விருந்தாக மாறிய பட்டினி விரதம்

ஒரு வெயில் நிறைந்த காலைப் பொழுதில், நாற்பது வயதுள்ள ஒருவர், ஒரு சிறிய தோளில் பையுடன் மிகவும் பசியுடன், ஒரு கிராமத்தில் மெதுவாக நடந்து கொண்டிருந்தார். அவரிடம் பணம் இருந்தது. ஆனால் அங்கு கண்ணில் பட்ட இரண்டு சிறிய ஹோடேல்களுமே மூடப்பட்டிருந்தது.
இந்த மனிதர் 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு இடத்திற்கு பஸ்ஸில் பயணம் செய்துகொண்டிருந்தார். ஆனால் கவனக்குறைவாக இந்த கிராமத்தில் பேருந்திலிருந்து கீழே இறங்கிவிட்டார். அந்த கிராமத்தை கடந்து தான் சேருமிடத்திற்கு செல்லும் அடுத்த பேருந்து மாலை 6.30 மணியளவில் வரலாம் என்று உள்ளூர் ஒருவரிடமிருந்து அவர் அறிந்தார்.

20 முதல் 25 குடிசைகளை அவர் பார்த்தாலும் ஒரு மனிதரை கூட அவரால் பார்க்க முடியவில்லை. ஏதாவது குடிசைக்குச் சென்று விசாரிக்கலாமா என்று நினைத்தபோது, அவருக்கு கொஞ்சம் சங்கடமாக இருந்ததால் விசாரிக்காமல் நடையை தொடர்ந்தார். அவரது முழங்கால் மூட்டுகளில் வலி காரணமாக, அவர் அதிக தூரம் நடக்க கடினமாக இருந்தது. அந்த நேரத்தில் ஒரு சில கிராமவாசிகள் அவரை கவனித்தனர். கிராமத்திற்கு புதியவர் ஒருவர் இலக்கு இல்லாமல் நடப்பதை அவர்கள் உணர்ந்தனர்.

கடும் வெயிலின் காரணமாக அவருக்கு மிகுந்த தாகம் ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக, அவர் அருகில் ஒரு சிறிய நீர்க் குளத்தைக் கண்டார், அதன் சுகாதாரத்தைப் பற்றி கவலைப்படாமல், அதில் இருந்து வெறும் கைகளால் தண்ணீரை எடுத்து குடித்தார். பருகிய பிறகு, அவர் தண்ணீர் அவ்வளவு சுத்தமாக இல்லை என்பதை உணர்ந்தார். அதில் ஏதோ ஒருவித வாசனையும் இருப்பதை அவர் உணர்ந்தார்.

அவர் ஒரு மரத்தடியில் அமர்ந்தார், அது அவருக்கு வெப்பத்திலிருந்து சிறிது நிவாரணம் அளித்தது. ஆனால் சிறிது நேரத்தில் பசி எடுக்க ஆரம்பித்தது. மீண்டும் நடக்க ஆரம்பித்தார். ஐந்து நிமிடங்களில் அவரால் மேலும் நடக்க முடியவில்லை. அந்த நேரத்தில், அவர் கடவுளிடம் " அப்பா , எனக்கு கொஞ்சம் கருணை கட்டப்பா" என்று பிரார்த்தனை செய்தார். நிழல் இருந்த ஒரு ஆலமரத்தடியில் படுத்துக்கொண்டு கண்களை மூட முயன்றார். ஆனால் சிறுகுடலில் ஏற்பட்ட வலியால் அவரால் ஓய்வெடுக்க முடியவில்லை. அவர் தனது உணவை சரியான நேரத்தில் எடுத்துக்கொள்வது வழக்கம். அவரின் பொறுமை குறைய ஆரம்பித்துக் கொண்டிருந்தது. மதியம் 1 மணி ஆகியிருந்தது, அவர் கிட்டத்தட்ட மயக்கமடைந்தார்.

இந்த நேரத்தில், நான்கு பேர் தன்னை நெருங்குவதைக் கண்டார். மிகவும் சிரமப்பட்டு எழுந்து உட்கார்ந்து கொண்டார். அந்த நான்கு பேர்களில் ஒருவர் பணிவான குரலில் " ஐயா, தாங்கள் எனது வீட்டிற்கு வந்து உணவு அருந்துங்கள்" பணிவோடு அழைத்தார். இன்னொரு கிராமவாசி இதேபோன்ற கோரிக்கையை விடுத்து, மதிய உணவுக்கு அவரது வீட்டிற்கு வரும்படி அவரை அழைத்தார். மூன்றாவது நபரும் அதே கோரிக்கையை அவரிடம் வைத்தார். பசியால் துடிக்கும் மனிதர் அது கனவல்லவே என்று ஊர்ஜிதம் செய்துகொள்ள கண்ணை சிமிட்டினார்.

அன்றைய தினம், கிராமத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தாரும் காலை நேரத்தில் ஒரு சடங்கு செய்வதையும், அந்த நேரத்தில் அனைத்து வெளிப்புற நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டதையும் இந்த மக்களிடமிருந்து அவர் அறிந்து கொண்டார். பசியால் வாடியவர் அந்த நால்வரில் ஒப்பீட்டளவில் வயதானவரைத் தேர்ந்தெடுத்து அவருடன் அவரது வீட்டிற்குச் சென்றார். அங்கு அவரது குடும்ப உறுப்பினர்கள் அவரை கைகூப்பி வரவேற்றனர். அடுத்த ஐந்தாவது நிமிடம் அவருக்கு பல்சுவை சைவ விருந்து அளிக்கப்பட்டது. பாயாசமும் வேறு இரண்டு வகை இனிப்புகளும் பரிமாறப்பட்டது. நம் நண்பர் இயல்பாகவே சைவ உணவு உண்பவர் என்பதால், வழங்கப்பட்ட மதிய உணவு அவருக்கு ஒரு வரப்பிரசாதமாக இருந்தது.

அவர் மதிய உணவை முடித்த போது மதியம் 2 மணி ஆகியிருந்தது. அவர்களுக்கு நன்றி கூறிவிட்டு வெளியேறத் தொடங்கியபோது, ​​​​முதியவர் அவரை தங்கள் வீட்டில் சிறிது நேரம் ஓய்வெடுத்துக்கொண்டு செல்லுமாறு கேட்டுக் கொண்டார். நம்மவருக்கு தென்னை நார்களால் ஆன ஒரு சிறிய கட்டில் போடப்பட்டு ஒரு தலையணையும் இடப்பட்டது. அவர் மகிழ்ச்சியுடன் படுத்து, வெயில் மற்றும் களைப்பு காரணமாக நன்றாகவே தூங்கிவிட்டார்.

மாலை 5 மணியளவில் அவருக்கு சூடான தேநீர் மற்றும் சிற்றுண்டி வழங்கப்பட்டது. பின்னர் அவருக்கு நிறைய தின்பண்டங்கள் கொண்ட பொட்டலங்கள் வழங்கப்பட்டது. விருந்தினர் பதிலுக்கு, ரூ.500/-ஐ எடுத்து விருந்தாளிக்கு வழங்கினார், அன்றைய சடங்கின் வழக்கத்தின் அடிப்படையில், முதியவர் அதை பணிவுடன் மறுத்துவிட்டார்.

இதையடுத்து, அந்த குடும்பத்து மக்கள் அவரை கிராமத்தில் உள்ள சிறிய கோவிலை சுற்றி காண்பித்தனர். நம்மவர் கோவில் காணிக்கை பெட்டியில், 500 ரூபாய் நோட்டை போட்டுவிட்டு "இந்த கிராமமும் கிராம மக்களும் என்றும் வளமுடனும் நலமுடனும் வாழவேண்டும்" என்று பிரார்த்தனை செய்தார்.

அவர் செல்லவேண்டிய இடத்திற்கான பேருந்து மாலை 6.45 மணியளவில் அவரது விருந்தினரின் வீட்டிற்கு முன்னால் வந்து நின்றது. நம்மவர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். முதியவர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு மிகுந்த நன்றியைத் தெரிவித்தார். " நான் கூடிய விரைவில் உங்களை மீண்டும் சந்திப்பேன்" என்று சொல்லிவிட்டு பேருந்தில் ஏறி அமர்ந்து கொண்டார்.

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (26-Apr-24, 6:44 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 27

மேலே