ஒரு பின்னோக்கிய பயணம்

(சுபியிச மகான் ஹஸ்ரத் இனாயத் கான் அவர்களது ஆன்மீக உபதேசங்களில் படித்த கருத்துகளின் ஈர்ப்பினால் எழுந்த சிந்தனைகள் வேறொரு கோணத்தில்..எனது பார்வையில் )


பட்டறிவும் பகுத்தறிவும்
எய்தியதோர் நிலை வந்த பின்னே
சற்றே ஒய்வு கொள்க..
திரும்புக..

இளமை மீண்டும் மனதில் வரும்
இனிமையும் குதூகலமும்
சேர்ந்து வரும்..
செயல்களில் பிடித்தம் கூடிடும்..
புதியன கற்றிட .
நட்பு வட்டமும் பெருகிடும்..
இளமை திரும்பிடும்!

இன்னும் முன்னேற..
பால்யம் நுழையலாம்..
பாகுபாடுகள் மறக்கலாம்..
பண்புகள் கூட்டலாம்
பசி அறியலாம்..
பாலகராய் மாறிடும் வேளை!

அங்கிருந்து தத்தி தத்தி
குழந்தையின் நிலை அடையலாம்..
மற்றவர் மகிழ்ச்சி கண்டு..
மனம் விட்டு சிரிக்கலாம்.. !
.
பிறர் துன்பம் சகியாது..
கண்ணீர் உகுக்கலாம்..

இரண்டிலும் உண்மையாய்..

வெட்கங்கள் ஏதுமின்றி ..
குழந்தையாய் மாறலாம்!

இப்படியெல்லாம் மாறி மாறி
மனிதனாய் ..மாறலாம்..
சமத்துவம் காணலாம்
மனிதம் தழைக்க வாழலாம்..
மனிதனாய் ..உண்மையில் மாறலாம் ..

பிறகும் கூட..
முடிவதில்லை இப்பயணம்..
மிருகமாய் மாறலாம்..
ஆம்.. வலிமையுடன்
யானையாய்..
பிறர் சுமை ஏற்கலாம்..
பசித்தோருக்கு பால் தரும்
பசுவாக மாறலாம்..
நம்மால் பிற மனிதர் பயனுறலாம்..

அதோடு மட்டுமில்லை..
காய்கறிகள், செடிகொடிகளாய்..
மாறிடும் நிலை அடையலாம்..
அப்போது..
பிரதிபலன் எதிர் பாராது
வண்ணங்களால் பிறரை மகிழ்விக்கும்
மலர்களாகலாம்..
தேவையான ஊட்டச்சத்து
தரும் காய் கனிகள் ஆகலாம்..

இன்னும் பக்குவப்பட..
இரும்பு போன்ற தாதுக்களாய்..
பாறையாய் மாறலாம்..
சஞ்சலங்கள் சலனங்கள் எதுவுமற்ற
சஞ்சீவியாய் மாறலாம்..

அப்புறம் என்ன..
அத்துணை உயிர்களுக்கும்
அன்பையே தந்திடலாம்..
அரு மருந்தாய்
அனைவர்க்கும் உபயோகமாகும்
அற்புத ஜீவனாகலாம்..

பின்னோக்கி செல்லும்
இப்பயணத்தில்
எண்ணிட முடியாத
பிறவியின் பயனை
யாவரும் பெறலாம் !

இதை ஆன்மிகம் என்றும்
சொல்லலாம்..
அல்லது ..
நல்லதொரு பயணம்
என்றும் கொள்ளலாம்!

எழுதியவர் : கருணா (3-Jul-15, 3:41 pm)
பார்வை : 533

மேலே