிட்ட பணம் வாங்குவேன் கார் வாங்குவேன்." உறுதியாய் சொன்னான் .

வீட்டு வாசலை நெருக்கும் போதே சட்டி பானை உருண்டது. சரி இன்னிக்கும் அப்பாக்கும் அம்மாக்கும் சண்டை .
"அண்ணா நாங்க வீட்டுக்கு போகாம இங்கயே இருப்போம்... இல்லாட்டி அப்பா அடிப்பாா் அண்ணா ."
"அதெல்லாம் அடிக்க மாட்டாங்க வா ."
"அம்மா அம்மா ..." இருவரும் ஒரே குரலில் அழைத்தனர் .
"எங்க வாங்க வாங்க அப்பாட செல்லங்கள் வாங்க "
அப்பன் என்னும் பெயரில் வாழும் வெத்து வேட்டு.
”எங்க இன்னிக்கு எவளவு கொண்டு வந்திங்க தாங்க கண்ணுங்களா”
”நாங்க பணம் கொண்டுவரல” முருகன் உரத்த குரலில் சொன்னான் .
”என்ன பணம் இல்லையா உன்ன என்ன செய்றேன் பாரு”
கையை தூக்கிய கணவன் முன் காளியாக நின்றாள் மனைவி .
”என் புள்ளமேல கைய வைச்ச அம்புட்டு தான் சொல்லிட்டேன் .
உன்னை கொன்னுட்டு சிறைக்கு போவேன்” ஏதோ கோவத்தில் வார்த்தைகள் கனலாய் பாய்ந்தது .
அவ்வளவு தான்
”இனி இருக்க மாட்டேன்டி உன்கூட இருக்கவே மாட்டேன். எனக்கு அவ தான் பொண்டாட்டி. நான் இனி அவகூட தான் இருப்பேன் .”
இதற்காகவே காத்திருந்த சந்திரன் .இந்த சண்டையை பெரிதாக்கி மனைவியையும் இரண்டு பிள்ளைகளையும் விட்டு ஏற்கனவே தொடர்பில் இருந்த திருட்டு மனைவிக்கு கணவனானான் .

”அம்மா ...” அழுதுகொண்டிருந்த அன்னையின் கண்ணீரை துடைத்து விட்டான் முருகன் .
”என்னால தானே அம்மா அப்பா போனாரு”
விம்மி வெடித்தவாறு அன்னையிடம் கேட்டான் .
”இல்லைடா செல்லம் அழாதடா என் கண்ணு தானே”
”அம்மா நானும் தங்கச்சியும் அப்பம் எல்லாம் வித்திட்டோம் .பணமும் கிடைச்சி இருக்கு அம்மா. இந்தாங்க .” அன்னையின் கையில் கிடைத்த பணத்தை திணித்தான்

முருகன் .
பக்கத்தில் இருக்கும் அரச பாடசாலையில் இரண்டாம் வகுப்பு மாணவன் .
பாடசாலை நாட்கள் தவிர மற்றைய நாட்களில் அம்மா சுடும் அப்பங்களை வீடு வீடாக சென்று வித்து வருவான்.
அப்பா குடிகாரன் அல்ல.சூதாட்டம் தான் அவர் தொழில் .இருந்தது எல்லாவற்றையும் வித்து சூதாடிய பின் மனைவியின் தாலியும் போய்விட்டது .அப்பிடிஇருந்தும் அவருக்கும் ஒரு கள்ளகாதல் .
அம்மா ஜெயந்தி ஒரு அப்பாவி .அவளின் தொழில் வீடு வீடாக சென்று மா இடிப்பது .பிள்ளைகள் பார்ப்பது .அப்பம்சுட்டு விற்பது .
இதில் தான் சாப்பாடு உடுப்பு படிப்பு எல்லாமே .

"அம்மா ..."
"ம்ம்ம் சொல்லும்மா ."
"எனக்கு ஐஞ்சு காசு குடும்மா ." சுதா அம்மாவிடம் கேட்டாள் .
”ஏன் டா கண்ணா பிள்ளைக்கு மிட்டாய் வேணுமா .??”
”இல்லமா .அண்ணாக்கு கார் வேணும். பாவம்மா அண்ணா .அந்த ரோடு கிட்ட கடையில நிறையா கார் இருக்குல அதுல அண்ணாக்கு அந்த வெள்ளை கார் வேணுமாம் .”
குழந்தை மழலை மொழியில் எதை கேட்கிறாள் என்பது ஜெயந்திக்கு நன்றாகவே புரிந்தது .
'அடக்கடவுளே...!!! முடியாது என்று சொன்னால் பிள்ளை துடித்து போவான். பணத்தை கொடுத்தால் விலையை கேட்டு பிள்ளை ஏமாந்து போவான் என்ன செய்வது .'

பிள்ளையின் மனம் நோகாமல் ஏதாவது செய்ய வேண்டும் ..
"என்னம்மா யோசிகிறீங்க ..? "
"ஒன்னும் இல்ல கண்ணா . இப்ப கார் வாங்கி குடுத்த அண்ணா எப்படி ஒட்டுவான் அது தான் யோசிச்சிக்கிட்டு இருக்கிறேன். அண்ணா பெரியாள ஆனா கார் வாங்கி குடுத்து நீ, நான், அண்ணா எல்லாரும் போகலாம்னு நினைச்சன் "
"அட ஆமால. நானும் அண்ணாவும் மறந்தே போய்டோம்" சுதா சினத்துக்கொண்டாள்.
"அண்ணா... அண்ணா... உனக்கு மூளையே இல்ல ."
"ஏன் சுதா அப்பிடி சொல்ற ."
"அப்புறம் என்ன...உன்னை விட கார் ரொம்ப ரொம்ப பெருசு. நீ எப்படி ஒட்டுவ.?
அம்மா சொன்னாங்க .நீ பெரியாள வந்த அப்புறம் உனக்கு அந்த வெள்ளை கார் வாங்கி தருவாங்களாம் .நாங்கலாம் உன்கூட கார் ல போகலாமாம் ."
"அய் அய் அப்போ நான் சீக்கிரம் பெரியவனா வரணும். பக்கத்து வீட்டு டாக்டர் மாமா மாதிாி நானும் கார்ல போவேனே” அண்ணனும் தங்கையும் துள்ளிக்குதித்தனர் .

காலம் யாருக்காகவும் காத்திருப்பதில்லையே. வேகமாக நகர்ந்தது .முருகன் படிப்பில் கெட்டிக்காரன் .இவனின் படிப்பை பார்த்த தலைமை ஆசிரியர் முருகனின் பள்ளி படிப்புக்கு தேவையானவைகளை செய்துகொண்டிருந்தார் .
எது எப்படி போனாலும் முருகனின் மனதில் வெள்ளைக்கார் அழியாமல் இருந்தது .
பள்ளி பின் அம்மாவிற்கு உதவி என்று ஓடிக்கொண்டிருந்தான். ஒவ்வொரு வகுப்பிலும் முதல் மாணவன் முருகன் தான். பள்ளி படிப்பு முடிவிற்கு வர கல்லூரி படிப்பு .

அவனின் கனவு வைத்தியர் ஆவது .ஆனால் மருத்துவ கல்லூரியில் வெறும் பெறுபேறுகளை மட்டும் வைத்து நுழைய முடியாது என்பதை உணர்ந்திருந்தான். வேறு எந்த துறையிலும் நாட்டம் இல்லாததால் .”அம்மா இனி நான் படிக்கல.வேலைக்கு போறேன். நீங்க வீட்ல இருங்க ..”
தாய் ஜெயந்திக்கு தூக்கிவாரி போட்டது .
”என்னாச்சி கண்ணா .? மகனின் தலையை வருடி விட்டபடி கேட்டாள்
ஜெயந்தி .
”இல்லம்மா .எனக்கு மருத்துவ கல்லூரி தான் போகணும் .அதுக்கு நிறைய செலவாகும் .நமக்கு அது சரி வாராதுமா. அதான் படிப்பு போதும் .இனி தங்கச்சிய நல்லா படிக்க வைக்கிறான் அம்மா .”
”அட செல்லமே இவ்வளவு தானா .? நானும் வேற என்னமோ என்று பயந்திட்டன். நீ விண்ணப்பம் போடு நான் பணம் தாறேன் ”
”உங்களுக்கு எப்படி அம்மா பணம் .?”
”நான் எப்படி சரி தறேன் கவலைய விடு .நீ படி”

அட... அம்மா சொன்னது போலவே பணமும் கிடைத்தது. முருகனுக்கு மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்தது . படிப்போடு பார்ட் டைம் வேலையும் செய்த்தான் .

நான்கு வருடங்கள் நாட்கள் போல் கழிந்தது .
முருகன் படிப்பை முடித்து மருத்துவர் ஆனான் .
அந்த வெள்ளைக்கார் ம்ம்ம் இன்னும் மறக்கவில்லை
இப்போது புது .புது ரகங்களில் வெள்ளை கார்கள் இருந்தாலும் அந்த முதல் மனதை வருடிய அந்த கார் ..
எப்படியும் அந்த காரை ஆசைக்கு சரி வாங்கணும் .அம்மா தங்கச்சி கூட சந்தோசமா அவங்கள பார்த்துக்கணும். அதிக கற்பனையோடு வீட்டை நெருங்கியவனுக்கு வாசலில் நின்ற கூட்டத்தை கண்டதும் எதோ விபரிதம் நிகழ்ந்திருப்பதாக உணர்ந்தான் .

முருகனை கண்டதும் சுதா கதறினாள்.
”அண்ணா அண்ணா... அம்மா ....அம்மா ..”
”என்னாச்சிமா என்ன ஆச்சி” பதைபதைக்கும் மனதோடு தங்கையிடம் வினவியவாறு அம்மாவை தேடினான் .

அங்க அவன் கண்டது ....
”அம்மா.....!!!”
ஆண்மகன் என்பதை மறந்து வானம் வெடிக்கும் அளவிற்கு கதறி அழுதான் .
ஆம் அங்கே ஜெயந்தி பிணமாய் கிடந்தாள்.
பொழுது புலர்கையில் சூரியனை பறித்தது யார் .?
அழுது பிறண்டான்.
”இனி என்ன செய்வேன் கடவுளே. அம்மாவிற்கு என்னாயிற்று .?” பக்கத்து வீட்டு டாக்டர் மாமாவிடம் கேட்டான்.
மாமா சொன்னதை கேட்டதும் அப்படியே தலையில் கை வைத்து அமர்ந்து விட்டான்.
ஆம் முருகனின் படிப்பு ஜெயந்தியின் கிட்னியில் தான் முடிந்தது .
முருகனின் படிப்பிற்காய் ஒரு கிட்னியை விற்று இருந்த ஜெயந்தியின் மறு கிட்னியும் பாதிப்படையவே இந்த மரணம் நிகழ்ந்து இருந்தது .

அம்மா........அம்மா.....

இதுவரை பிள்ளைகளுக்காக எல்லா வலியையும் புன்னகையோடு சுமந்த அன்னையை அதே அதே வெள்ளைக்கார் சுமந்துகொண்டு சென்றது ....
இறுதி ஊர்வலமாக .

முற்றும் .

எழுதியவர் : கயல்விழி (2-Jul-15, 3:00 pm)
பார்வை : 6433

மேலே